January

தாவீதுடன் உடன்படிக்கை

2024 ஜனவரி 20 வேதபகுதி (2 சாமுவேல் 7,8 முதல் 16 வரை)

  • January 20
❚❚

“அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” (வசனம் 13).

நீ எனக்கு ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று விருப்பப்படுகிறாய். இது நல்ல காரியம்தான். ஆயினும் நான் ஒருபோதும் அவ்வாறு கேட்கவில்லையே? உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வந்த நாள் முதல் நான் கூடாரங்களில் வாசம்செய்வதையே தெரிந்துகொண்டேன். எகிப்திய கடவுள்களைப் போல நான் மாடமாளிகைகளிலும் கோபுரங்களிலும் இருப்பதைத் தெரிந்து கொள்ளவில்லை. நான் உங்களுடன் ஒருவராக, உங்கள் நடுவில் வாசம்பண்ணுகிறவராக, உங்களுக்கு முன்பாக வழிகாட்டியாகப் பயணிக்கிறவராக இருப்பதையே தெரிந்துகொண்டேன் என்று கர்த்தர் நாத்தான் மூலமாக தாவீதுக்குத் தெரியப்படுத்தினார். கர்த்தர் தம் மக்களின் நடுவில் தாழ்மையுடன் இருப்பதையே ஆசித்தார். “அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்” என கிறிஸ்துவைக் குறித்து அப்போஸ்தலன் யோவான் (1,14) கூறி, அவருடைய தாழ்மையின் முதலாவது வருகையை நமக்கு நினைவூட்டுகிறார்.

கர்த்தர் கிருபை நிறைந்தவராய் இருக்கிறார் என்பதற்காக அடுத்த நினைவூட்டல் தாவீதுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களாகும். ஆடுகளின் பின்னே அலைந்தவனை அரசனாக்கினார். அனைத்து எதிரிகளின் கையிலிருந்தும் காப்பாற்றினார். இஸ்ரவேல் மக்களுக்கு என்று ஒரு நிலையான நாட்டை கொடுத்தார். கர்த்தர் இன்றைய காலகட்டத்திலும் இவ்விதமான கிருபையுடன் நடந்துகொள்கிறார்.  பாவிகளாகவும் அக்கிரமக்காரர்களாகவும் அலைந்துதிரிந்த நமக்கு நித்திய இரட்சிப்பை அருளி, நம்மை ஆசாரியர்களாகவும் அரசர்களாகவும் ஆக்கியிருக்கிறார் என்பது அவருடைய மாபெரும் அருட்கொடையே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தாவீது கர்த்தருக்கு ஒரு வீட்டைக் கட்டுவேன் என்று எண்ணினான், ஆனால் அவரோ உனக்கு முதலாவது ஒரு வீட்டைக் கட்டுவேன் என்று விளம்பினார். நம்முடைய எண்ணங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் அப்பாற்பட்டு காரியங்களைச் செய்கிறவர் நம்முடைய கர்த்தர். “அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்” (சங்கீதம் 21,4) என்பதாகவே அவருடைய செயல்கள் இருக்கின்றன.

கர்த்தர் தாவீதுக்கு உரைத்தபடியே அவனை ராஜாவாக்கினார். அதுமட்டுமின்றி கிறிஸ்துவுக்குள் இந்த உலகம் அடையும் மாபெரும் ஆசீர்வாதத்திற்கான வாய்க்காலாக தாவீதைப் பார்த்தார். இன்றைக்கு அந்தக் கிறிஸ்துவினால் வந்த ஆசீர்வாதத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தாவீதுக்கு அவர் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என்பதைக் காண்கிறோம். இந்தக் கர்த்தர் நமக்கும் உண்மையுள்ளவராக இருக்கிறார். ஆகவே நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து நாம் ஒருபோதும் கலங்க வேண்டாம். நம்முடைய முழுப் பெலத்தோடும், திறமையோடும் கர்த்தருக்காக உழைப்போம். அப்பொழுது நம்முடைய காரியங்களை அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார். நான் கர்த்தரை நம்பினேன் அவர் என்னைச் சிறுமைப்படுத்தினார் என்று ஒரு மனிதனும் சொல்லமுடியாது, அவ்வாறே நான் மனிதனை நம்பினேன் கர்த்தர் தருகிறதைக் காட்டிலும் அதிகமான நன்மையை அடைந்தேன் என்றும் ஒரு மனிதனும் சொல்லமுடியாது. அவருடைய நன்மையும் கிருபையுமே நம்மை எப்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆகவே எப்பொழுதும் அவர்மேல் நம்முடைய முழு நம்பிக்கையை வைப்போம்.