April

ஏப்ரல் 23

ஏப்ரல் 23

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும்…. ஜனமும் பாக்கியமுள்ளது (சங்.33:12).

யோசபாத் பாக்கியவான். ஏனெனில் அவன் தன் தகப்பனுடைய தேவனைத் தேடி….. அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்ய பாரத்தைத் திடப்படுத்தினார். யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள். அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது (2.நாளா.17:4-5).

யோசியாவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் முழு இருதயத்தோடும் தேவனிடம் திரும்பினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டுப் பின்வாங்கினதில்லை. (2.நாளா.34:33). யூதேயா, கல்தேயரால் அழிக்கப்படும் முன்பு யோசியாவின் காலத்தில் ஒளி வீசிற்று. யோசியாவிற்குப் பின்பு யூதேயாவை எந்தப் பக்தியுள்ள அரசனும் ஆண்டதில்லை.

யூதேயாவை ஆண்ட அரசர்களுள் மிகச் சிறந்தவனாக எசேக்கியா அரசன் கருதப்படுகிறான். அவன் தன் ராஜ்ய பாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆயலத்தின் கதவுகளைத் திறந்து அவைகளைப் பழுது பார்த்தான் (2.நாளா.29:3). அவன் நன்மையும் செம்மையும், உண்மையுமானதைச் செய்தான் (2.நாளா.31:20). யூதேயாவைக் கைப்பற்றுவதற்கென சனகெரீப் என்ற அரசன் படையெடுத்து வந்தான். இது எசேக்கியா இராஜாவின் காலத்தில் உயிர்மீட்சி ஏற்பட்டபோது நடைபெற்றது. ஆகவே அரசனும் அவனது குடிகளும் தேவனுடைய நாமத்தினால் எதிரியை எதிர்த்து நின்று வெற்றி கண்டனர். அவர் தங்களைக் கைவிடவில்லை என்று அறிந்துகொண்டனர்.

நீதி ஜனத்தை உயர்த்தும். பாவமோ எந்த ஐனத்துக்கும் இகழ்ச்சி (நீதி.14:34) என தேவன் கூறினார். கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதி பாக்கியமுள்ளது. நமக்கும் இப்படிப்பட்ட பாக்கியம் கிட்ட வேண்டுமாயின் மனந்திரும்ப வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பயபக்தியுடன் அவரிடம் திரும்புவோம்.