2 கொரிந்தியர் – அதிகாரம் 7
1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
2 எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.
3 உங்களைக் குற்றவாளிகளாக்கும்பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
6 ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.
7 அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.
8 ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
11 பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
12 ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்படவனிமித்தமுமல்ல, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும்பொருட்டே அப்படி எழுதினேன்.
13 இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
14 இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.
15 மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.
16 ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.
2 கொரிந்தியர் – அதிகாரம் 8
1 அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2 அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
3 மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.
4 தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.
5 மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
6 ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.
7 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.
8 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.
9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.
10 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒருவருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.
11 ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.
13 மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.
14 எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,
15 சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
16 அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
17 நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் விருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.
18 சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம்.
19 அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான்.
20 ஊழியத்தினாலே சேர்க்கப்பட்ட மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து,
21 கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
22 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம்.
23 தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும் உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன்.
24 ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.
2 கொரிந்தியர் – அதிகாரம் 9
1 பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.
2 உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.
3 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.
4 மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
5 ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
11 தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.
12 இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்.
13 அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அநுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரணத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;
14 உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள்.
15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
2 கொரிந்தியர் – அதிகாரம் 10
1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
3 நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
4 எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
6 உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.
7 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன்.
8 மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.
9 நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.
10 அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
11 அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்.
12 ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
13 நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
14 உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே.
15 எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைகύகுட்பட்டு மேன்மைபாராட்டமாட்Οோம்.
16 ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும்பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.
17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.
18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.