மே 16
‘இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்‘
லூக்கா 6:21
பசி சுகத்துக்கு அடையாளம்; தேகபலத்துக்குத் தக்கதாய் அதை நீக்கவேண்டும். மாம்சத்துக்குரிய ருசி மாம்சத்துக்குரியவைகளுக்குத் திருப்தியுண்டாக்கும். கிறிஸ்தவனுக்கு உள்ள வாஞ்சை அவனுக்கிருக்கும் பசி, தன்னில் பரிசுத்த ஆவியால் உண்டுபண்ணப்பட்டு இயேசுவால் தனக்குக் கொடுக்கப்பட்ட நீதியின்மேல் அவனுக்குப் பசியுண்டாகிறது. கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாகவும், அவரை அதிகமாய்ப் புசித்து சுய அனுபவத்தால் கண்டறியவும், தேவனைத் தன் பங்காக அனுபவிக்கவும், ஜீவனாலாவது மரணத்தினாலாவது கிறிஸ்து தனக்குள்ளே மகிமைப்படவும் வேண்டும் என்றும் அவன் ஆசைகொள்ளுகிறான். எதன்மேல் ஆசை கொள்ளுகிறானோ அதன்மேல்தான் அவனுக்குப் பசியிருக்கிறது; அதற்குப் பதிலாக வேறொன்றும் உதவாது. கிறிஸ்துவை உட்கொள்ளும்போதுதான் அவன் நன்றாய்த் திருப்தியடைகிறான். சிநேகிதரே! இன்று காலையிலே உங்கள் நிலைமை என்ன? உங்களுக்கு இயேசுவின்மேல் பசியுண்டா? அவர் பசிக்கிறவர்களை நன்மைகளால் நிரப்புகிறார். அவர்கள்தான் பாக்கியவான்கள் என்கிறார். அவர்கள் ஆவிக்குரிய ஜீவன் எதன் மேல் ஆசைப்படுகிறதோ அதன்மேல் வாஞ்சையுண்டு. பரிசுத்த ஆவியின் கிரியையின்மேலும் அவர்களுக்கு ஆசையுண்டு. தேவனால்தான் இந்தப் பசியுண்டாகும்; அதைத் திருப்தியாக்கக்கூடியவர்கள் பரிபூரணமடைவார்கள் என்று சொல்லியிருக்கிறார். இது தெளிவாயிருக்கிறது, உறுதியுள்ளது, மாறாதது, இது நிச்சயம், இதை நம்பு; பாக்கியவானாய் இருப்பாய்.
நீதியின்மேல் ஆசைகொள்வோர்
க்ருபைக்காகத் தவிப்போர்,
ஜீவ அப்பம் ஜீவ தண்ணீர்
பெற்று த்ருப்தியடைவோர்;
பசிக்கும் என் ஆத்துமாவுக்கு
வானோர் அப்பம் கிடைக்கும்.