சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 6
இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும்
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். இவ் வாக்கியம் யாதோ ஒரு இழப்பு நேர்ந்து விட்டது என்பதை அறிவிக்கின்றது. முன் கூறினதுபோல நாமெல்லாருமே பற்பல வேளைகளில், பற்பல விதமான இழப்புக்குள்ளாகியிருக்கிறோம். அவை நமது பழமையான பொருட்களாயிருப்பினும், அவற்றைக்குறித்து பலநாட்கள் வருந்துகின்றோம். அல்லது வண்ணான் நமது கிழிந்த பழைய ஆடை ஒன்றைத் தொலைத்திருக்கலாம். அதையும் மறந்துவிட மனமற்றவர்களாய்த் திரும்பத் தேடித்தருமாறு அவனை நிர்ப்பந்திக்கிறோம். மனிதர்களாகிய நாம் இவ்வுலகப் பொருட்களைக்குறித்து எத்துணை அக்கறையுள்ளவர்களாயிருக்கிறோம் ! நமது உடைமைகளில் எதையாவது பறிகொடுக்கும்போது எவ்வளவு கவலை! ஆனால் நமது ஆவிக்குரிய நஷ்டங்களைக்குறித்து இத்தகைய கவலையும், கரிசனையும் நமக்குண்டா? கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இல்லாத வாழ்க்கை பாழ் என்பதையும், நாம் விசுவாசிகளாயிருப்பினும், கர்த்தரை மறந்து வாழும் ஒவ்வொரு விநாடியும், நமக்கு நித்திய நஷ்டமென்பதையும் கருத்தில் இருத்திக்கொள்வோமாக.
பல ஆண்டுகளுக்கு முன் ஓரிடத்தில் ஒரு வயோதிபரைச் சந்தித்தேன். அவரிடம், “நீர் தேவனருளும் இரட்சிப்பைப் பெற்றுள்ளீரா? அதை அநுபவிக்கின்றீரா?” என்று நான் கேட்டபொழுது, அவர் என்னோடு வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். எனக்கு உலகமே ஒன்றும் தெரியாது என அவர் அநுமானித்துக்கொண்டு, நான் சொன்னதையெல்லாம் அவர் பரியாசம் செய்து சிரித்துக்கொண்டிருந்தார். நான் ஒரு இளைஞன் எனவும், வயதில் முதிர்ந்தவராகிய அவருக்கு நான் எங்ஙனம் உதவிசெய்ய முடியும் எனவும் அவர் எண்ணிக்கொண்டார். அநேக மாதங்களுக்குப் பிறகு நான் அவரை மீண்டும் சந்தித்தபொழுது, அவர் முற்றிலும் மாறினவராயிருக்கக் கண்டேன். கண்களில் நீர்ததும்ப அவர் என்னிடம் வந்து, “சகோதரனே என்னை அடையாளம் தெரிகின்றதா?” என்று கேட்டார். “நீர் யாரென்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. இத்தனை மாதங்களுக்கு முன் இன்ன இடத்தில் உம்மை நான் சந்திக்கவில்லையா?” என்று பதிலுரைத்தேன். அவர் என்னைப் பார்த்து. “நீங்கள் என்னிடம் பேசிவிட்டுச் சென்ற பிறகு, எனக்கு மனஅமைதியே இல்லை. உங்களுடைய வார்த்தைகளை மறப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சித்தும், என்னால் மறக்கமுடியவில்லை. நீங்கள் கடைசியாகக் கூறிச்சென்ற வேதவாக்கியங்கள் எழுத்தாணி கொண்டு எழுதினதுபோல் என்னிதயத்தில் பதிந்தன. அவற்றை மறுபடியும் வாசித்துத் தியானிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் என்னை நெருக்கி ஏவினார். எனது உண்மையான நிலைமையை உணர்ந்தேன். எனது பாவமும், அந்தகாரமும் நிறைந்த வாழ்க்கையைத் தெளிவாகக் கண்டதுடன், நான் கிறிஸ்து இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வேனானால், அவர் என் பாவங்களையெல்லாம் மன்னித்து, என்னை மாற்றுவார் என்பதும் தெளிவாகப் புலப்பட்டது” என்று கூறினார். மிகுந்த துக்கத்துடனும், கண்ணீருடனும் அவர் மேலும் என்னை நோக்கி “என் அறுபது ஆண்டு வாழ்க்கையும் பாழாகிவிட்டதே! எனது காலம் ஒரு கதையைப் போலக் கழிந்துவிட்டதே! இப்பொழுது தான் நான் தேவனண்டை வந்தேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆகிலும், என் வாழ்க்கையின் சிறப்பான வருடங்கள் வீணாகி விட்டனவே. எனது வாலிபம் விருதாவாகி, அதன் வீரியமெல்லாம் விரயமாக்கப்பட்டதே! இவ்வளவு காலம் கழித்து அவரண்டை வந்தேனே! இப்பொழுது அவரால் பயன்படுத்தப்பட விரும்புகிறேன். இனி வரும் நாட்களிலாவது என் ஆண்டவருக்குப் பிரியமாகச் செலவிட வாஞ்சிக்கிறேன்” என்று புலம்பினார்.
உங்கள் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டாலன்றி, தேவனுடைய பார்வையில் உங்கள் காலமெல்லாம் வீணாகிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலிருக்கிறீர்களா? யோவேலின் தீர்க்கதரிசன நூல் 1;4 இல் நான்கு வகைப் பூச்சிகள் குடியானவனின் பயிரை நாசமாக்கிக் கொண்டிருப்பதாக காண்கிறோம். அவை முறையே, பச்சைப்புழு, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி, முசுக்கட்டைப்பூச்சி என்பவையாகும். மிகுந்த நம்பிக்கையோடு விவசாயிகள் இரவும் பகலும் உழைத்துப் பண்படுத்தி, விதைக்கிறார்கள். விதை முளைக்கிறது; ஆனால், பயிர் வளர்ந்து, அறுவடைக்கு ஆயத்தமாகி வரும்போது, ஏதோ பயிரைச் சேதப்படுத்துவதாகக் காண்கிறார்கள், அதாவது இந்த நான்கு வகைப் பூச்சிகளும் பயிரை அழித்துவிடுகின்றன “பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது. பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது.” எஞ்சியது எவ்வளவு? ஒன்றுமில்லை! எல்லாம் போய்விட்டது! தேவன் என்ன சொல்லுகிறார்? உமது வாழ்க்கையும் இவ்வித வயலைப்போலத்தானிருக்கிறது எனத் தீர்ப்பளிக்கிறார்.
நாம் சிறுவர்களாயிருந்தபோது நம்மிடம் பல தீயபழக்க வழக்கங்களிருந்தன. நம்முடைப அறிவீனத்தாலும், முரட்டாட்டத்தாலும் பல தவறுகளைச் செய்து நமது காலத்தை வீணாக்கி, நம் பெற்றோரைத் துக்கப்படுத்திக்கொண்டே இருந்தோம். ஆனால், நாள் செல்லச்செல்ல நமது தவறுகளை அறிந்து கொண்டோம். பாடசாலைத் தேர்வில் தோல்வியடையும்போது, “நான் இன்னும் சற்றுக் கடினமாக உழைத்திருந்தால், கவனமாகப் படித்திருந்தால், தேர்வில் வெற்றியடைந்திருப்பேனே” என்று நமது பிழையை உணர்ந்து கூறினதுண்டு. அதற்கடுத்தாற்போல் நாம் வளர்ந்து வாலிபப்பருவம் அடைகின்ற வேளையிலே, வாலிபத்தின் துர் இச்சைகளுக்கு அடிமைப்பட்டு, அவற்றால் ஆளப்பட்டு, நமது வாழ்க்கையின் சிறந்த வருடங்களை வீணாகக் கழித்துப்போட்டதில்லையோ? அநேகர் தங்களது பெற்றோராலோ,
ஆசிரியராலோ சிட்சிக்கப்பட்டு, சீர்திருத்தப்படுவதை வரவேற்பதில்லை. அவர்களுக்கு மாறுத்தரமாக, “உங்களுக்கு என்ன தெரியும்? வாழ்க்கை என்றால் என்ன என்றே உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு வயதாகிவிட்டதால், இதெல்லாம் உங்களுக்கு விளங்காது. வாசனை சோப் உபயோகிக்கத் தெரியுமா? இந்த சோப், பவுடர், வாசனைத்தைலம்-இவற்றையெல்லாம் பாருங்கள். நீங்களோ கட்டியிருக்கும் வேஷ்டியிலேயே முகத்தைத் துடைக்கிறீர்கள். நல்ல துவாலை பயன்படுத்தத் தெரியவில்லையே! நாங்களோ கல்லூரி மாணவர்கள். எங்களது அலங்கரிப்பைப் பாருங்கள், நாங்கள் முன்னேற்ற பாதையில் செல்கிறோம்; நீங்களோ பழமை விரும்பிகள்; ஒன்றுமறியாதவர்களாக, உலகப் போங்கு தெரியாதவர்களாகப் பின் தங்கியிருக்கிறீர்கள். எனவே நீங்கள் எவ்வாறு எங்களுக்குக் கற்றுக்கொடுக்கமுடியும்” என்றெல்லாம் கூறுவதுண்டு. இவ்வாறு தான் நம்மில் பெரும்பாலோர் நமது செல்வத்தையும், இளமையின் வலிமையையும் விரயமாக்கிப் போட்டதுண்டு. நல்ல பலத்துடனும், சுகத்துடனுமிருந்தபோது, சந்தர்ப்பமும், சூழ்நிலையும் சாதகமாயிருந்தபோது, வெட்கக்கேடான வாழ்க்கையை நடத்தினோம். அதையடுத்து பணமீட்டும் பருவத்தினையடைந்தபோது அப்பொழுதும் குறுகிய புத்திதான் ! தவறான வழிகளில் சம்பாதிக்கவும், சேமிக்கவும் முற்பட்டோம். பொருளாசைக்காரராகவும் காணப்பட்டோம். பண ஆசையினாலே உந்தப்பட்டவர்களாய்ப் பணத்தை நாடினோமேயன்றி, தேவைகளைத் திருப்தி செய்வதற்காக அல்ல. நமது திறமையைக்கண்டு, நம்மை நாமே மெச்சிக் கொள்ள ஆரம்பிக்கின்றோம். “நான் எவ்வளவு கெட்டிக்காரன்! இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு ஏராளமாகப் பணம் சேர்த்து விட்டேன். நான் வேலையினின்று ஓய்வு பெறும்போது என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் சவுக்கியமாய், சந்தோஷமாய் வாழ்வதற்கென்று ஒரு நிலத்தை வாங்குவேன். வீட்டைக் கட்டுவேன். தோட்டம் போடுவேன். வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து கொள்ளுவேன்” என்பதாகத் திட்டமிட்டு, நம்மையே தேற்றிக்கொள்வதுமுண்டு. நீங்கள் எதிர்பார்த்தாற்போல் மூப்படைவீர்கள். உங்கள் குழந்தைகள், வளர்ந்து, வாலிபமடைந்து, ஒன்றன்பின் ஒன்றாக உங்களை விட்டுக் கடந்து செல்வார்கள். உங்கள் பற்கள் விழுந்து, கன்னம் சுருங்கி. கூன் விழுந்து, குடுகுடு கிழவனாகிறீர்கள். நீங்கள் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதி வைத்தியருக்கும், மருந்துக்கும் செலவாகிறது. நீங்கள் விரும்பியது போல் எல்லாம் சீரும் சிறப்புமாகச் செல்லவில்லை ! மேலும் தவிர்க்கமுடியாத மரணம் உங்களை எதிர்நோக்கியிருக்கின்றது ; அப்பொழுது தான் உண்மையை உணர்ந்தவர்களாய், ஐயோ என் நாட்களெல்லாம் கழிந்து விட்டனவே. இந்த நாற்பது ஆண்டுகளாக என்ன செய்து முடித்தேன்? எதைச் சாதித்தேன்? எல்லாம் வீணாகி விட்டதே. எல்லாம் போய்விட்டதே. இனி மீண்டும் வராதே! எனது வருடங்களை பச்சைப்புழுவும், வெட்டுக்கிளியும், முசுக்கட்டைப் பூச்சியும் தின்று தீர்த்து விட்டனவே!” எனப் பரிதபிப்பீர்கள்.
மெய்யாகவே, இதுதான் உங்கள் வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டும் காட்சியாக இருக்கலாம். வாழ்க்கை முழுவதும் வீணாகி விட்டதே என்ற உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இருக்கலாம். என்றாலும் மனந்தளர வேண்டாம். திடன் கொள்ளுங்கள். உங்களுக்கும் நம்பிக்கையுண்டு. உங்களது இழப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், எவ்வளவு இழுக்குண்டாக்குவதாக இருந்தாலும், உங்கள் நஷ்டமெல்லாம் மாறும். துன்பமெல்லாம் இன்பமாகும். எல்லாவற்றையும் திரும்பப் பெறுவீர்கள். உங்கள் வாழ்வு மறுமலர்ச்சியடையும். ஏராளமான கனி கொடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் நித்திய பலனைத் தரும். இதற்காகவே நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார். யோவான் 15 : 5 இல் “நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள்” என்று இயேசுகிறிஸ்து வாக்குரைக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருப்பதன் மூலமாகவே, நிலைத்திருக்கும் கனி கொடுப்போம். பழைய காலத்தின் இழப்பு யாவுக்கும் நஷ்டஈடு கிடைக்கும். அதுவே இரட்சிப்பின் பெரும் அற்புதம். நாம் நமது ஜீவியம் முழுவதுமே எவ்வளவு வெட்கக்கேடான், பாவ வழிகளில் நஷ்டப்படுத்தி இருந்தாலும், கிறிஸ்துவண்டை வந்து, அவருடன் இணைக்கப் பெறுவதின் மூலம் நாம் மிகுதியான கனிகளைக் கொடுக்கலாம்.
சில சமயங்களில், நாம் சற்றேனும் எதிர்பாராத நஷ்டங்கள் நமக்கு நேரிடுகின்றன. இஸ்ரவேலில் திடீரென்று ஒரு பெரிய பஞ்சம் வந்ததாக, 2 இராஜாக்கள் 4 : 38 இல் நாம் வாசிக்கிறோம். மழை இல்லாதபடியால் தானியம் எங்குமே கிடைக்கவில்லை. அங்கு மிகுந்த வறட்சியும், விளைச்சலின்மையும் ஏற்பட்டு, மக்கள் அற்ப உணவிற்காகவும், அங்குமிங்கும் அலைந்து, கிடைத்ததையெல்லாம் தின்ன ஆரம்பித்தனர். அவர்களுக்கு அரிசியோ, கோதுமையோ, காய்கறி, பருப்போ ஒன்றும் கிடைக்கவில்லை. பூண்டுகளையும், தழைகளையும், இலைகளையும் சமைத்துச்சாப்பிட்டனர். இக்காலத்திலும் ஒரு பெரிய பஞ்சம்-ஆவிக்குரிய பஞ்சம்-உலகமெங்கும் பரவலாக நிலவுகின்றது. அழகிய நகரங்களையும் வானளாவும்மாளிகைகளையும் அகலமான சாலைகளையும் அமைத்தாலும், பிரமாண்டமான தொழில் நிறுவனங்களும், கலாசாலைகளும், கல்லூரிகளும் துவங்கப்பட்டாலும், மேலும் பிரம்மிக்கத்தக்க பல நவீன அற்புதச் சாதனைகளைச் செய்து முடித்தாலும், நமது உலகம் இன்று வெகுவாக முன்னேறி விட்டது, வளம் பொருந்திய புதிய பூமியைப் புனைந்து விட்டோம் என்று பெருமிதங்கொண்டாலும், கர்த்தரின் கண்களில் இவ்வுலகம் வெறுமையான, பாழான, பாலைவனமாகத்தானுள்ளது. இப்பூமியைப் பயங்கரமான வனாந்தரமென்றே வேதாகமம் வர்ணிக்கிறது. இது எல்லாம் சுட்டெரிக்கப்படும், பழையனவெல்லாம் சேர்க்கப்பட்டு சீக்கிரமொரு நாள் அக்கினிக்கிரையாக்கப்பட்டு, புதியன புகுதல் வேண்டும் என்று வேதாகமம் விளம்புகின்றது.
இஸ்ரவேலில் தேர்ந்த பஞ்சத்தின விளைவாக மக்கள் புசிப்பதற்குகந்த புல்பூண்டுகளையும், இலைதழைகளையும், கீரைவகைகளையும் சேகரித்து, அவற்றைப் பக்குவப்படுத்தி பசியாற்றி வந்தனர் என்று 2 இராஜாக்கள் 4 ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். எதையாவது உண்டு, எப்படியாவது உயிர்வாழ்வதற்குக் காடுகளுக்குச் சென்று தேடி வந்தனர். அதே விதமான நிலைமை தான் இன்றும் உலகத்தில் நிலவுகின்றது.
ஒரு பக்கம் மக்கள் தங்களது கல்வியறிவு, அறிவியல் முன்னேற்றம் பொருளியல் வளர்ச்சி எனப் பெருமை பாராட்டுகின்றனர். மற்றொரு புறம் பாவச் சேறுள்ள இடங்களில் அழுக்கடைந்து, அழுந்திக் கொண்டிருக்கின்றனர். சினிமாக்கொட்டகைகளிலும், துன்மார்க்கமான இடங்களிலும் எவ்வளவு நேரத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆத்துமாவைக் கெடுக்கும் ஆபாசம் நிறைந்த பத்திரிகைகளையும், நஞ்சூட்டும் நாவல்களையும், பிற மோசமான நூல்களையும், தாங்கள் போகுமிடமெல்லாம் தங்களுடன் கொண்டு சென்று அதில் மகிழ்ந்திருக்கின்றனர். சென்ற அரை நூற்றாண்டாக நான் உலகின் பல்வேறு பாகங்களிலும் சுற்றி வரும் சிலாக்கியம் பெற்றிருக்கிறேன். இரயிலிலும், பஸ்களிலும், கப்பல்களிலும், விமானங்களிலும் பல மொழியினரையும்,’ஜாதியினரையும், பல தன்மையுடைய மக்களையும் ஏராளமாகச் சந்தித்திருக்கிறேன். அவர்களெல்லாரும் அநேகமாக அறிவாளிகளும் ஆற்றலுடையோரும், கர்ம வீரரும், வாழ்க்கையில் வெற்றிகண்டோருமாயிருக்கின்றனர். நல்லவர்கள் போலத் தோற்றமளிக்கும் ஆண்களும், பெண்களும் தங்களுடன் எடுத்துச் செல்லும் நூல்களையும், நாவல்களையும், சஞ்சிகைகளையும் கவனித்திருக்குங்கால் அவையெல்லாம் விஷமுள்ள, பாவ இருள் நிறைந்த, காம விகார ஏடுகளாயிருப்பதையும், அவற்றில் ஆழ்ந்து மெய்மறந்து மணிக்கணக்காக அவற்றை வாசிப்பதையும் பார்த்திருக்கிறேன். இஃது உலகில் பாவம் எவ்வளவு நிறைந்திருக்கிறது என்பதைச்சற்றே வெளிப்படுத்துகிறது.
2 இராஜாக்கள் 4 :39 இல் தீர்க்கதரிசிகளின் புத்திரர் கீரை பறிக்கக் காட்டுக்குச் சென்றபோது, ஒருவன் பேய்க்கொம்மட்டிக்காயைக் கண்டான். பார்வைக்குப் பகட்டாக இருந்தது! அதன் காய்களை ஏராளமாய் அரிந்து வந்து, அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கூழ் பானையிலே போட்டான். அதன் வண்ணத்தையும், வடிவத்தையும் கண்டு, புசிப்புக்குகந்தகாய்தான் என வெளித்தோற்றத்தின்படியே நிதானித்துக்கொண்டனர். “நமது யோகந்தான், இவ்வளவு எளிதாாக, நிறைய காய்கள் கிடைத்துவிட்டன. இன்றைக்கு நல்ல விருந்தில்லாவிடினும், போதுமான உணவு கிடைக்கும்” என்ற நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் அதைச் சமைத்தனர், ஆனால் அந்த உணவைப் பரிமாறும்போது, பெருந்தவறு நடந்துவிட்டது எனப் புத்திசாலி ஒருவன் புரிந்து கொண்டான். அதைக் கண்களால் பார்த்தவுடன், அல்லது முகர்ந்து ருசி பார்த்தவுடன், அது கொடிய விஷம் என்று விளங்கிக் கொண்டான். “தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது” என்று சத்தமிட்டான், அவர்களெல்லாரும் பந்தியிலமர்ந்திருந்தனர். ஒரு சிலர் புசிக்கத் தொடங்கி விட்டனர். இந்த எச்சரிப்பின் கூச்சலைக் கேட்டவுடன், இடிவிழுந் ததுபோல எல்லாரும் அதிர்ச்சியடைந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். அவ்விடமெங்கும் சலசலப்பும், பரபரப்புமாக இருந்தது. காரணம், பானையில் சாவுக்கேதுவான விஷம் இருந்தது.
இவர்களெல்லாரும் தீர்க்கதரிசிகளின் புத்திரரென்றும், தேவனுடைய ஊழியக்காரரென்றும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு நடைமுறை விவகாரங்கள் அதிகம் தெரியவில்லைபோலும். செடி, கொடி கீரைகளைப்பற்றிய அறிவும் குறைவு. எனவேதான் நஞ்சுக் கொடியை நல்லதென்று நம்பி, தங்கள் கைகளாலேயே விஷத்தைச் சமைத்துச் சாப்பிட ஆரம்பித்தனர். இவ்விதமாகவே அநேக நல்ல ஆண்களும் பெண்களும் தங்கள் குடும்பங்களில், தங்களையுமறியாமலே, சாவுக்கேதுவான காரியங்களைக்கொண்டு வந்து விடுகின்றனர். அநேக தாய், தகப்பன்மாரும், கணவர்களும், மனைவிகளும் சகோதர சகோதரிகளும், ஞானம், அறிவு, புத்தி இல்லாதகாரணத்தால், தங்கள் வாழ்க்கைகளிலும், வீடுகளிலும் மரணத்தைக் கொண்டுவந்து விடுகின்றனர். அறியாமலும், உணராமலும், தாங்கள் போகுமிடமெல்லாம், தங்கள் பிள்ளை களுக்கும் சாவுக்கேதுவான விஷத்தைப் புகட்ட ஆரம்பிக்கின்றனர்.
மறுபிறப்படையாதவர்களின் வாழ்க்கையும் இவ்வாறேயுள்ளது. தங்களுடைய இதயங்களிலும், இல்லங்களிலும் எவ்வாறு சாவுக்கேதுவான நஞ்சு நுழைகின்றது என்பதை அறியாமல், தாங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இன்பமாக வாழ்வதாக எண்ணி, இறுமாப்படைந்து, இறுதியில் ஏமாந்துபோகிறார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் மரணம் தாண்டவமாடுவதைக் காணலாம். தங்கள் பேச்சிலும், பழக்க வழக்கங்களிலும் மற்றவர்களுக்கு அதைப் பரப்புகின்றனர். தெய்வீக வெளிச்சத்தில்தான் இப்பரிதாப நிலைமையிலிருந்து நீங்கள் மாற முடியும். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்பது தேவனுடைய மாறாத பிரமாணம். ஆவிக்குரிய மரணத்தை உண்டாக்குவதற்கு ஒரு சிறிய பாவமே போதுமானது.
சில வகையான நஞ்சுகள் வஞ்சிப்பனவாகவுள்ளன. அவற்றில் ஒரு சிறு துளி விஷமும் உடனே உயிரைக் குடித்துவிடும். அநேகர் அவ்விதமாக மரித்துப்போனதுண்டு. இதுபோலவே ஒரு சிறிய பாவ நினைவும், பேச்சும், செயலும் இருக்கின்றன. இவற்றால் கொடிய நஞ்சைப் போஜனபானம் பண்ணுகிறோம். பஞ்சத்தால் வாடின பக்தர்கள், பந்தியிலிருக்கும்போது, பானையில் சாவு! உணவில் விஷம் இருப்பதாக எவரோ எச்சரிப்புக்குரல் எழுப்பியவுடனே செய்தது என்ன? மருத்துவர்கள், நிபுணர்களின் உதவியை நாடிச் சென்றார்களா? இல்லை. தேவ மனுஷனாகிய எலிசாவிடம் நேரடியாகச் சென்றனர். அவர்கள் உலகத்தாரின் உதவியைத்தேடியலையாமல், தேவமனிதனை நாடினது, அவர்களைப் புத்திசாலிகள் என்று காட்டுகிறது. “ஓ, தேவமனுஷனே, கூழ்ப்பானையில் விஷமிருக்கிறது. நாங்கள் நஞ்சுண்டு விட்டோம். இப்போ சாகிறோமே! அன்பு கூர்ந்து எங்களுக்கு ஆதரவளியும். இல்லாவிடில் சில விநாடிகளில் மடிந்து விடுவோம்” என்றனர்.
நீங்களும் இதே படிப்பினையை ஒரு நாளில் படிப்பீர்கள். ஆனால் அப்பொழுது நீங்கள் நினைப்பதைவிட நேரம் பிந்திவிடுமே! உல்லாசத்திலும், பரிகாசத்திலும், வேடிக்கையிலும், கேளிக்கையிலும் உங்கள் வாழ்நாளையெல்லாம் வீணாக்கி விட்டு, “இல்லை, நாங்கள் செம்மையாய்த்தான் வாழ்கிறோம்,” என்று தேற்றிக்கொள்கிறீர்கள், “நாங்கள் தான் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வதெனக் கற்றுக்கொண்டோம். பூரணமாய் வாழ்கிறோம்; வாழ்க்கையின் முழுப்பயனையும் அனுபவிக்கிறோம்” என்றெல்லாம் நீங்கள் கூறலாம். ஒருநாள் அதிவேகமாக வருகின்றது. அந்நாளில் நீர் மரண அபாயத்திலிருப்பதை அறிந்து கொள்வீர். நீர் மட்டுமல்ல, உமது குடும்பத்தினர் எல்லாருமே மரணத்தின் பிடியில் சிக்கியிருப்பதையும், நரகத்திற்குச் செல்வதற்குத் தான் தகுதி என்பதையும் உணர்ந்து கொள்வீர். காலம் கடந்துவிட்டபடியால், அப்பொழுது யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. எவருடைய உதவியும் உமக்கு உதவாது. அந்த ஞானமுள்ள இளைஞர்கள் புத்தியுடன் தேவ மனுஷனையண்டினார்கள் (வ41). எலிசாவின் கட்டளைப்படியே, அவர்கள் கொஞ்சம் மாவைப் பானையிலிட்டபோது, அந்த விஷம் எடுபட்டது. அதன் விளைவும் முறிக்கப்பட்டது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் “நானே ஜீவ அப்பம். என்னைப் புசிப்பதின் மூலம் என்றென்றும் ஜீவனோடிருக்கலாம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே” என்று அன்புடன் அழைக்கிறார். இந்த ஒரு அப்பம் (ஆகாரம்) மாத்திரமே உங்கள் வாழ்க்கையில் பாவத்தினால் விளைந்த விஷத்தையும், மரணத்தையும் எடுத்துப்போட முடியும்.
அத்தீர்க்கதரிசிகளின் புத்திரர் பசியாயிருந்தார்கள், அவர்களது உணவில் கலந்திருந்த விஷம் நீங்கி விட்டபோதிலும், அவர்கள் பசி நீங்குவது எவ்வாறு? பசிக்கொடுமையோ தாங்க முடியவில்லை. அவ்வேளையில் எலிசாவிடம் ஒருவன் இருபது முதல்தரமான வாற்கோதுமை அப்பங்களைக் கொண்டுவந்து கொடுத்தான். உடனே, தனது வேலைக்காரனிடம், “ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு” என்று எலிசா பணித்தான் (வ43). அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். வந்திருந்ததோ இருபது அப்பங்கள்தான். மேலும் அவர்கள் நன்றாகச் சாப்பிடக்கூடிய வாலிபர்கள். பகிர்ந்தளிப்பதற்கு அவை எம்மாத்திரம்? திடகாத்திரமான நபர் ஒருவருக்குத்தான் அது திருப்தியான ஆகாரம்! அங்கு குழுமியிருந்தவர்கள் நூறு பேருக்குமதிகம். “இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி? எங்ஙனம் அவர்கள் பசி தீரும்?” என்று மிகுந்த ஐயத்துடனும், ஆச்சரியத்துடனும் வேலைக்காரன் கேட்டான். “அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டபின் இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று எலிசா கூறினான். கர்த்தருடைய வார்த்தையின்படியே நடந்தது. கர்த்தர் அதைப் பெருகப்பண்ணினார். அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதிகம் மீதமாயுமிருந்தது.
இன்றும் பலர் தங்களது சரீர – ஆத்தும பசியை உலகப் பிரகாரமான வழிகளிலேயே தீர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அவர்கள் ஆகாரத்திற்காக அதிகப்பணம் செலவழிக்கின்றனர். அதிகமாகச் சாப்பிடுகின்றனர், விலையுயர்ந்த நேர்த்தியான ஆடைகளினாலே தங்களை அலங்கரிக்கின்றனர். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை விதவிதமாக ஆடை அணிந்து கொள்கின்றனர். மாதந்தோறும் புதுப்புதுத் துணிகளை வாங்கி, நவநாகரீகமாகத் தைத்துக்கொள்கின்றனர் அவர்கள் திருப்தியடைகிறார்களா? இல்லை. சிலருக்குக் காலை உணவிலேயே உண்பதற்குப் பல உண்டிகளிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் புசித்தும், அவர்கள் திருப்தியடைவதில்லை. இந்தச் சரீரத்துக்குரிய போஜனத்தைப் பெரிதுபடுத்தி, கிறிஸ்துவாகிய ஜீவ ஆகாரத்தைப் புசிக்க மறந்ததால், மரணத்தையே போஜனபானம் பண்ணுகிறார்கள். அவர்கள் உணவில் நஞ்சு இருக்கிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவாகிய ஜீவ அப்பத்தில் விஷமில்லை. இந்த ஆவிக்குரிய அப்பத்தைப்புசித்த பாக்கியவான்கள், மாம்சத்துக்குரிய ஆகாரம் சிறிதளவு கிடைத்தாலும், அல்லது கர்த்தர் எதைத்தந்தாலும், அதில் பரம திருப்தியும், மகிழ்ச்சியுமடைவார்கள். அவர்கள் இதயங்கள் நன்றியாலும் துதியாலும் நிரம்பியிருக்கும். உள்ளக் கனிவோடு தேவனை ஆராதித்துப் பாவமாகிய சாவைக் குடித்ததினாலுண்டான நஷ்டம் நீங்கி, இழந்துபோனதையெல்லாம் திரும்பப்பெற்றுக்கொள்கின்றனர்.
சில விஷம் வயிற்றில் சென்று, பின்பு நரம்புகளையும்; மூளையையும் பாதிக்கக்கூடியவைகளாயும் இருக்கின்றது, அது மெதுவாக வேலைசெய்யும். பாவமும் அப்படியேதான்! பாவத்தில் ஜீவிப்பவர்களும் அனுதினமும் விஷத்தையே புசித்துக்குடித்து, வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு உண்டானதெல்லாம் வீணும், வியர்த் தமுமாகி, மனம் மாறுதலைக் காணாமல் வாழ்க்கையை முடிப்பீர்கள். இவ்வுலகை விட்டுப் பிரியும் வேளை தோல்வியும், நஷ்டமும், நாசமும், வெட்கமும், துக்கமுமே உங்கள் பங்காயிருக்கும். ஆதலால், இப்பொழுதே ஜீவ அப்பமாகிய இயேசுகிறிஸ்துவைப் புசித்து, ஜீவதண்ணீராகிய அவரையே பானம் பண்ணுங்கள் என்று உங்களை அழைக்கின்றோம். நீங்கள் உவப்புடன் இணங்கி இப்படிச் செய்வீர்களென்றால், இந்த ஜீவ அப்பமானது பாவத்தின் விளைவுகளை உங்கள் சுபாவத்தினின்றும் போக்கி, உங்கள் தன்மையை மாற்றி, நீங்கள் இழந்ததையெல்லாம் மீண்டும் பெற ஒத்தாசை செய்யும். இந்த ஜீவ அப்பம் உங்களை நித்திய ஞானமுடையவர்களாகவும், மாறாச் செல்வமுடையவர்களாகவும், நீடிய பலமும் சக்தியும், நித்திய திருப்தியுமுடையவர்களாகவும் மாற்றும். “தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான். அப்படியே, அறியாமை, பாவம். தீட்டு ஆகியவற்றால் விளைந்த தீமை, நன்மையாக மாறும். துன்பம், இன்பமாகும். இழப்பு, ஈடு செய்யப்படும். பெரிய விடுதலையுண்டாகும். எலிசாவைவிடப் பெரியவர்; தீர்க்கதரிசிகளிலும் மேலானவர்; எல்லாரிலும் மகா மேன்மையுள்ளவர் எம்பெருமான் இயேசுகிறிஸ்து. அவர் இந்த ஜீவ ஆகாரத்தை அன்புடன், இலவசமாக, அனைவருக்கும் அளிக்கின்றார். அவரிடம் வந்து வாங்கிக்கொள்ளுங்கள். “நீங்கள் அப்பமில்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றி திராட்ச ரசமும் பாலும் கொள்ளுங்கள். நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாயிருக்கும்” (ஏசாயா 55:1-3).