ஜனுவரி 26
‘நான் உனக்குப் போதிப்பேன்‘
சங்கீதம் 32:8
கர்த்தரே நமக்குக் கற்றுக்கொடுப்பேனென்று வாக்கருளியிருக்கிறபடியால், நாம் ரகஷிப்புக்கேற்ற ஞானிகளாகலாம். கர்த்தர் நமக்குக் கற்றுக்கொடுத்தால் தாழ்மையுண்டாகும்; சுயவெறுப்பு உண்டாகும்; தேவனில் நம்பிக்கையும் அவருடைய மகிமைக்காக வைராக்கியமுமுண்டாகும்; நம்முடைய இருதயத்தை அவருடைய புகழ்ச்சிக்கென்று ஒப்புக்கொடுக்கிற வாஞ்சையுண்டாகும். அது இயேசுவண்டைக்கு நம்மைக் கொண்டுவந்து இந்தப் பொல்லாத உலகத்தினின்று நம்மைத் தப்புவிக்கும், தேவனால் நாம் போதிக்கப்பட்டால், பாவத்தின் சரியான தன்மையும், உலகத்தின் மாயமும், கிறிஸ்துவின் பரிபூரணமும், அவருடைய அருமையும் நமக்கு நன்றாய்த் தெரியவரும். நம்மைப் படிப்பிக்கத் தேவனுக்கு மனமிருக்குமானால், காலையில் எழுந்து, கிருபாசனத்தண்டையில் போய், சங்கீதக்காரனைப்போல் ஜெபிப்போமாக. ‘உம்முடைய சத்தியத்தண்டைக்கு என்னை நடத்தி என்னைப் போதியும்; நீர் என் ரட்சிப்பின் தேவன்; நாள்முழுவதும் உம்மண்டை காத்திருக்கிறேன்.’ அப்போது நாம் யோபு சொன்னதுபோல் சொல்வோம். “இதோ, தேவன் தமது வல்லமையைக்கொண்டு நடத்துகிறார்; அவரைப்போல் கற்பிக்கிறவன் யார்?’ பிரயோஜனமுண்டாகத்தக்கதாகப் போதிப்பார்; அவர் போதிக்கும் சத்தியத்தால் நம்மைச் சுத்திகரிப்பார்; நாம் கற்கவேண்டிய பாடம் கிறிஸ்துதான். அவரைச் சரியானபடி அறிந்துகொள்ளுசிறது நமக்கு ஜீவன் சமாதானம், சந்தோஷம். இயேசு உன் உபாத்தியாயரா? அப்படியானால் அவர் பாதத்தண்டை உட்காரு; அவர் சொல்வதை உன் மனதில் பத்திரப்படுத்து; அவர் துதியைப் பிரஸ்தாபம் பண்ணு. என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். அவரை அறிந்துகொள்ள அவரை நேசிக்க, அவருக்குக் கீழ்ப்படிய, அவர் போதித்த ஜீவ வழியில் நடக்கப் படித்துக்கொள்.
நித்திய ஜீவவார்த்தையே,
என் ஆவி தங்கும் இடமே.
எனக்கின்ப பாதையே!
கடைசியில் என் கிரீடமே.


