April

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

காணாதிருந்து விசுவாசிக்கிறவன் பாக்கியவான்கள் (யோ.20:29)

ஆண்டவர் இயேசு தன் கால்களைக் கழுவ வந்தபோது அவர் ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதாகப் பேதுருவுக்குத் தோன்றியது. ஆகவே அவன் தடுத்தான். இயேசு அவனிடம், நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். அவர் தமக்குச் சித்தமானபடி செய்ய, நாம் அனுமதிப்பதையே விசுவாசத்தில் நடப்பது எனக் கூறுகிறோம். நல்லது எது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் நம்புவதைத்தான் விசவாசம் என்று கூறலாம்.

துக்க வேளையில் உன்னால் அவரை நம்பமுடிகிறதா? தாமதம், துக்கம் என்னும் மரங்களினூடே மகிழ்ச்சி பிரகாசிக்கும். இதை நம் ஆண்டவர் நமக்கு இப்பொழுது விளக்கிக் கூறமாட்டார். ஆனால் இதைப்பற்றி அவரில் நம்பிக்கை வைக்கிற மனுஷன் அறிந்துகொள்ள முடியும். மழைக்குப்பின் தெளிவான வானத்தைக் காணலாம். இதுபோன்று தன் வாழ்வில் ஒன்பதாவது அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்பு ஒரு பெண் அனுபவித்தாள். அவள் படுக்கையில் இருக்கும்போது ப்ரெயில் என்கிற குருடர் தடவிப் படிக்கும் புத்தகத்தைப் படித்தாள். இதன்மூலம் தேவன் அவள் குருடருக்கு எவ்விதமாக உதவி செய்ய முடியும் என்பதைத் தெளிவாகக் காண்பித்தார்.

கட்சன் டெய்லர் என்ற ஊழியருக்கு ஜார்ஜ் முல்லர் என்கிற விசுவாச வீரர் எழுதிய கடிதம் நமக்கு இதையே எடுத்துரைக்கிறது. நான் அவருக்குள் நினைவுகூறுகிறேன். அவரையே நோக்குகிறேன். அவரையே சார்ந்திருக்கிறேன். அதுபோல நீயும் அவருக்குள் நடந்தால், அவரையே நோக்கிப் பார்த்தால் அவரிடமிருந்து மட்டுமே உதவியை எதிர்நோக்கிக்கொண்டிருந்தால் அவர் உன்னை என்றுமே கைவிடமாட்டார் என்று நான் உறுதி கூறமுடியும். கடந்த நாற்பது ஆண்டுகளாக கர்த்தரை நன்கு அறிந்து கொண்டதாலும், வயதில் உன்னைவிட முதிர்ந்த சகோதரனாக இருப்பதாலும் நான் இவற்றை உனக்கு எழுதியுள்ளேன். அவர் உன்னை ஒருபோதும் கைவிடவேமாட்டார் என்று உறுதி. பெரிய இக்கட்டுகளிலும், மிகுந்த சோதனையிலும், கொடிய தரித்திரத்திலும், நெருக்கப்படும் தேவைகளின் மத்தியிலும் அவர் என்னைக் கைவிட்டதேயில்லை. ஏனெனில் நான் அவரை நம்புவதற்குரிய கிருபையைப் பெற்றிருந்தேன். அவர் எனக்கு உதவிசெய்ய எப்பொழுதும் ஆயத்தமாக என் எதிரே இருக்கிறார் என்று எழுதியுள்ளார். நம் வாழ்க்கை இப்படியிருக்கிறதா?