ஜனுவரி 13
‘அவன் விசுவாசத்தோடே கேட்கவேண்டும்‘
யாக்கோபு 1:6
விசுவாசி தன் ஜெபங்களைத் தேவனுடைய வாக்குத்தத்தங்களைக்கொண்டு ஒழுங்குபடுத்தவேண்டும். மனுஷர் அடிக்கடி தங்களுக்குத் தீமையான காரியங்கள் வேண்டியதென்று நினைக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் கேட்கிறதைக் கர்த்தர் கொடாமலிருக்கிறது கோபத்தினால் அல்ல, அன்பினாலேயே. தேவன் தமது அருமையான ஜனங்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணினதெல்லாம் நன்மையே. தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதையே கேள். அவர் தமது வாக்கைக் கனப்படுத்துவார். நிறைவேற்றுவாரென்று நம்பிக் கேள். அவர் தம்மைத் தாமே மறுதலிக்கமாட்டார்; சொன்ன வாக்குச் சகலத்தையும் நிறைவேற்றுவார் உனக்குத் தேவையாயிருக்குமானால், அவர் கொடுப்பேனென்று சொல்லியிருப்பாரானால், அவர் கொடுப்பார் என்பதைப்பற்றி நீ சந்தேகிக்க வேண்டியதில்லை. ஆதலால் ஆசையோடு எதிர்பார்த்துக் கேள். கேட்டபிறகு கிடைக்குமாறு உரைத்துக்கொண்டு நில். இந்தக் காலையில் உனக்குத் தேவையென்ன? அவைகளைத் தேவன் தமது பரிசுத்த வசனத்தில் எங்கே வாக்குக்கொடுத்திருக்கிறார்? அந்த வாக்கைத் தேடியெடு. அதை அவருடைய ஆசனத்தண்டைக்குக் கொண்டுபோ. அதை நிறைவேற்ற வேண்டுமென்று இயேசுவின் நாமத்தைச் சொல்லிக் கெஞ்சு. அவர் அதை நிறைவேற்றுவாரோவென்று ஒரு நிமிஷமாவது சந்தேகியாதே. கர்த்தருடைய வசனத்தின்பேரில் சார்ந்திரு. நீ விசுவாசியாவிட்டால் ஸ்திரமடையமாட்டாய்: தேவனை நம்புகிறதினால் விசுவாசம் அவரைக் கனப்படுத்துகிறது. விசுவாசம் கேட்கிறதைக் கொடுப்பதினால் தேவன் அதைக் கனப்படுத்துகிறார். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யவும், கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டை சேரக்கடவோம்.
எக்குறைதானிருந்தும்
நீக்கும் அவர் வல்லமை;
ஜெபத்தில் நீ வருந்தும்
போது வரும் மகிமை;
கேட்பதிலும் அதிகம்
உனக்களிப்பார் சுகம்.


