ஏப்ரில் 29
‘நீ ஐசுவரியமுள்ளவன்’
வெளிப்படுத்தின விசேஷம் 2:9
உண்மையான பரிசுத்தர் தாங்கள் எப்பொழுதும் ஏழைப் பாவிகள் என்று எண்ணுகிறார்கள். தேவபக்தரில் அநேகர் இவ்வுலக காரியங்களில் உள்ளபடி ஏழைகள்தான். இவ்வுலகத்தில் ஏழையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர்களாகவும், தம்மை நேசிக்கிறவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தேவன் தெரிந்துகொண்டார். அவர்கள் அடிக்கடி துன்பப்பட்டு, வருத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு சோர்வடைகிறார்கள். ஸ்மர்னா சபை இப்படித்தானிருந்தது. இயேசு அதைப் பார்த்து: நீ ஐசுவரியமுள்ளவனென்கிறார். கர்த்தருடைய ஜனங்களெல்லாம் இப்படித்தானிருக்கிறார்கள். சம்பந்தப்படி ஐசுவரியவான்கள். தேவன் அவர்கள் பிதா, இயேசு அவர்கள் மூத்த சகோதரன். பெற்றுக்கொண்ட வரத்தின்படி அவர்கள் ஐசுவரியவான்கள்; இயேசு அவர்களுக்கு ஆராய்ந்துமுடியாத பொக்கிஷங்களைக் கொடுத்திருக்கிறார். வாக்குத்தத்தப்படி அவர்கள் ஐசுவரியவான்கள். சகல நன்மைகளையும் கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார். விசுவாசத்தினால் அவர்கள் ஐசுவரியவான்கள்; விசுவாசிக்கிறவன் சகலத்தையும் சுதந்தரித்துக்கொள்ளுவான். எதிர்பார்க்கிறதில் அவர்கள் ஐசுவரியவான்கள்; தேவன் கட்டி உருவாக்கின அஸ்திவாரங்களுள்ள பட்டணத்தையே நோக்கியிருக்கிறார்கள். விசுவாசியே, நீ ஐசுவரியவான். உன்னை நீதிமானாக்க இயேசு உனக்குத் தம்முடைய நீதியையும், உன்னைச் சுத்தமாக்கத் தம்முடைய ஆவியையும், உனக்கு வேண்டியதைச் சம்பாதிக்கத் தம்முடைய நாமத்தையும், உனக்கு ஊழியஞ்செய்யத் தம்முடைய தூதரையும், உனக்கு நித்திய வாசஸ்தலமாகத் தம்முடைய மோட்சத்தையும் மரணசாசனத்தில் எழுதிவைத்து விட்டுப்போனார். ‘அருமையான ரட்சகரே, உம்மைப்பார்த்து ஆச்சரியத்தோடு உம்மை ஆராதிப்பேன்; என்னை முற்றிலும் துறந்து உம்முடைய பரிபூரணத்தைக்கொண்டு ஜீவியம் பண்ண எனக்குக் கற்றுக்கொடும்.
பாவத்தால் கெட்ட பாவி
கிருபையால் சம்பன்னன்,
ஆவியால் நித்திய ஜீவி
மோட்சத்துக்குப் பாத்திரன்.