2 கொரிந்தியர் – அதிகாரம் 11
1 என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.
2 நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
6 நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
7 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?
8 உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
9 நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.
10 அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.
11 இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.
12 மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
16 பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
17 இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.
18 அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.
19 நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.
20 ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.
21 நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.
22 அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
24 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;
25 மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
26 அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;
27 பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
28 இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.
29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?
30 நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.
31 என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.
32 தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;
33 அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.
2 கொரிந்தியர் – அதிகாரம் 12
1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
4 அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன்.
7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
10 அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11 மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
12 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.
13 எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்.
14 இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்
16 அப்படியாகட்டும்; நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17 நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
18 தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா?
19 நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
20 ஆகிலும் நான் வந்து உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், கோபங்கள் வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்;
21 மறுபடியும் நான் வருகிறபோது என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் – அதிகாரம் 13
1 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
2 நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
3 கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.
4 ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.
5 நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிகிறீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
6 நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
7 மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம் பண்ணுகிறேன்.
8 சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.
9 நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.
10 ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.
11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
12 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
13 பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.