ஜனுவரி 10
‘நானோ ஒரு புழு‘
சங்கீதம் 22:6
மனுஷன் இயல்பாய் ஏழையாயிருந்தாலும், பெருமையுள்ளவன். கிருபை இந்தப் பெருமையை நீக்கிப் புழுதியில் வைத்து, அவனுக்குத் தாழ்மையைப் படித்துக்கொடுக்கிறது. தேவனுக்கு அதிகப் பிரிதியான தாவீது அவருடைய மனதிற்கு ஒத்தவனாக இருந்தும், நானோ ஒரு புழுவென்கிறான். தான் பார்வையில் அற்பனும் புறக்கணிக்கப்படத்தக்கவனும் என்று அறிந்தான். தன்னைத் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான். வேதாகமத்தில் சொல்லியிருக்கும் தேவ பக்தரைப் பார்த்து அவர்கள் என்னைப்போலில்லையென்று நீ பெருமூச்சு விட்டதில்லையா? சகோதரனே! நீ ஒன்றுக்கும் உதவாத பெலவீனமான புழுவல்லவா? இதை நீ உணருகிறதில்லையா? தாவீது தன்னைப்பற்றி அப்படி உணர்ந்தான். உன்னுடைய பார்வையில் நீ எவ்வளவு அற்பனாயிருக்கிறாயோ, அவ்வளவுக்கு இயேசு உன்னைப் பாத்திரவான் என்று பார்க்கிறார். அவ்வளவுக்கு நீ கிருபாசனத்தண்டையில் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளப்படுவாய். தாவீது மாத்திரமல்ல, கர்த்தரும் தம்மைக் குறித்தும் இப்படியே சொல்லியிருக்கிறார். யூதரும் அவரைக் குறித்து இப்படியே எண்ணி இப்படியே அவரை நடத்தினார்கள். தேவ மகிமையின் பிரகாசமாயிருந்த அவர் அருவருப்பான ஒரு புழுவுக்கு ஒப்பிடப்பட்டார். பிதாவின் சொரூபமாயிருந்தவர் மிகவும் அசட்டைபண்ணப்பட்டார். மனிதராகிய நமக்காகவும் நம்முடைய ஈட்சிப்புக்காகவுந்தான் அப்படியானார். இந்த இரக்கத்தின் ரகசியம் எவ்வளவோ பெரியது. நாம் தேவதூதரிலும் மேன்மையுள்ளவர்களாகும் பொருட்டு அவர் ஒரு புழுவுக்குச் சமானமானார்.
பெத்லேம் நீங்கிக் கல்வாரி
வந்து சேருமட்டுக்கும்
துன்புற்றார் குருசேறி
உன்னை மோட்ச வீட்டிற்கும்
கொண்டுவரலாமென்று
கஸ்தி நிறைந்த யாவையும்
சகித்துப் பேயை வென்று
ஈகிறார் கிருபையும்.


