January

கோபத்தின் காரணம்

2024 ஜனவரி 15 வேத பகுதி (2 சாமுவேல் 6,7 முதல் 11 வரை)

  • January 15
❚❚

“கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது” (வசனம் 7).

பெட்டி ஆசாரியர்களால் தோள்களில் தூக்கிச் செல்வதைக் காட்டிலும், ஒரு வண்டியில் ஏற்றிச் செல்வது ஒரு சிறந்த நடைமுறைக் காரியமாக தாவீதுக்குத் தோன்றியது. அவ்வாறே பெட்டி சாயும்போது அதைத் தொடுவது ஊசாவுக்கு நலமானதாகத் தோன்றியது. ஆனால் தேவனைப் பொறுத்தவரை அது ஒரு தவறான செயல். அவருடைய வார்த்தைக்கு மாற்றான ஒன்றை யோசிப்பதையும் அதன்படி செய்வதையும் ஒரு அபாயகரமான காரியமாகப் பார்க்க வேண்டும். அதை எளிதானதாகப் பார்க்கக் கூடாது. வேதத்தின் ஓர் எழுத்தாகிலும் எழுத்தின் ஓர் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்றும் அது மீறப்படக்கூடாது என்றும் தேவன் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே நாம் தேவனுக்குச் செலுத்தவேண்டிய கனத்தையும் கீழ்ப்படிதலையும் எப்பொழுதும் செலுத்த ஆசையுள்ளவர்களாக இருப்போம்.

கர்த்தர் ஏன் ஊசாவை அடிக்கவேண்டும்? அவன் அதின்மேல் அக்கறையுள்ளவனாக, அது கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே தொட்டான். ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய அப்பத்தை தாவீதும் அவனோடு இருந்தவர்களும் சாப்பிட்டபோது கர்த்தர் அவர்களைத் தண்டிக்கவில்லையே? ஊசாவைப் பொறுத்தவரை இது திடீரென தோன்றிய செயல் அல்ல. இது படிப்படியாக அவன் உள்ளத்தில் கொண்டிருந்த மனப்பான்மையின் வெளிப்பாடு. பெட்டியை யார் தொடவேண்டும். யார் தூக்க வேண்டும் என்பதைக் குறித்த கட்டளையை மேம்போக்காக எடுத்துக்கொண்டிருக்கலாம். அது எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என்று எண்ணியிருக்கலாம். அது தன்னுடைய வீட்டில் நீண்ட நாட்களாக இருந்தால் கர்த்தர் தனக்கு சாதகமாக இருப்பார் என்று எண்ணியிருக்கலாம். ஆசரிப்புக்கூடாரத்தின் பிற பொருட்களுக்கும் இந்த உடன்படிக்கைப் பெட்டிக்கும் உள்ள வேறுபாட்டை உணராமல் போனான். ஆசாரியர்கள்கூட அதை தோளில் சுமக்கலாமே தவிர அதைத் தொடக்கூடாது. ஆகவே நாம் எப்போதும் செய்ய வேண்டியதை செய்யவேண்டிய பிரகாரம் செய்வோம்.

ஊசாவின் மரணம் தாவீதுக்கு பயத்தை உண்டாக்கியது. அதை ஓபோத் ஏதோமின் வீட்டிலே வைத்தான். கர்த்தர் அவனையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். இவன் லேவி குடும்பத்தைச் சேர்ந்தவன் (1 நாளாகமம் 26,4). இவர்கள் அதைச் சுமப்பதற்கான தகுதியை உடையவர்கள் (எண்ணாகமம் 4,15). தாவீது வேத வசனத்துக்கு நேராகத் திரும்பினான். கர்த்தருடைய வார்த்தையை நடைமுறைப்படுத்தினான். ஆசீர்வாதம் வந்தது. தீமை ஒருபோதும் கர்த்தருடைய இருதயத்திலிருந்து வருவதில்லை. அது மனிதனுடைய கீழ்ப்படியாமையின் நிமித்தமே வருகிறது. தாவீதுக்கு ஏற்பட்ட கலக்கமும் பயமும் ஓபோத் ஏதோமுக்கு உண்டான ஆசீர்வாதத்தினால் மகிழ்ச்சியாக மாற்றப்பட்டது.  ஆகவே நாம் கர்த்தருடைய உள்ளத்தைப் புரிந்துகொண்டு அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.