January

ஆசீர்வாதத்தின் இரகசியம்

2024 ஜனவரி 16 வேத பகுதி (2 சாமுவேல் 6,12 முதல் 15 வரை)

  • January 16
❚❚

“தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத் ஏதோமையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசிர்வதித்தார்” *( வசனம் 12).

உடன்படிக்கைப் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. கர்த்தர் அக்குடும்பத்தை ஆசீர்வதித்தார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்ற காரியம் பிறருக்கும் தெரிய வந்தது. அது பின்னர் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. வார்த்தையாகிய கிறிஸ்து கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். அவரை இன்முகத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் வரவேற்றால் அவரால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். அவர் நமக்குள்ளாக தங்கியிருப்பதன் ஆசீர்வாதத்தையும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சியையும் பிறரால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நாம் கர்த்தருடன் நெருங்கிய ஐக்கியத்தையும் உறவையும் வளர்த்துக்கொள்வோமாயின், அது நிச்சயமாக பிறரையும் காணச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

கர்த்தர் ஒருவருக்கும் கடனாளி அல்ல. தம்முடைய பிள்ளைகள் அவருக்காக எடுக்கிற எந்தவொரு பிரயாசத்தையும் அவர் மறந்துபோக மாட்டார். அவர்களைத் தலைமுறை கடந்து ஆசீர்வதிக்கிறவர் நம்முடைய தேவன். இவ்விதமாகவே கர்த்தர் ஓபேத் ஏதோமின் குடும்பத்தாரை ஆசீர்வதித்தார். ஓபேத் ஏதோம், அவனுடைய மகன்கள் பேரப்பிள்ளைகள் ஆகியோர் அடங்கிய 62 பேர் பராக்கிரமசாலிகளாகவும், பலசாலிகளாகவும், ஊழியஞ்செய்கிறவர்களாகவும் விளங்கினார்கள். (காண்க 1 நாளாகமம் 16,4 முதல் 8). ஓபேத் ஏதோமின் வாஞ்சை ஒப்புவித்தல் ஆகியன அவனுடைய மகன்களை மட்டுமின்றி, பேரப்பிள்ளைகளையும் பாதித்தது. அவர்களும் கர்த்தருக்கு தங்களை ஒப்புவித்தார்கள். லோவிசாளுக்குள் இருந்த விசுவாசம், ஐனிக்கேயாளுக்கு வந்ததுபோல, ஐனிக்கேயாளுக்கு இருந்த விசுவாசம் தீமோத்தேயுவுக்கு வந்ததுபோல, தீமோத்தேயுவுக்கு இருந்த விசுவாசம் பல திருச்சபை மக்களுக்கு பயன்பட்டதுபோல கர்த்தர் நம்மையும் பயன்படுத்த வல்லவராயிருக்கிறார். ஆகவே கர்த்தருடைய சமூகம் நம்முடைய வீடுகளில் இருக்கிறது என்ற எண்ணத்தை நாம் மனதிற்கொள்வது மட்டுமின்றி, அதற்கேற்ப நடந்துகொள்ளும்படி பிள்ளைகளுக்கும் போதித்து வளர்ப்போம். இது அவர்களுடைய எதிர்காலத்திற்கும் ஆசீர்வாதமாக விளங்கும்.

தாவீது தேவனுடைய பெட்டியை மகிழ்ச்சியுடன் ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வந்தான். ஊசாவின் மரணத்தினால் வந்து பயத்திற்கும் கலக்கத்திற்கும் பிறகு ஒரு நல்ல செய்தியைக் கேள்விப்பட்டான். ஆகவே அதை எருசலேமுக்கு கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்து அதற்குரிய வேலைகளை வேதம் கூறும் ஆலோசனையின்படி செய்தான். மக்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும், ஆசாரியர்கள் அவர்களை எவ்வாறு சுத்திகரித்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கினான். கடந்தகால தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டது மட்டுமின்றி நிகழ்காலத்தில் சரியான விதத்தில் செயல்படுத்தினான். இதன்படி ஆசாரியர்களை அழைத்தான். அவர்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று கூறினான், முன்னர் நீங்கள் சுமக்காததினாலே ஒரு மரணம் நேரிட்டது என்று கூறி அவர்களை ஆயத்தப்படுத்தினான் (1 நாளாகமம் 15,11 முதல் 13). ஆசாரியர்களைப் போலவே தானும் சணல் நூல் ஏபோத் அணிந்து தன்னுடைய தாழ்மையை வெளிப்படுத்தினான். ஆசாரியர் பெட்டியைத் தூக்கி ஆறு அடி நடந்தவுடன் பலிகளைச் செலுத்தி கர்த்தரைத் தொழுதுகொண்டான். நடக்கையும் பலியும் ஒன்றுசேர்ந்தபோது, பெட்டி மகிழ்ச்சியுடன் எருசலேம் கொண்டுபோகப்பட்டது. நாமும் இந்தக் காரியங்களில் மிகுந்த கவனமுள்ளவர்களாயிருப்போம்.