April

ஏப்ரல் 30

ஏப்ரல் 30

பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36)

நமக்கு வரும் தோல்விகள் தேவனால் நமக்கு அளிக்கப்படுபவைகள்தான். தேவன் தாமதிக்கிறதினால் நமக்குத் தரமாட்டார் என்பது பொருளல்ல என்று நமக்குப் பலர் எடுத்துக் கூறியும் நாம் இதை நம்புகிறோமா? தாமதம் ஏற்படும்போது நம்பிக்கை இழந்துவிடுகிறோம். இது தேவனுடைய பிள்ளைகளுக்கென அளிக்கப்படும் பயிற்சி என உணரவேண்டும். நாம் அவசரமான, சுறுசுறுப்பான ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், ஆர்வத்தோடும், மனத்திறமைகளோடும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். இப்படிப்பட்ட நமக்கு சோர்வு, பலவீனம், களைப்பு, பிரயோஜனமில்லாத வாழ்வு ஏன் வந்தது என்று கேள்வி கேட்பது இயல்பு.

தேவனுடைய பிள்கைள் யாவருடைய வாழ்விலும் இவ்விதமான தாமதங்கள் வருவது சகஜம். வாக்களிக்கப்பட்ட மகனுக்கென ஆபிரகாம் நெடுங்காலம் காத்திருந்தான். எகிப்தில் யோசேப்பு கொடிய பல அனுபவங்களால் நசுக்கப்பட்டான். மோசே வனாந்தரத்தில் தனிமையை அனுபவிக்க நேர்ந்தது. அன்னாள் வேதனையுள்ள இருதயத்தோடு, வெறுமையான வீட்டில் தரித்திருந்தாள். ஆம், நமது ஆண்டவராகிய இயேசுவும்கூட அமைதியாக தன் வாழ்வை நாசரேத்தூர் தெருக்களில் கழித்தாரல்லவா?

உங்கள் வாழ்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதா? வேலையின்றி, பலத்தைக் காட்ட இயலாமல் பலவீனனாக இருக்க வேண்டியுள்ளதா? பேசவேண்டிய வேளையில் பேசாமலிருக்கும் நிலையா? நண்பர்களின்றி தனித்து விடப்பட்ட நிலையா? தாமதம் என்ற இருள் உனக்குப் பாடம் கற்பிக்கட்டும். பொறுமையுடனிருந்து பரிசுத்தவான்களுக்குத் தேவன் வாக்களித்த பலனைப் பெற்றுக்கொள். அவர் உன்னைக் காக்க உண்மையுள்ளவர். கைவிடார். தேவனுடைய வேளையில் ஏற்றமுறையில் இந்தத் தாமதம் நம்மைப் பலப்படுத்தி, அவரது ஊழியத்திற்கென நம் கால்களைத் துரிதமாக்கி உற்சாகத்துடன் ஈடுபடச் செய்யும் என்பது திண்ணம்.