ஜனுவரி 24
‘நீங்கள் உங்களுடையவர்களல்ல‘
1 கொரிந்தியர் 6:19
இயேசு உங்களைத் தமது சொந்த ரத்தத்தால் கொண்டார்; தமது ஆவியில் புதுப்பித்தார்; தமக்கென்று உங்களை நியமித்துக்கொண்டார்; தம்மோடு உங்களை எப்போதும் மகிமையாய் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார், உன் பேரைச் சொல்லி உன்னை அழைத்தேன், நீ என்னுடையவன் என்று சொந்தம் பாராட்டிப் பேசுகிறார். நீங்கள் அவருக்குச் சொந்தமானபடியால் உங்களுக்கு வேண்டியதை அவர் சவதரித்துத் தருவார், ஒரு தகப்பன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன் சொந்த மகனைப் பாதுகாப்பது போல உங்களைப் பாதுகாக்கிறார், நீங்கள் அவருக்குப் பிரியமான மனையாட்டி, அவருடைய பங்கு, அவருடைய சரீரத்திலும் மாம்சத்திலும் எலும்பிலும் சேர்ந்த ஒரு அவயவம், உங்களை நேசிக்கும்போது தம்மையே நேசிக்கிறார். நீங்கள் அவருடையவர்கள், உங்களுடையதெல்லாம் அவருடையது என்று தினந்தோறும் எண்ணி நீங்கள் ஜீவனம் செய்யவேண்டுமென்பதே அவருடைய விருப்பம். உங்களுக்குச் சொந்தமானது ஒன்றுமில்லை, உங்களுக்குள்ளதெல்லாம் அவர் இலவசமாகத் தந்தது. உங்களுக்குள்ளதெல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவித்துப் போட்டோமென்று சொல்லுகிறீர்கள். இயேசு தந்தையல்ல, அவரையே அதிகமாய்ச் சிந்தியுங்கள்; அவரோடு ஒட்டியிருங்கள்; நீங்கள் அவருக்கு ஒப்புவிக்கிறதைப்பற்றி அதிகமாய் நினையாதேயுங்கள். உங்களிடத்திலிருந்து அவர் எதையாவது எடுத்தாரானால் அதைவிட நல்லதைத் தருவார். உங்களிடத்திலிருந்து சகலத்தையும் உரிந்துகொள்ளும்போது, உங்களுக்குப் போதிக்க, அவரைப்பற்றி நீங்கள் ஜீவனம் பண்ணவேண்டுமென்று காட்ட, அவரிடத்தில் அவருடைய கிருபையில், அவர் உங்களுக்குச் செய்த நன்மையில், நீங்கள் மோட்சத்தைக் கண்டுபிடிக்கத்தான் அப்படிச் செய்கிறார். உங்களைக் கவனிக்கிறவர்களெல்லாரும் நீங்கள் கர்த்தருடையவர்களென்று எண்ணத்தக்கதாக ஜீவனம்பண்ணுகிறீர்களா, நடக்கிறீர்களா, செய்கிறீர்களா? அவர் உங்களைக் காப்பாற்றி நடத்தி உங்களை ஆதரிப்பாரென்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள்.மனச்சாட்சி சொல்லட்டும்.
நான் உம்முடையோன் கர்த்தாவே,
உமது தாசனாகவே
ரத்தத்தால் மீட்கப்பட்டேன்,
லோகம் பாவத்தை விட்டேன்.


