ஜனுவரி 14
கவனமாய் நடந்துகொள்ளப் பாருங்கள்‘
எபேசியர் 5:15
சத்துருவின் தேசத்தில் குடியிருக்கிறீர்கள். எப்பக்கத்திலும் சோதனைகளுண்டு. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயம் திருக்குள்ளது, மகா கேடுள்ளது. குணத்திலும் செய்கையிலும் சகலத்திலும் இயேசுவைக் கனப்படுத்த வேண்டுமென்பதே உங்கள் நோக்கமாயிருக்கவேண்டும். உங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த கர்த்தருக்கென்றே நீங்கள் உங்கள் ஜீவகாலத்தைப் பின்னிடவேண்டும். இதற்காகவே நித்திய உடன்படிக்கை செய்யப்பட்டது. இதற்காகவே விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்கள் அளிக்கப்பட்டன. இதற்கென்றே பரிசுத்த ஆவியும் கொடுக்கப்பட்டிருக்கிறார். நீங்கள் உங்கள் ஜீவகாலம் எல்லாம் நீதியாயும் பரிசுத்தமாயும் அவருக்கு ஊழியஞ் செய்யும்பொருட்டே இதெல்லாம் உங்களுக்கு அளித்திருக்கிறது; இந்த உலகம் உங்களுக்குச் சதமல்ல; சாத்தானுடைய குடிகள் உங்களுக்குத் தோழரல்ல; ஐசுவரியம், மேன்மை, இன்பம் இவைகளைச் சம்பாதிப்பது உங்கள் நோக்கமல்ல. கண்ணிகள் நடுவே நீங்கள் நடக்கவேண்டியிருக்கிறது. விழித்திருந்து ஜெபம்பண்ண இயேசுவின்பேரில் சார்ந்திருங்கள். அவரோடு ஐக்கியப்படுதலையே நாடுங்கள். இயேசுவை உங்கள் மாதிரியாகக் கண்ணுக்குமுன் வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய வசனமாகிய சட்டத்தின்படி நடவுங்கள். துணிகரமும் படபடப்பும் வேண்டாம். பொல்லாங்கென்று தோன்றுவதையும் தள்ளிவிடுங்கள். உலகத்தாருக்குப் பிரியமாய் நடக்க, உங்கள் இஷ்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கர்த்தருடைய வழிகளையும் நியமங்களையும் விட்டு விடாதேயுங்கள். இயேசுவோடு ஒட்டிக்கொண்டிருங்கள். இன்னும் அவரை அதிகமாய் அறிந்துகொள்ளப் பாருங்கள். தன் பிதாவின் வீட்டுக்குப் பிரயாணம் பண்ணும் பிள்ளையைப் போலச் சகலத்தையும் செய்யுங்கள்.
நமது நடக்கை நாவும்
வசனத்துக்கொத்து யாவும்
குணமும் செய்கையுமெல்லாம்
வேத உண்மை விளக்குமாம்.


