மே 27
‘அங்கே அவனை ஆசீர்வதித்தார்‘
ஆதியாகமம் 32:29
ஏழை யாக்கோபு பயமும் திகிலுமடைந்து, தேவனிடத்தில் கெஞ்சிப் போராடப்போனான். அழுது விண்ணப்பஞ்செய்து தேவனோடு போராடி மேற்கொண்டான். அங்கே அவனை தேவன் ஆசீர்வதித்தார்; நம்மை ஆசீர்வதிக்கிறது தேவனுக்குப் பிரியம். ஆதலால் உலகத்தோற்றத்திற்கு முன்னே ஆதியிலே இயேசுவின் சகல பரம ஆசீர்வாதங்களோடு நம்மை ஆசீர்வதித்தார். நம்மை உண்டாக்குமுன்னே தமது குமாரனில் நமக்குக் கிருபையை அளித்தார். ஆகிலும் அவரிடத்தில் நாம் கெஞ்சி அழவேண்டும் என்பது அவர் மனம். அவர் ஆசீர்வதிக்கிற தேவன், மனுஷருடைய இருதயத்தில் வருத்தமுண்டாக்குகிற எந்தக் குறையும் கிறிஸ்துவின் பரிபூரணத்தால் முன்னமே நீக்கப்பட்டுப்போனது. நம்முடைய போராட்டமும் சோதனைகளும் எவ்வளவு பெரியதாயிருந்தாலும் நாம் மலைக்கவேண்டுவதில்லை. கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; சர்வ வல்லபத்தோடு கிருபையும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கிறது; நம்முடைய பரம பிதாவின் அன்பு தவறாது; நம்முடைய தெய்வீக ரட்சகரின் பரிபூரணம் குறையாது; உண்மையுள்ள வாக்கு கெடாது. ஆதலால் ஆகோரின் பள்ளத்தாக்கில் கெஞ்சி யுத்த வெளியில் போராடுவோமாக. அங்கே அவனை ஆசீர்வதித்தார் என்று இன்னும் சொல்லப்படும். ஜெபத்தின் ஆவி எவ்வளவு அவசியம்; உயிருள்ள விசுவாசம் எவ்வளவு தேவை.
தேவா உமது பக்தர்க்கு
நீர் அளித்த நன்மை.
நான் அறியச் செய்தெனக்குத்
தாரும் மோட்ச பலனை.


