January

பிறருக்காகவும் வாழ்வோம்

2024 ஜனவரி 19 வேத பகுதி (2 சாமுவேல் 7,4 முதல் 7 வரை)

  • January 19
❚❚

“அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி…” (வசனம் 4).

“கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்” (சங்கீதம் 119 ,55) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அந்த இரவில் நாத்தானுக்கு கூடுதல் வெளிச்சம் கிடைத்தது. கர்த்தர் அவனோடு பேசினார். தான் இதுவரை பேசினதற்கு மாற்றாகக் கர்த்தர் பேசுவதைக் கேட்கிற அளவுக்குத் திறந்த செவியும் கீழ்ப்படிதலுள்ள இருதயமும் அவனுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான் பேசியது பேசியதே, அதை நான் மாற்ற மாட்டேன் என பிடிவாதம் பண்ணவில்லை. கர்த்தர் பகலில் மட்டுமன்று இரவிலும் நம்மோடு பேசுகிறவர். “நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்” என்ற வார்த்தைகள் தாவீதுக்கு மட்டுமின்றி, நாத்தான் தீர்க்கதரிசியின் வாழ்க்கையிலும் உண்மையாயின. தாவீதும் நாத்தானும் கர்த்தருக்கு முன்பாக திறந்த உள்ளத்தோடு இருந்தார்கள், அவர்கள் மனம் கர்த்தரைக் குறித்து நல்ல வாஞ்சையோடு இருந்தது. எனவே கர்த்தர் தன்னுடைய சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களுடைய தவறை உணர்த்தினார்.

இந்தக் காரியத்தில் நாத்தான் சற்று அவசரப்பட்டார் என்றே கூறவேண்டும். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தும், தன் எஜமானனாகிய கர்த்தரிடம் விசாரியாமல், பொது அறிவுக்கும், மனித பார்வைக்கும் நலமானபடி ஆலயத்தைக் கட்டிக்கொள் என்று அவன் தாவீதிடம் கூறினான். இதுபோன்றே நாமும் நம்முடைய அனுபவங்களின்படி செயல்பட்டு கர்த்தருடைய சித்தத்தைத் தேட மறந்துவிடுகிறோம். நம்முடைய ஆசைகளும் விருப்பங்களும் புனிதமானவையாக இருந்தாலும் அவை கர்த்தருடைய சித்தம் என்னும் தேர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். நம்முடைய சிறந்த வேலைகூட கர்த்தருடைய கட்டளைக்கு மீறி நடைபெறக்கூடாது என்பதில் கவனமாயிருக்க வேண்டும். ஆயினும் தாவீது கொண்டிருந்த உயரியதும் பெரியதுமான நோக்கத்தை தேவன் கனப்படுத்த விரும்பினார். ஆலயம் கட்ட வேண்டும் என்னும் நோக்கத்தை ஏற்றுக்கொண்டார், ஆயினும் அதை நீ கட்ட வேண்டாம் என்று அவனுடைய கோரிக்கையை நிராகரித்தார். ஆகவே நாம் சிறிய காரியத்தை செய்வதில் திருப்தியடையாமல் தாவீதைப் போல பெரிய நோக்கத்தை அவருடைய சித்தத்துக்கு உட்பட்டு செய்ய முற்படுவோம்.

தான் ஆலயம் கட்டுவது கர்த்தருக்குப் பிரியமன்று என்பதை தாவீது உணர்ந்தான். ஆயினும் தன் மகன் சாலொமோன் கட்டுவதற்குரிய எல்லா ஆயத்தங்களையும் செய்தான். அதற்காக மிகுதியான பொருட் செல்வங்களைச் சேகரித்துவைத்தான் (காண்க: 1 நாளாகமம் 29,2 முதல் 9). சாலொமோன் ஆலயத்தை கட்டுவது சுலபமான முறையில் நிறைவேறியது. தாவீது கர்த்தருடைய வார்த்தையினிமித்தம் சோர்ந்துபோகவில்லை, மாறாக அதை நேர்மறையான விதத்தில் எடுத்துக்கொண்டான். நாம் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனாலோ, நம்முடைய விருப்பம் நிறைவேறாவிட்டாலோ சோர்ந்துபோய் விரக்தியில் உட்கார்ந்துவிட வேண்டாம். நாம் எழுந்து மற்றவர்கள் சாதிப்பதற்காக நம்மைத் திடப்படுத்திக்கொண்டு உழைப்போம். நமக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லையெனில் யாருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறதோ அவர்களுக்கு நம்முடைய கரத்தை நீட்டுவோம். “நாம் சுரங்கத்தில் இறங்கவில்லை எனில், இறங்குகிறவர்களுக்கு கயிற்றைப் பிடித்துக்கொள்வோம்” என்று திருவாளர் மேயர் சொன்னது போல செயல்படுவோம். அப்பொழுது அது மெய்யாகவே கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவரும்.