மே 26
‘எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறியக்கடவன்‘
1 கொரிந்தியர் 11:2-8
இது அவசியம்; இப்படிச் சோதித்துப் பார்த்தால்தான் நம்முடைய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்வோம். நாம் வளருகிறோமோ குறைகிறோமோ என்று நமக்குத் தெரியும், நித்திய ஜீவனை எந்த அஸ்திவாரத்தின்மேல் கட்டுகிறோம்? நம்முடைய நம்பிக்கை எதின்மேல் இருக்கிறதென்று காலையில் சோதிப்போமாக. நமக்கிருக்கும் இன்பம் சமாதானம் இவைகளுக்கு ஊற்றெங்கே? நாம் உண்மையாகவே கிறிஸ்தவர்கள் என்று ரூபிக்க நம்மிடத்தில் என்ன இருக்கிறது? அவருடைய பரிசுத்த ஆவியினால் நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோமா? கிறிஸ்து நமக்கு ஜீவனாக நமக்குள்ளே வாசம்பண்ணுகிறாரா? பாவத்தின் தன்மை, லட்சணம் செய்கை இவைகளைப்பார்க்க நாம் வெளிச்சம் அடைந்திருக்கிறோமா? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வசனத்தை, விசுவாசத்தை, அவருக்கென்று ஜீவனம்பண்ணுகிற உயிருள்ள விசுவாசம் நம்மிடத்தில் உண்டா? கிருபையிலே நாம் நல்நம்பிக்கை உடையவர்களாய் பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறதா? தேவன் நம்மைச் சிநேகித்தார் என்று சொல்லி, நாம் அவரை நேசித்துச் சமாதானத்திலும் பரிசுத்தத்திலும் நடத்தப்படுகிறோமா? ஆவியின் அச்சாரமும் சாட்சியும் நம்முடைய இருதயத்தில் உண்டா? நாம் பாவத்தோடு போராடி ஒரு கொடூர மன்னனிடத்திலிருந்து, ஒரு கொடிய வியாதியிலிருந்து, ஒரு கொடிய தீமையிலிருந்து விடுதலையாக விரும்புகிறதுபோலப் பாவத்தினின்று விடுதலையாக ஜெபம்பண்ணி வருகிறோமா? தேவவசனத்தை நமக்குச் சட்டமாகவும் வழி காட்டியாகவும் வைத்துக்கொண்டு, பயபக்தியோடும், நல்யோசனையோடும், ஜெபத்தோடும் நம்மைச் சோதித்து வருகிறோமா? நம்முடைய செய்கையை நாமே பரீட்சித்துக்கொள்வோமாக. அப்போது மற்றவர்களைப் பார்த்தல்ல, நமக்குள் நாமே சந்தோஷப்படுவோம்.
என்னை ஆராய்ந்து பாருமே
என் பயத்தை நீக்குமே,
உண்மையை வெளிப்படுத்தி
மனச்சாட்சி அமர்த்தி,
தேவகிருபை என்னிலூற்றும்
என் இதயத்தை ஆற்றும்.