மே 18
‘பின்புபோய் அந்தச் சங்கதியை அறிவித்தார்கள்‘
மத்தேயு 14:12
ஏரோது யோவானைச் சிரச்சேதம் செய்தபோது அவனுடைய சீஷர்கள் அவனுடைய உடலையெடுத்து அதைப் புதைத்து, இயேசுவினிடத்தில் போய்ச் சொன்னார்கள். நாம் இவர்களைப்போலச் சகலத்தையும் இயேசுவினிடத்தில் கொண்டுபோகவேண்டும். நம்முடைய துன்பங்களைச் சொல்லும்போது அவர் நன்றாய்க் கேட்கிறார்; நம்முடைய வருத்தங்களிலும் சோதனைகளிலும் அவர் பரிதாபமடையக்கூடியவர். அவர் நம்முடைய பிதா; பிள்ளை தன்னுடைய வருத்தங்களைப் பட்சமுள்ள தன் பிதாவினிடத்தில் சொல்லாமல் யாரிடத்தில் சொல்லும்? அவர் நம்முடைய அடிகளை நடத்தி, நமக்கு நேரிட்ட தீமைகளுக்குப் பழிவாங்கி, சகலத்தையும் நமக்கு அநுகூலமாக்குவார். நம்முடைய காரியம் செம்மையாய் நடக்கவில்லையா? சத்துருக்கள் ஜாக்கிரதையாயிருக்கிறார்களா? உள்ளான பாவக்கேடுகள் பலத்திருக்கிறதா? விசுவாசம் தடுமாடுகிறதா? உன் குடும்பத்தில் சோதனையுண்டா? அதை இயேசுவினிடத்தில் போய் சொல்லு, உன் மனதில் சமாதானமிருக்கும், பாவத்தைத் தடுக்கும், குறைவுகள் நீங்கும்; சாத்தானுடைய நோக்கங்கள் அவமாகும். உன் நிர்ப்பந்தங்களைக்குறித்து எண்ணமிட்டுக்கொண்டிராதே; சிருஷ்டிகளணடையில் போகாதே; முறுமுறுக்காதே; முறையிடாதே; ஏங்கிச் சலிப்படையாதே; இயேசுவினிடம் போ; தீவிரமாய்ப் போ; நம்பிப் போ; போய் அவரிடத்தில் மறைக்காமல் சகலத்தையும் சொல். இன்று காலமே போ; உன் முறைப்பாடுகள், ஆசைகள், பயங்கரங்கள சகலத்தையும் அவருக்கு முன் வைத்து, உன் காரியத்தைத் தம்மேல் போட்டுக்கொள்ளும்படி கெஞ்சு, நீ சொல்லுகிறதைக் கேட்கிறது அவருக்குப் பிரியம். உதவி செய்வேன் என்று வாக்களித்திருக்கிறார்; நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பார்; உன் இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றி, அவரிடத்தில் அடைக்கலம் பெறுவது உன் கடமை, உன் சிலாக்கியம்.
தேவா, உமது மடியில்
துக்கம் யாவும் ஊற்றுவோம்,
நாங்கள் விண்ணப்பம் செய்கையில்
நீர் கேட்டால் மகிழுவோம்.