ஜனுவரி 25
‘நீங்கள் என் சிநேகிதராயிருப்பீர்கள்‘
யோவான் 15:14
அற்பப் புழுக்களாகிய நமமை இயேசுநாதர் தமது சிநேகிதர்களென்று அழைப்பது எவ்வளவு பெரிய தாழ்மை. அப்படி நம்மை அழைக்கிறதுமாத்திரமல்ல, தம்முடைய சிநேகிதராகவும் நம்மை நடத்துகிறார். நாம் அவருடைய சிநேகிதராக அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவோமென்று எதிர்பார்க்கிறார். இயேசு உன் சிநேகிதரா? அவரிடத்தில் அடிக்கடி போ. உன் ஜெபத்தின் சத்தமும், துதியின் சத்தமும் அவர் காதில் விழட்டும். அவர் உன் சிநேகிதரானால் அவரை உண்மையாய் நம்பு. நீ அவரைச் சார்ந்திருப்பதினால் உன் விசுவாசம் உண்மையுள்ளதென்று அவர் பார்க்கட்டும். அவர் உன் சிநேகிதரானால் அவரிடம் அன்புவைத்து நட. உண்னோடிருக்கிறது அவருக்குப் பிரியமாயிருக்கட்டும். சுகத்திலும் துக்கத்திலும், வாழ்விலும் வறுமையிலும், ஜீவனிலும் மரணத்திலும் அவரை உன் சிநேகிதராக நோக்கிக்கொண்டிரு. இயேசு நமது சிநேகிதரானால் நாம் திக்கற்றவர்களாய் விடப்படோம்; தாயும் தகப்பனும் நம்மைக் கைவிட்டாலும் அவர் நம்மைத் தாங்குவார். நம்மை ஏற்றுக்கொள்ளுவார். நாம் ஒருபோதும் நிர்ப்பந்தராகமாட்டோம். நம்மை ஏற்றுக்கொண்டு நமக்குத் தகப்பனாவார். நாம் புறம்பே தள்ளப்படமாட்டோம். நம்மை அவர் மறப்பது மில்லை, தள்ளுவதுமில்லை, தம்முடைய வாக்குத்தத்தத்தில் நமக்குச் சொன்னதெல்லாவற்றையும் செய்வார். சத்துருக்கள் கையிலிருந்து நம்மை விடுவிப்பார், வியாதியில் நம்மை வந்து பார்ப்பார். மரணத்தில் நம்மைக் களிகூரப்பண்ணி நம்மை ஆதரிப்பார். அருமையான இயேசு நாயகனே! என் சிநேகிதனாயிரும்; சிநேகிதனென்று என்னை அழையும்; ஜீவனிலும், மரணத்திலும் நியாயத்தீர்ப்பிலும், உமது பிதாவின் சமுகத்திலும் எப்போதும் என்னைச் சிநேகிதனாக ஏற்றுக்கொண்டு நடத்தும்.
ஏக எனதடைக்கலம்,
அவர் ஞானம் என் பெலன்;
அவர் கரத்தில் சாகுவேன்,
அவர் நல்நேசனென்பேன்;
அவர் அன்பின் மகத்துவம்.
பக்தர் யார்க்கும் சத்துவம்.


