மே 10
‘அவர் மனப்பூர்வமாய்ச் சஞ்சலப்படுத்துகிறதில்லை
புலம்பல் 3:3
தேவன் தமக்குத் தோன்றுகிறபடி நம்மைத் தண்டியாமல் தகப்பனைப்போல ஞானமாயும் அன்பாயும் நம்மைத் தண்டிக்கிறார். நம்முடைய நோயிலும், பெருமூச்சிலும், சிறுமையிலும் அவர் பிரியப்படுவதில்லை. பதஷ்டமாய்ப் பிரம்பைக் கையாடுவதில்லை. நமக்கு உதவிசெய்ய இரக்கம் பறந்துவருகிறது. அவர் கோபிக்கத் தாமதிக்கும் தருணத்தில் உருக்கம் நிறைந்தவர். தகுந்த காரணமில்லாமல் நம்மைத் தண்டிக்கவேமாட்டார். இன்று நாம் பாவஞ்செய்தோம். செய்யவேண்டிய கடமைகளை அசட்டை செய்தோம், இரக்கத்தைத் தள்ளினோம், ஆசையில்லாமையைக் காட்டினோம், உலக சிந்தையுள்ளவர்களாயிருந்தோம், சிலாக்கியங்களையும் அவமதித்தோம், எச்சரிப்பை நெகிழவிட்டோம், சோதனைகளை அற்பமாய் எண்ணினோம், அல்லது மோசத்துக்குள் ஆனோம். முகாந்தரமில்லாமல் அவர் நம்மைத் தண்டிக்கமாட்டார். பாலத்துக்குப் பயந்து, அதை அறுவறுத்து, அதினின்று ஒடும்படி தண்டிப்பார். நம்முடைய அசுத்தமான நடக்கை அவருக்குப் பிரியமில்லை என்று காட்டத் தண்டிப்பார். தம்முடைய வழிகளில் நம்மை நடக்கும்படி, அவருடைய பரிசுத்தத்தின்மேல் வாஞ்சைகொண்டு தேடி அதில் பங்குபெற நம்மைத் தண்டிப்பார். தாழ்மையையும் பக்திக்குரிய துக்கக்தையும் நமக்குள் எழுப்பிவிட, அல்லது அதிகமாய் நேசிப்பதினால் தமது அதிகாரத்துக்குக் குறைவு வரும் என்று காட்ட, நம்மைத் தண்டிப்பார். சில வேளைகளில் கொஞ்சமாய்த் தண்டிப்பார். அவர் அன்பினாலே நம்மைத் தண்டித்து. நம்முடைய ஆத்தும சேமத்தை நாடுகிறார். ஆறுதலினாலும் சந்தோஷத்தினாலுமல்ல, துன்பங்களால்தான் நமக்கு நன்மை வரும். ரட்சகரே! ஒவ்வொரு துன்பத்தையும் எனக்கு நன்மையாகப் பலிக்கச் செய்யும்.
துன்பமென்னும் அலைகள்
என்மேலே மோதினாலும்
இயேசுவின் ஆறுதல்கள்
என் இதயத்தில் ஆளும்,
துன்பம் இன்பம் கிறிஸ்தென்னும்
பொக்கிஷம் கிடைக்கப்பண்ணும்.