ஏப்ரில் 30
‘நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்‘
யோபு 34:32
முன்னே நாம் குருடர், இப்போது கண் திறக்கப்பட்டவர்கள். ஆகிலும் தேவன் நமக்குச் சகலத்தையும் போதிக்கவேண்டும்; இல்லாவிட்டால் சரியானபடி நாம் ஞானிகளாகமாட்டோம். தேவன் நமக்குப் போதித்தால், நான் என்கிறது அற்பமாயும், உலகம் மாயையாயும், பாவம் கசப்பாயும், கிறிஸ்துவின் ரத்தம் மிகவும் அருமையாயும், அவருடைய நீதி மிகவும் விலைபெற்றதாயும், அவருடைய நாமம் நம்முடைய ஒரே நம்பிக்கையாயும், அவருடைய அன்பு நம்முடைய சந்தோஷமாயும், அவருடைய ஆவி நம்முடைய பெலனாயும், அவருடைய மகிமை நம்முடைய நோக்கமாயும், ‘நீர் எனக்குக் கற்றுக்கொடும்’ என்பது நம்முடைய தினசரி விண்ணப்பமாயும் இருக்கும். கிறிஸ்து தம்மில் எப்படிப்பட்டவரென்றும், தம்முடைய ஜனங்களுக்கு அவர் செய்தது இன்னதென்றும், அவரிடத்தில் உள்ளது எவ்வளவென்றும், அவரை நோக்கி உண்மையாய்க் கூப்பிடுகிறவர்களுக்கு அவர் கொடுப்பதின்னதென்றும், அவர் நம்மில் கிரியைசெய்து நமக்குக் கொடுக்கவாக்களித்திருக்கிறது இன்னதென்றும், நாம் வெகு கொஞ்சமாய் அறிந்திருக்கிறோம். சிநேகிதரே, நாம் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிந்து, அவருடைய மரணத்துக்கு ஒப்பானவர்களாகும்படி நமக்குப் போதிக்க, தேவனைப்பார்த்து நித்தம் கெஞ்சுவோமாக. நாம் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும், அளிக்கிற ஆவியைத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும் அறிந்துகொள்ளும்படி அவரிடத்தில் கெஞ்சுவோமாக. ஏகோவா மாத்திரந்தான் பிரயோஜனப்படத்தக்கவிதமாய்ப் போதிக்கக்கூடியவர்.
சுவாமி எனக்கறிவியும்
ஜீவவழி காட்டுமேன்;
க்ருபையில் வளரச்செய்யும்
கடைமட்டும் காருமேன்;
பேய் பாவம் அகற்றுவியும்
அறியாததைப் போதியும்