ஜனுவரி 11
‘என்னிடத்தில் வாருங்கள்‘
மத்தேயு 11:28
யேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார். உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசீர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார். நீ இருக்கிறபடியே அவரிடம் போய், உனக்கு வேண்டியதை எல்லாம் அவரிடத்தில் பெற்றுக்கொள். உன்னடிகளை நடத்த ஞானந்தருவார்; உன் இருதயத்தைப் பாதுகாக்கச் சமாதானந் தருவார்; அவர் சித்தத்தின்படிச் செய்யப் பெலன் தருவார்; உங்கள் ஆத்துமங்களைக் குற்றமற்றதாக்க நீதி தருவார்; சொல்லி முடியாத இன்பமுள்ள இளைப்பாறுதலையும் தருவார். இந்த நன்மைகளை அவர் உனக்குக் கொடுப்பதினால் அவர் மகிமைப்படுகிறார். பணமில்லாமல், விலையில்லாமல் இவைகளைப் பெற்றுக்கொள்ள இன்று காலமே, இந்த நிமிஷமே உன்னைக் கூப்பிடுகிறார். இயேசு எவ்வளவு அருமையான ரட்சகர், எவ்வளவு பக்ஷமுள்ள உத்தம சிநேகிதர். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் வாருங்கள். என்னிடத்திற்கு வாருங்கள் என்கிறார். உன்னண்டை செல்லாதே, உலகத்தண்டை போகாதே, வெறுமையான பாத்திரங்களைப்போன்ற சிருஷ்டிகளண்டை ஓடாதே. என்னண்டையில் வா. நீ கேட்பதிலும் நினைப்பதிலும் எவ்வளவோ அதிகமாக நான் உனக்குச் செய்வேன். உன் பாவங்களை மன்னிப்பேன், உனக்குக் கிடைத்த வரப்பிரசாதங்களை விர்த்தியாக்குவேன். உன் பரிசுத்தத்தை அதிகப்படுத்துவேன். என்னை மகிமைப்படுத்த நீ செய்யும் பிரயத்தனங்களை விருத்தியடையச் செய்வேன் என்கிறார். ஆ, கர்த்தரே! உம்மைத் தேடுகிறவர்களுக்கும், மனுப்புத்திரர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவோ பெரிது!
உம்முடைய வார்த்தை நம்பி
பற்றிக்கொள்வோம் ஏசுவே!
உம்முடைய உண்மைபற்றி
காத்திருப்போம் கர்த்தரே!
எங்களாவி உம்மைத்தேடி
என்றும் உம்மைச் சாருமே.


