மே 11
‘கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்‘
பிலிப்பியர் 4:4
இது வருத்தமான கட்டளை. சிலவேளைகளில் கர்த்தர் தம்முடைய முகத்தை மறைத்துக்கொள்ளுகிறார். அப்போது அவருடைய அன்பு நமதுபேரில் இருக்கிறதோ என்று பயந்து சந்தேகிக்கிறோம், நமக்குள் பாவம் பெலன் அடைந்து சந்தேகிக்கிறதினால் கலங்கித் திகைக்கிறோம்; சாத்தானுடைய சோதனைகளால் மடங்கடிக்கப்படுகிறோம்; தெய்வச் செயலின்படி வரும் தண்டனைகளால் கலங்கி, எல்லாம் எங்களுக்கு விரோதமாயிருக்கிறதே என்று சத்தமிடத்தக்கவர்களாய் இருக்கிறோம். நம்முடைய நிலைமையைப்பற்றியும், உணர்ச்சிகளைப் பற்றியும், தெய்வச்செயல்களைப்பற்றியும், நாம் மேன்மை பாராட்டாமல் கர்த்தருக்குள் சந்தோஷப்படவேண்டும். அவர் நித்திய நேசத்தால் நம்மை நேசித்தார். அவர் அன்பு மாறாதது. அவர் இயேசுவில் நம்முடைய தேவன். நமக்கு வேண்டியது எதுவோ, நம்முடைய நன்மைக்கு ஏற்றது எதுவோ, அதைத் தாராளமாகச் செய்வேன், தருவேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். நாம் பெலவீனமாயிருக்கும்போது அவர் பெலத்தில் சந்தோஷப்படலாம். அந்தகாரத்தில் நம்முடைய பாதையை அவர் அறிந்திருக்கிறார் என்று சந்தோஷப்படலாம். எந்த நிலைமையிலும் அவர் நம்மோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சந்தோஷப்படலாம். அவர் எப்பொழுதும் நமக்குத் தகப்பன், நமக்குச் சிநேகிதன், நம்முடைய தேவன். அவருடைய இலவசமான கிருபையிலும், ஐசுவரியமுள்ள இரக்கத்திலும், சர்வவல்லமையிலும், உண்மை நிறைந்த வாக்குத்தத்தத்திலும், விசேஷித்த திவ்விய செயலிலும், மாறாத அன்பிலும் சந்தோஷப்படுவோமாக.
நம்பிக்கையால் மகிழ்ந்திரு,
இயேசு சுவாமி வருவார்;
தமது பக்தரை
கையால் அணைத்துச் சேர்ப்பார்;
தூதரிடம் சத்தம் கேட்கும்,
மகிழ் என்றார்ப்பரிக்கும்.