ஜனுவரி 18
‘என்னிடத்தில் தீமையுண்டென்று காண்கிறேன்‘
ரோமர் 7:2
ஆனாலும் அந்தத் தீமை உன்னிலும் உன்மேலும் அதிகாரம் செலுத்தாமலிருப்பது எவ்வளவு பெரிய இரக்கம். முன்னே அதிகாரம் செலுத்திவந்தது; தேவகிருபை அதை ஜெயிக்காவிட்டால் இப்பொழுது அதிகாரம் செலுத்தும். பாவம் உன்னைப் பெருமூச்சுவிடப்பண்ணி, தேவனிடத்தில் போராட அவருடைய சிம்மாசனத்தண்டைக்கு உன்னை நடத்தி, அதினின்று கழுவப்பட ரட்சகருடைய இரத்தமென்னும் ஊற்றண்டைக்கு உன்னைக் கொண்டுபோகுமானால், அது உன்னிடத்தில் ஆளுகைசெய்கிறதுமில்லை, ஆளுகை செய்யவுங்கூடாது. உன்னிலுள்ள சமாதானத்தை அது அசைக்கலாம்; உன் மனதை வருத்தப்படுத்தலாம்; உன் கடமையை நிறைவேற்றாதபடி தடுக்கலாம்; நன்மை செய்ய நீ பண்ணும் பிரயத்தனங்களோடு கலந்திருக்கலாம்; நான் நிர்ப்பாக்கியனான மனிதன், என்னை யார் விடுதலையாக்கக்கூடும் என்று கதறி அழும்படி செய்யலாம். அப்படியிருந்தாலும், இயேசு உன்னை இன்னும் நேசிக்கிறார். கிருபை உன்னில் ஆளுகை செய்கிறது. நீ ஜெயவீரனைவிட அதிகமாய் ஜெயங்கொள்வாய் என்பதைப்பற்றிச் சந்தேகப்படமாட்டாய். பவுல் கர்த்தரை அநேக வருஷங்களாய் அறிந்திருந்தான். மூன்றாம் வானமட்டும் போய்க் கிறிஸ்துவில் நித்தம் ஜெயமடைந்தான். அவனும் உன்னைப்போலவே முறையிட்டான். அவன் நன்மை செய்ய விரும்பினபோது தீமை அவனிடம் காணப்பட்டது. விரும்பின காரியத்தைச் செய்யக்கூடாமற்போனான். பாவம் உன்னைத் தொந்தரவுபண்ணி உனக்குப் பாரமாக துக்கத்தை வருவிக்குமானால், பரிசுத்தம் உன்னில் பிழைத்து, தற்காலத்தில் உன்னிடத்தில் நடக்கும் போராட்டம் நித்திய சமாதானமாய் முடியும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு ஜெயமளிக்கிற தேவனுக்குத் தோத்திரமென்று நீ இப்போதும் பாடலாம்; கிறிஸ்துவின்மேல் நீ சார்ந்து இப்போது ஜீவனம்பண்ணு; எல்லாத் தீமையையும் ஜெயித்துப் போடுவாய்.
லோகத்தில் சஞ்சரிக்கையில்
துன்பம் துயர் நமக்குண்டு;
ரட்சகர் நமக்கிருக்கில்
பயம் திகில் ஒன்றும் அன்று.


