ஜனுவரி 6
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதேயுங்கள்
பிலிப்பியர் 4:6.
கர்த்தர் நமக்காகக் கவலைப்படுகிறார். அவர் நம்முடைய குறைவுகளை அறிவார். அவைகளை நீக்குவோமென்று வாக்களித்திருக்கிறார். நம்முடைய சத்துருக்கள் இன்னாரென்று அவருக்குத் தெரியும்; அவர்களிடத்திலிருந்து நம்மை விடுவிப்பார். நம்முடைய பயங்களையும் அறிவார்; அவைகளைக் குறித்து நாம் வெட்கமடையவும் செய்வார். சகல சிருஷ்டிகளும் அவர் கரத்திலிருக்கிறது, அவர் இஷ்டத்திலிருக்கிறது.சகலத்தையும் அவரே நடத்துகிறார். தேவ தூதனுக்கு உத்தரவு கொடுக்கிறார், அடைக்கலான் குருவிகளைப் போஷிக்கிறார், பசாசை மட்டப்படுத்துகிறார், புசலை நடத்துகிறார். அவர் உன் பிதா; அவர் உன்னை நேசிக்கிற நேசம் மட்டற்றது. நீ அவருக்குச் செல்லப்பிள்ளை, அருமையான குமாரன், அன்பான மகன்; உன்னை அவர் அசட்டைசெய்வாரா? செய்யவே மாட்டார். உன் கவலைகளை அவர்மேலே வை; உன் விருப்பங்களையும், பயங்களையும், வருத்தங்களையும் அவரிடஞ்சொல்லு. உன்னைப்பற்றியதெல்லாவற்றையும் அவர் அறியட்டும். ஒன்றையும் மறைக்காதே. அவர் தம்முடைய வார்த்தையின்படி செய்து, தகப்பனைப்போல் உன்னை நடத்துவாரென்று விசுவாசித்து எதிர்பார்த்திரு. அவர் உனக்குக் கொடுத்த எல்லாவற்றிற்காகவும், கொடுப்போமென்று சொன்ன எல்லாவற்றிற்காகவும் அவரை ஸ்தோத்திரி. உனக்குத் தேவையான எல்லாவற்றிற்காகவும் அவரிடத்தில் கெஞ்சு. ஓர் நிமிஷமாவது எந்த வகையிலும் அவநம்பிக்கைக்கு இடங்கொடாதே. அவர் உன்னை நேசிக்கிறதைவிட அதிகமாய் நேசிக்கமுடியாது. அவர் சமயத்துக்கேற்ற உதவி தம்முடைய தயவெல்லாம் உன் முன் நடந்துபோகச் செய்வார். முழு மனதோடும் முழு ஆத்துமாவோடும் உனக்கு நன்மை செய்யவேண்டுமென்பதே அவரது முழு விருப்பம்.
பிதாவின் அன்பில் சார்ந்து
கவலையகற்றுவேன்;
ஜெபத்தில் வாய் திறந்து
என் வருத்தம் சொல்லுவேன்;
அவர் சித்தம் தெரிந்து
அவர் சொல்லுக்கமைவேன்.


