ஜனுவரி 17
‘நன்மைசெய்ய விரும்புகிறேன்‘
ரோமர் 7:21
ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியினால் புதிதாகுதல் இன்னதென்று தன் சொந்த அனுபவத்தால் காண்கிறான். பாவம் அவன்மேல் ஆளுகைசெய்கிறதில்லை. பரிசுத்தத்தின் அழகைப் பார்த்துப் பாவத்தினிமித்தம் தன்னை அருவருக்கிறான். உள்ளாகப் பரிசுத்தமாயிருக்கவும், வெளியரங்கமாக வேதவசனத்தோடு ஒத்து நடக்கவும் ஆசைப்படுகிறான். கருத்தாய் ஜெபம் பண்ணவும், நன்றியறிதலோடு துதிசெலுத்தவும், உறுதியாய் விசுவாசிக்கவும், பாவத்தோடும், சாத்தானோடும், மாம்சத்தோடும் தைரியமாய்ப் போர்செய்யவும், ஒவ்வொரு நினைவினாலும், வார்த்தையினாலும், செய்கையினாலும், எண்ணத்தினாலும் தேவனை மகிமைப்படுத்தவும் வேண்டும் என்பதே அவனுடைய விருப்பம். இதுதான் அவன் இஷ்டம். இதற்கென்றே அவனுக்குப் பிரியமான சமயங்களில் எல்லாம் ஜெபம் பண்ணுகிறான். ஆகிலும் தான் பரிசுத்த ஆவியினால் அடிக்கடி புதிதாக்கப்பட வேண்டுமென்று பார்க்கிறான். இல்லாவிட்டால் பக்தி குளிர்ந்து அணைந்துபோம். இருண்டு மந்தமாய்ப்போகுமென்று பயந்து: ‘என் ஆத்துமா தூளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது; உம்முடைய வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்’ என்று அழுகிறான். கர்த்தர் விருப்பத்தை மாத்திரமல்ல, செய்கையையும் நமக்குள் நிறைவேற்றவேண்டியவர். இயல்பாய் நமக்கு நல்ல மனமில்லை. பரிசுத்தத்தின்பேரிலுள்ள வாஞ்சை தேவனிடம் இருந்துதான் வரவேண்டும். இல்லாவிட்டால் சுத்தமாய்க் கிடையாது. நேசனே! நீ நித்தம் இயேசுவண்டைக்குப் போய் உனக்குத் தேவையான ஆவியின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள். இல்லாவிட்டால் நீ பலவீனப்பட்டுப்போகிறது மாத்திரமல்ல, கவலையற்றவனாகவும் போவாய். பக்தியின் வல்லமை தணிந்துபோகிறது மாத்திரமல்ல, நீ ஏனோதானோவென்று நடப்பாய். சோதனைக்கு விரோதமாய் விழித்திரு. ஜெபத்தோடு விழித்திரு. உன் சொந்த இருதயத்தைக் குறித்து விழிப்பாயிரு.
போரிலே ஒத்தாசை தாரும்
என் ஆவியை நிமிர்த்தும்;
பெலத்தாலே என்னைக் காரும்
என் ஆவி உம்மைப் போற்றும்.