ஜனுவரி 9
‘கெத்செமனே‘
மத்தேயு 25:36
இது ஒலிவமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு தோட்டம். இங்கேதான் ஜனங்களுக்குப் பிணையாளியாக வந்த இயேசு கோபமடைந்த தன் பிதாவின் கரத்திலிருந்து அவருடைய உக்கிரத்தின் பாத்திரத்தைப் பெற்றுக்கொண்டார். அதுதான் தேவகோபம். நமக்கு நியாயமாய்க் கிடைக்கவேண்டியது அதுதான். நாம் சகிக்கவேண்டிய தண்டனையும் அதுவே. தேவகுமாரன் நம்முடைய சுபாவத்தைத் தரித்து நம்மை ரட்சிக்கும்பொருட்டு திவ்விய நீதியினால் வருந் தண்டனையை தமக்குப் பதிலாக உத்தரித்தார். மனுஷருடைய கை அவரைத் தொட்டதில்லை, ரத்த வேர்வை அவருடைய தேகத்திலிருந்து கீழே விழுந்தபோது, மனுஷர் அவருக்குத் தேறுதல் சொல்லவுமில்லை. அவர் எதிர்பார்த்திருந்த ஞானஸ்நானம் அதுவே. அவருடைய அன்பு எவ்வளவு பெரிதென்று அது காட்டிற்று. இந்த ஞானஸ்நானத்தைப் பெறத்தான் அவர் வாஞ்சை கொண்டார். எவ்வளவு ஆச்சரியமாய்ச் சகிக்கிறார். பயங்கரமான அவர் முறைப்பாட்டைக் கேள். அவர் இருதயத்திலிருந்து புறப்படும் பெருமூச்சைக் கவனி. பூலோகமும் பாதாளமும் பிரமிப்படைந்திருக்கிறதே. மனுஷன்தான் கவலையற்றிருக்கிறான். பிரியமானவர்களே! அவர் நமக்குப் பிணையாளி. நம்முடைய கடனைக்கொடுத்துத் தீர்க்கிறவர். நம்முடைய ஆத்துமாவை ரட்சிக்கிறவர். நமக்கு வேண்டிய பாக்கியத்தைச் சம்பாதித்து, நமக்கு வேண்டிய சமாதானத்தைக் கொடுக்கிறவர். நாம் நரகத்திற்குப் போகாதபடிக்குக் கெத்செமனேக்குப் போனார். நாம் மகிமை அடையும்படிக்குத் தண்டிக்கப்பட்டார். அடிக்கடி இந்தப் பரிசுத்த ஸ்தலத்தண்டைக்குப் போ. விசுவாசத்தால் கிறிஸ்துவின் பாடுகளில் ஐக்கியப் படு. இயேசுவோடு நீ ஐக்கியமாவதற்கு அடிக்கடி கெத்செமனேக்குப் போகவேண்டும் என்று ஆத்துமாவே உனக்கு உறுதியாகக் கட்டளையிடுகிறேன்.
ரட்சகரிடமிருந்து
பாயும் ரத்த வெள்ளத்தை
பூங்காவிடம்மட்டும் சென்று
பாவி, போய் பார் நீ அதை;
உன் சுமைதான்
அவரைக் கீழ்த்தாழ்த்திற்று.


