மே 17
‘அவர் தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்‘
செப்பனியா 3:17
மனிதருடைய அன்பு மாறத்தக்கது; தேவ அன்பு மாறாதது; அது பூரண குணம். அவர் சிநேகித்தால் எப்போதும் சிநேகிப்பார்; அவர் நித்தியகாலமாய் அறிந்திருக்கிறதுதான் உலகத்தில் நடக்கும். ஆதலால் தேவன் என்னை நேசியாததற்கு, என்மேல் மனம் வைக்குமுன்னமேதானே வர் அறிந்திருந்த காரணத்தைவிட நூதன காரணம் இப்போதிராது. நாம் எப்படி நடப்போம்? நமக்குள்ளே எப்படிப்பட்ட குணங்களிருக்கும்? இதை யெல்லாம் முன்னே அறிந்து தமது அன்பை நமதுமேல் வைத்தார். அந்த அன்பைவிட்டு எடுத்துப் போடாதபடிக்கு நம்மை இயேசுவோடு இணைத்தார். தேவன் நமதுமேல் வைத்த அன்பை நாம் அறிந்து விசுவாசிக்கிறோம். தேவன் அன்புதான் என்று யோவானைப்போல நாம் சொல்லக்கூடியவர்களானால் எவ்வளவு நலம்? தேவ அன்பு நித்திய காலமாயுள்ளது, அதற்கு மாறுதலில்லை. தேவன் இதில் அமர்ந்திருக்கிறார், நாமும் அதில் அமர்ந்திருக்கவேண்டும். ஏழையான அசுத்தமான, நன்றிகெட்ட, நிர்ப்பந்த சிருஷ்டிகளையெடுத்து அவர் தமது குமாரனுக்கு மனையாட்டியும், தமது ஆத்துமாவின் மகிழ்ச்சியும், தமக்கு என்றுமுள்ள பங்குமாகச் செய்கிறதுதான் அன்பு. திவ்விய அன்பின் ஐசுவரியத்தைச் சொல்லி முடியுமா! அதைப் பார்த்து, ஆச்சரியப்பட்டு, அதை நம்பி, அதில் மகிழ்ந்திரு; அது உன் நித்திய தியானமாயிருக்கட்டும்; இந்தக் கல்மலையின்மேல் நம்பிக்கையோடு அமர்ந்திருக்கலாம். இந்தத் தலையணைமேல் சமாதானமாய்த் தலைசாய்க்கலாம்.
க்ருபை நன்மைகள் பொழியும்
பக்தருக்கு யாவும் சொந்தம்;
தேவசித்தம் யாவும் செய்யும்
தரும் ஆசிகள் அநந்தம்.