January

மகிழ்ச்சிக்கு இடையூறு

2024 ஜனவரி 17 வேத பகுதி (2 சாமுவேல்  6,16 முதல் 23 வரை)

  • January 17
❚❚

“சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போடுகிறதுபோல இன்று தம்முடைய ஊழியக்காரருடைய கண்களுக்கு முன்பாக தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் இராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் (வசனம் 20).

தேவனுடைய பெட்டி மகிழ்ச்சியுடன் எருசலேமில் நிலைநிறுத்தப்பட்ட நாளில் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்குபெற்று மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றபோது எருசலேமில் வசித்த ஒரேயொரு பெண்மணிக்கு மட்டும் அது மகிழ்ச்சியாக இல்லை. அவள் சவுலின் குமாரத்தியும் தாவீதின் மனைவியுமாகிய மீகாள். ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடித்து மகிழ்ந்திருந்த நேரத்தில் எங்காவது ஓரிடத்திலிருந்து மகிழ்ச்சியைக் குலைத்துப் போடும்படியான ஒரு கலகக் குரல் எழும்பும். இவர்களினிமித்தம் நாம் நம்முடைய சந்தோஷத்தை இழந்துவிடவேண்டாம். எல்லாருக்கும் வாசனையையும் அழகையும் கொடுக்கக்கூடிய ரோஜா கையில் பட்டால் குத்தி வேதனையைத் தரும் முட்களின் நடுவில்தான் மலர்கிறது. தேவனுடய பெட்டியை எருசலேமில் நிலைநிறுத்தும் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்காகவும் தாவீது ஜெபித்து, ஆசீர்வதித்து அவர்களை அனுப்பிவிட்டு, தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பும்போது தன் சொந்தக் குடும்பத்திலிருந்தே அதுவும் தான் நேசித்த மனைவியிடமிருந்துதே எதிர்ப்பு வரும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

தன் கணவனும் ராஜாவுமாகிய தாவீது மக்களின் முன்பாக குறிப்பாக பெண்களின் முன்பாக ஏபோத்து அணிந்து நடனம் ஆடினான் என்பதே மீகாள் வைத்த குற்றச்சாட்டு. அவள் தன் கணவனின் ராஜாவுக்குரிய மகிமையைக் கருத்தில்கொண்டாள்; தாவீதோ தன்னை அரசனாக்கிய ஆண்டவரின் மகிமையைக் கருத்தில் கொண்டான். கடவுளுக்கு முன்பாக தன் ராஜ மேன்மை ஒன்றுமல்ல என்ற முடிவுக்கு வந்ததே தாவீது ஏபோத்து அணிந்து நடனம் ஆடிய செயல். மீகாளைப் போலவே நாம் ஒரு கருத்தை வைத்துக்கொண்டு, பிறருடைய செயலைக் குற்றமாய்ப் பார்க்கிறோம். தாவீது எத்தகைய சூழ்நிலையில் அதைச் செய்தான் என்று பார்க்க வேண்டும். இதுவரை அந்நிய மக்களிடமும், வெவ்வேறு இடங்களிலும் இருந்த பெட்டியை இப்பொழுது அவன் எருசலேமுக்கு எடுத்து வருகிறான். இது ஒரு வரலாற்று நிகழ்வு. கர்த்தருடைய சமூகம் தலைநகராம் எருசலேமில் இருக்க வேண்டும் என்று எண்ணினான். இது நடைபெற்றபோது மகிழ்ச்சிப் பெருக்காலும், தன் உள்ளத்தை அவருக்கு ஊற்றியதாலும் ஆடிப்பாடினான். அவன் இந்தக் காரியத்தை, எகிப்திலிருந்து வெளியேறியதை நினைவுகூரும் பஸ்கா ஆசரிப்பின்போதோ அல்லது தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு பலிசெலுத்தும் பாவபரிகார பண்டிகை நாளிலோ இதைச் செய்யவில்லை. ஆகவே ஒரு செயல் அது எத்தகைய சூழலில் செய்யப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவன் மக்களை மகிழ்விப்பதற்காகவோ, அல்லது பெண்களைச் சந்தோஷப்படுத்துவதற்காகவோ அல்லது தன்னை ஆவிக்குரியவன் என்று பொதுவெளியில் காண்பிப்பதற்காகவோ நடனம் ஆடவில்லை. கர்த்தருடைய ஜனத்தின்மேல் தன்னைத் தலைவனாகக் கட்டளையிடும்படிக்கு தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமூகத்துக்கு முன்பாக ஆடிப்பாடினான். இதற்குப் பிறகு அவன் நடனம் ஆடினான் என்று எங்கும் வாசிக்கிறதில்லை. என்னை அவரே தலைவனாக அதாவது ராஜாவாக ஏற்படுத்தினார் என்று கூறி, அந்தக் கர்த்தருக்காக இன்னும் என்னைத் தாழ்த்துவேன் என்று கூறி கர்த்தரை மேலும் கனப்படுத்தினான். மீகாளைப் போல வீண் கௌரவம் பார்க்காமல் எப்பொழுதும் கர்த்தருடைய சமூகத்தில் நம்மைத் தாழ்த்தவும், அவரை உயர்த்தவும் சிந்தை உள்ளவர்களாய் இருப்போம்.