January

கர்த்தர் வசிக்கிற இருதயம்

2024 ஜனவரி 18 வேத பகுதி (2 சாமுவேல் 7,1 முதல் 3 வரை)

  • January 18
❚❚

“ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்” (வசனம் 2).

“ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (16,7) என்ற நீதிமொழிக்கு ஏற்ப, கர்த்தர் தாவீது ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினார். தாவீது கேதுரு மரங்களால் கட்டப்பட்ட வீட்டில் மகிழ்ச்சியுடன் வசித்தாலும் அவன் மனம் கர்த்தருடைய பெட்டியின்மீது இருந்தது. கர்த்தருடைய மகிமை நிறைந்த உடன்படிக்கைப் பெட்டி இன்னும் கூடாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறதே என்ற கவலை அவனை ஆட்கொண்டது. சுற்றிலும் எவ்விதப் பிரச்சினையும், உள்ளுக்குள் எவ்விதக் கவலைகளும் இல்லாதபோது, தாவீது கர்த்தரைப் பற்றி நினைத்தான். இந்த நவீன உலகத்தில் பல்வேறு வசதி வாய்ப்புகளுடன் நாம் வாழ்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தரை மறந்துபோகாதபடி ஆராதிக்கும்படியாக கூடிவருகிற கட்டடத்தைக் குறித்தும், அதை மேன்மைப்படுத்துகிற விதத்தைக் குறித்தும் நாம் எந்த அளவுக்கு கரிசனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை சிந்திப்போமாக! நாம் எப்பொழுதும் நம்மைக் குறித்து அதிகமாகச் சிந்திப்பதற்குப் பதில் கர்த்தரைக் குறித்து சிந்திப்பது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

தாவீது நாத்தான் என்னும் தீர்க்கதரிசியுடன் நட்புக்கொண்டிருந்தான். நாட்டைக் குறித்த சிந்தை, வீட்டைக் குறித்த எண்ணம், போர்கள் பற்றிய ஆலோசனை இவை எல்லாவற்றின் நடுவிலும் ஒரு கர்த்தருடைய மனிதனோடு நெருங்கிப் பழகவும், ஐக்கியங்கொள்ளவும், ஆலோசனை கேட்கவும் அவனுக்கு நேரம் இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் அலுவல் மிகுதியால் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆயினும் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், கர்த்தரைப் பற்றி உரையாடி ஆவிக்குரிய காரியங்களில் கவனம் செலுத்தவும் ஏதாவது ஒரு கர்த்தருடைய மனிதனுடன் நமக்கு ஐக்கியம் இருக்கிறதா? நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு நபர் இருக்கிறாரா?

தாவீது நாத்தானிடம் கர்த்தருக்கு ஓர் ஆலயம் கட்டுவதைப் பற்றி ஆலோசனை கேட்டான். கர்த்தர் உன்னோடு இருக்கிறார், ஆகவே நீ செய்வதெல்லாவற்றையும் அவர் ஆமோதிப்பார் என்று அவன் கூறினான். ஆனால் கர்த்தருடைய எண்ணமோ வேறு விதமாக இருந்தது. இந்தக் காரியத்தில் நாத்தானுக்கு கர்த்தருடைய எண்ணங்கள் தெரியவில்லை. நம்மிடமும் யாராவது ஆலோசனை கேட்டால் முதலாவது அதைக் குறித்து ஜெபிக்காமலோ, கர்த்தருடைய சமூகத்தில் காத்திராமலோ அவசரப்பட்டு எவ்வித ஆலோசனையும் கூறவேண்டாம். நாம் நாத்தானைப் போல கர்த்தருடைய தாசர்களாக இருக்கலாம், ஆனால் தேவனுடைய உள்ளத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாக இருக்க முடியும். ஆகவே நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையைக் குறித்தும் கவனமுள்ளவர்களாக இருப்போம். அது ஒருவரை தவறான வழியில் நடக்கச் செய்துவிட முடியும். எத்தனை பெரிய  ஆவிக்குரிய மக்களாக இருந்தாலும் அவர்களாலும் தவறான ஆலோசனையைக் கொடுத்துவிட முடியும் என்பதை நாத்தானின் செயல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தாவீது நாத்தானிடம் கேட்பதற்குப் பதில் கர்த்தரிடம் கேட்டிருந்தால் நலமாயிருந்திருக்கும். மேலும் நாம் செய்வதெல்லாவற்றையும் கர்த்தர் அங்கீகரித்துவிடுவார் என்று எண்ணவும் வேண்டாம். நம்முடைய வழிகளைக் காட்டிலும் கர்த்தருடைய வழிகள் உயர்ந்தவை, சிறந்தவை என்பதால் எல்லாவற்றிற்காகவும் அவரையே சார்ந்துகொள்வோம்.