சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 5
தாவீதின் மூன்றாவது இழப்பு
(2 சாமுவேல் 11)
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். நாம் ஒவ்வொருவரும் இந்தத் துணுக்கில் “தாவீது”க்குப் பதிலாக நமது பெயர்களை வைத்து, வாசித்து, இவ்வாக்கியத்தின் உண்மையை விசுவாசத்தினால் உரிமை பாராட்டி, சொந்தமாக்கிக்கொள்வோமாக. பரிசுத்த ஆவியானவர் தாமே நமது இதயங்களில் இதை அழியா எழுத்துக்களால் எழுதுவதற்கு இடங்கொடுப்போமாக. நீர் ஒரு வேளை மந்த புத்தியுள்ளவராக இருந்தாலும், உம்மால் வேறெதையும் நினைவுபடுத்த முடியாவிட்டாலும், இச்சில வார்த்தைகளை நினைவிலிருத்த முயற்சியுங்கள். தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான். “தாவீது” என்னுமிடத்தில் உமது பெயரையே வைத்து, இத்துணுக்கைத் திரும்பத்திரும்ப சத்தமாகச் சொல்லுங்கள். அப்பொழுது இதுவே உங்களது அனுபவமாகவும் மாறும்படி மன்றாடுங்கள். உங்கள் அனுபவத்தைப் பிரதிபலிக்கும் சொற்றொடராகுமட்டும் ஜெபியுங்கள். உங்களது நஷ்டம் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும், ஆண்டவருக்கு அது. ஒரு பொருட்டன்று. அதன் காரணம் எவ்வளவு வெட்கக்கேடாக இருந்தாலும் பரவாயில்லை. இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். எந்த நாட்டைச் சேர்ந்தவரெனினும் அவரது நஷ்டத்தின் அளவு எதுவாயிருப்பினும், ஒவ்வொரு பாவியடைந்த ஒவ்வொரு நஷ்டத்தையும் திருப்பித் தருவதற்கென்றே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார்.
நாமெல்லாருமே நமதுசிறு பிராயத்திலிருந்து இதுவரை பல பொருட்களையும் இழந்திருக்கின்றோம். புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள் என்று பல சிறுபொருட்களையும் நமது பள்ளி நாட்களில் இழந்திருக்கின்றோம், பெரியவர்களானபோது, பேனாக்கள், செருப்பு, குடை, சாவி,கடிகாரம், பணம் என்று பல பொருட்களையும் இழந்திருக்கின்றோம். நீங்கள் இழந்தவற்றையெல்லாம் நினைவுபடுத்தி, ஒரு பட்டியல் தயாரியுங்கள். அதன் பின்பு. நீங்கள் இழந்த பொருட்களெல்லாம் பத்திரமாக உங்களிடம் ஒரு நாளில் கொண்டுவரப்படுகின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அது மிகுந்த மகிழ்ச்சி தரும் பெரிய நிகழ்ச்சியாக இருக்குமல்லவா! இவ்விதமாகவே, அநேகர் தங்களது சுகத்தையும், சிலர் தங்கள் பிள்ளைகளையும், சிலர் நண்பர்களையும், இன்னும் சிலர் தங்களது சந்தோஷத்தையும் இழந்து விட்டனர். இழந்துபோன இவையெல்லாவற்றையும் திரும்பப்பெற்றுக்கொண்டால் எப்படியிருக்கும் என்று சற்று எண்ணிப் பாருங்கள் ! ஆனால் நம்முடைய ஆவிக்குரிய இழப்புகளையெல்லாம் ஒன்றுவிடாமல் திருப்பிக்கொள்ளக்கூடுமானால், அது இன்னும் எவ்வளவு அதிகமான இன்பத்தைத் தரும்! நாம் புத்தியில் மந்தமானவர்களாகையால், உண்மையில் நாம் எவ்வளவு ஆவிக்குரிய நஷ்டங்களையடைகிறோம் என்று அறியாமலும், உணராமலும் இருக்கின்றோம். நமது ஆவிக்குரிய இழப்புகளை உணர்ந்துகொள்வதற்கும், சரிவரக் கணிப்பதற்கும் தேவனின் ஒத்தாசை நமக்குத் தேவைப்படுகின்றது.
2 சாமுவேல் 11 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவீதின் மூன்றாவது நஷ்டமானது, விசுவாசிகள், அவிசுவாசிகள் ஆகிய இரு பிரிவினருக்குமே ஒரு பெரிய படிப்பினையுடையதாயிருக்கின்றது. முதலாவதாக, மனிதனின் இதயத்திலுள்ள அக்கிரமத்தையும், மாய்மாலத்தையும் நாம் வெளிப்படையாகக் காணச் செய்கிறார். நாம் யாராயிருந்தாலும், வெளித்தோற்றத்தின்படி எவ்வளவு நல்லவராகவும், அருமையானவராகவும் இருப்பினும், உள்ளத்தில் யாவருமே ஒரே மாதிரியான அழுக்கும், ஆபாசமும், தீயகுணமும், தீட்டுமுள்ளவராகவே இருக்கிறோம். நமது ஜீவியத்தில் உண்மையில்லை. நமது மெய்யான நிலையை அறிந்துகொள்வதற்கு நமக்கு விருப்பமில்லை. யாராவது எடுத்துரைத்தாலும் நமது உள்ளம் புண்படுகின்றது, நமது பெருமைக்குப் பங்கம் விளைகிறது; சினமடைகின்றோம். எனவே, முகக்கண்ணாடிபோல, அகத்தின் நிலையை இருக்கிற வண்ணமாகக் காட்டும் வேதாகமத்தின் மீது சீற்றமடைகின்றோம்; இடறுகின்ரறோம். சிலர் நெஞ்சம் புண்பட்டவர்களாய் இருதயக் கண்ணாடியாகிய வேதாகமத்தையே வெறுக்கின்றனர். அவர்கள், முன்பின் முகக்கண்ணாடி கண்டிராத கருப்பரைப் போலொத்தவர். ஒரு சமயம்-ஒரு நீக்ரோ, கடை வீதியிலே ஒரு கடையில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கண்டானாம். முதல் தடவையாக தன் உருவத்தைக் கண்ணாடியில் கண்டவுடன், தன்னைக்குறித்துத் தான் எண்ணியிருந்ததைவிடக் கேவலமாகக் காட்சி தந்த அக்கண்ணாடி மீது சினமடைந்தான். கரியைவிட கருப்பாகவும், தடித்துத் தொங்கும் உதடுகளையும், காதுகளையும் கண்டு, வெகுண்டு, தன் அழகைக்கெடுத்து, தன்னை அவலட்சணமாக்கின, அவமதித்த, அக்கண்ணாடியை சுக்குநூறாக உடைத்து விட்டானாம். ஆனாலும் அவன் முகம் மாறவில்லையே; அவன் இருந்த வண்ணமாகவேதான் இருந்தான்.
இவ்வாறே, தமது மெய்யான நிலையை, உண்மையான தோற்றத்தைக் கண்டறிய எவருமே விரும்புவதில்லை. நாமிருப்பதைவிட சிறப்பாகக் காணப்படவே ஆசிக்கின்றோம். ஒரு சிலர் தங்களது வீடுகளிலே மிக அழுக்கான ஆடைகளை அணிகின்றனர். அவர்களது வேஷ்டி ஆறு மாதமாகத் துவைக்காதது போலிருக்கும். அவர்களது தலையணையுரை சலவைக்கே செல்லாததுபோல, அழுக்குப்பிடித்து, எண்ணெய் படிந்து, கருப்பாகக் காட்சியளிக்கும். ஆகிலும் இதே பேர்வழிகள் வீட்டினின்று வெளியேறி வரும்போது, நல்ல ஆடை அலங்காரத்துடன், இனிமையாகவும், உற்சாகத்துடனுமிருக்கின்றனர். வரவேற்கத்தகுந்த வகையில் தோற்றமளிக்கின்றனர்! வேறொரு வகையான ஆட்களுமிருக்கின்றனர். அவர்கள் வீட்டின் வெளிப்புறத்தை அழகாக வைத்திருப்பவர்கள். வீட்டு முகப்பில் அல்லது கூடத்தில் எல்லாம் தூய்மையாகவும், நேர்த்தியாகவும், விலையுயர்ந்த ஆசனங்கள், தட்டுமுட்டுகளுடன் காட்சியளிக்கின்றன. ஆனால் அவர்களது குளிக்கும் அறையையோ மற்ற இடங்களையோ சென்று பார்த்தால் மூக்கைப் பொத்திக்கொள்ளவேண்டியதுதான்! சமையலறை முழுவதும் புகைபிடித்து, அழுக்கேறி இருக்கின்றன. இதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தால், வீட்டு எஜமானி படித்துப்பட்டம் பெற்றவள் என விடை கிடைக்கின்றது. எனவே, தன்னைச் சிங்காரிப்பதற்கும், வீண் நேரம் போக்குவதற்குமே காலம் போதாதிருக்கும்போது, இதர காரியங்களைக் கவனிப்பது எங்ஙனம்? இதே போன்று, அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் புறத்தோற்றம் ஒன்றாகவும், அகத்தில் வேறுவிதமாகவும் இருக்கின்றன. ஆனாலும்,’ ஒவ்வொருவரின் இதயமும், உள்ளான ஜீவியமும் எவ்வாறிருக்கின்றது என்று ஆண்டவருக்கு எல்லாம் நன்றாகத்தெரியும். ஏனெனில் சிருஷ்டியும் அவர் முன்னிலையில் நிர்வாணமாகவும், வெளியரங்கமான கோலமாகவுமிருக்கின்றது. நமது உண்மையான நிலையை நமக்குச் சொல்லுவார். அவருடைய நிபந்தனைகள் நம்மை மிகவும் தாழ்த்துவதாக இருந்தாலும், நமது உண்மையான நிலையைக் கர்த்தர் காண்பிக்கும்போது,அதை அறிந்து வரவேற்பது ஞானமாகும்.
நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்லும்போது, உங்கள் நோய் இன்னதென்று ஆராய்ந்தறிந்தாலன்றி, சரியாக வைத்தியம் செய்யமுடியாது. ஆதியிலே, காசநோயின் காரணத்தைக் கண்டு பிடிக்குமுன்பு, காசநோயால் பீடிக்கப்பட்டோரைப் பல பேய்கள்தான் பிடித்திருக்கின்றன என்று மக்கள் கருதி வந்தனர். காசநோயுள்ளோரை எங்காவது ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து விடுவர். பல வருடங்களானாலும், அவர்கள் இறக்குமட்டும் அங்கேயே நம்பிக்கையும், ஆதரவுமின்றி கைவிடப்பட்டவர்களாயிருந்தார்கள். ஆனால், இக்கொடிய நோய்க்குக் காரணமும், பரிகாரமும் கண்டு பிடித்தபின், அதைப்பற்றிய அச்சம் நீங்கிற்று. நான் ஒரு சமயம் டென்மார்க் நாட்டிற்குச் சென்றிருந்தபொழுது, அநேக ஆரோக்கிய சாலைகள் வெறுமையாயிருக்கக் கண்டேன். காரணந்தெரியாத காலமட்டும் காசநோயுற்றோரை அங்கு அனுப்பி வைத்தனர், ஆனால் இப்பொழுதோ, அந்த நோயையே அந்நாட்டிலிருந்து வேரோடு பிடுங்கி விட்டனர். அப்படியே நம்முடைய இதயங்களின் உண்மையான நிலைமையை அறிந்து கொள்வது பயனளிக்குமல்லவா? தேவன் தம்முடைய ஊழியக்காரர் மூலமாகவோ, வேதவாக்கியங்களின் மூலமாகவோ உங்கள் உள்ளான நிலைமையை உணர்த்தும் போது கோபித்துக்கொள்ளவேண்டாம். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார்?” என்று தேவன் கூறுகிறார் (எரேமியா 17:9).
இப்பொழுது 2 சாமுவேல் 11 இல் தாவீதின் சரிதையைச் சற்று பார்ப்போம். தாவீதை முதன் முதலில் 1 சாமுவேல் 16 : 18 இல் பார்க்கும்போது அவனைவிட நல்லவர், பண்பாடுள்ளவர், சிறந்தவர் வேறு இருக்கமுடியாது எனக் கூறலாம். இது எல்லாரும் ஏகமாய் ஏற்றுக்கொண்ட உண்மை. தன் சிறு வயதுமுதலே தாவீது தேவனுக்குப் பயப்படுகிறவனும், ஞானியும், நல்லவனும், நேர்மையுள்ளவனுமாக இருந்தான. மேலும் அவன் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்ட மனிதன். ஆகிலும் ஒருவன் எவ்வளவுதான் கல்வியும் – கலாச்சாரமும் உடையவனாக இருந்தாலும், அவையெல்லாம் அவனுடைய அடிப்படைத்தன்மையையோ, இதயத்தையோ மாற்றி விடுவதில்லை. மனிதருக்குத் தங்களின் இயல்பான சுபாவம் என்ன வென்று தெரியாது. தாவீது ஒரு விசேஷித்த மனிதன்தான். அக்கிரமங்களும், பாவங்களும் நிறைந்த வாழ்க்கை நடத்துவதற்கென்று தோன்றவில்லை தாவீது. அநேக பிள்ளைகளிடம் பிறப்பு முதலே துன்மார்க்க ஜீவியத்திற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அவர்களது சொற்களும், செயல்களும் இதை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் வளருகின்ற போது துர்க்குணங்களும், தீயபழக்கங்களும் மென்மேலும் தெளிவாகின்றன. ஆனால் தாவீது இப்படிப்பட்டவனல்ல. அவன் கர்த்தருக்குப் பிரியமான நல்லதொரு வாழ்க்கையை நெடுங்காலமாக நடத்தி வந்தவன். அவன் தீமையை வெறுத்து, அதற்குத் தூரமாய் விலகியிருந்தவன். ஆனாலும் அவனையுமறியாமலே அவனுக்குள் ஒரு தீய சுபாவம் இருந்தது. தேவன் அதைக் களைந்தெறிந்து, அவனை முற்றிலும் மாற்றினாலொழிய, அவனைப் பெருமளவில் உபயோகிக்க முடியாது. தேவன் அவனைப் பார்த்தறிந்து கொள்வதற்காகவே 2 சாமுவேல் 11 இன் சம்பவம் நிகழ்ந்தது. மிகவும் தந்திரமாக, சூழ்ச்சித்திறனோடு பிசாசு தாவீதைச் சோதித்தான். இந்தச் சோதனைக்குரிய சூழ்நிலையை உருவாக்குவதற்கேதுவான நல்ல தருணத்திற்காக பிசாசு பதிவிருந்து பல காலமாகக் காத்துக் கொண்டிருந்தான் என்பதை இவ்வதிகாரம் முதல் வாக்கியத்திலிருந்து அறிகிறோம்.
“ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது” என்றும், “தாவீதோ எருசலேமில் இருந்து விட்டான்,” என்றும் வாசிக்கிறோம். போர் முனையில் இருக்க வேண்டிய வீரனாகிய தாவீது, போருக்குப் போவதற்குப் பதிலாக, எருசலேமில் தன்னுடைய வீட்டில் தாபரித்திருந்தான் என்று பார்க்கிறோம். இது மனிதருடைய பார்வையில் சிறு குற்றமாகக் காணப்பட்டாலும், தேவனுடைய கண்களில் இது மாபெருந் தவறாகக் காணப்பட்டது. தாவீது அரசனும், வீரனுமானபடியால், தானே தலைமை தாங்கி, தன் மக்களைப் போரில் நடத்திச் சென்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவன் எருசலேமில் தங்கியிருந்து விட்டான். அது மாலை மயங்கும் வேளையென்றும், தாவீது பராக்கிரமசாலியாயிருந்தும், அந்நேரம் வரை தூங்கிவிட்டான் என்றும் இரண்டாவது வாக்கியம் நமக்குத் தெரிவிக்கின்றது, விழித்திருக்கவேண்டிய வேளையில் தூங்குகின்ற அநேகருண்டு, அவர்கள் எங்கும், எந்நேரத்திலும், சபை கூடிவரும் போதும் தூங்கும் ஆற்றலுடையவர்கள்! அவர்களை யாராவது தட்டியெழுப்பித் தூங்கவேண்டாமெனக் கூறினால், தாம் தூங்கவில்லையென்றும், ஜெபித்துக் கொண்டிருந்ததாகவும் கூறிச் சமாளிப்பர். இந்த வஞ்சகமான முறையில், வல்லவனாக தாவீது சோம்பேறியானான். எவ்வாறு படிப்படியாக சோதனைக்காரன் தாவீதை வீழ்ச்சிக்கு வழிநடத்துகிறான், பாரீர் !
பிசாசு மிகவும் சூழ்ச்சியும், தந்திரமுள்ள கொடிய சத்துரு. தாவீது தனது அரண்மனையின் மேல்மாடியிலே சாவகாசமாக உலாவிக் கொண்டிருக்கும் போது சத்துருவானவன் சோதனையை எதிராகக் கொண்டு வந்து விட்டான். தாவீது, பத்சேபாளோடு பாவத்திற்குட்பட்டான் ! பின்னர் இந்தப்பாவத்தை மூடி மறைப்பதற்கு, தாவீது பல வழிகளையும், உபாயதந்திரங்களையும் தேடவேண்டியதாயிற்று. அவனது ஒரு பாவத்தை மறைக்க, மேலும் பல பாவச்செயல்களுக்குத் திட்டமிட வேண்டியதாயிருந்தது. ஆதலால் அவன் ஒரு மாய்மாலக்காரனானான். அவன் பத்சேபாளோடு செய்த பாவம் சீக்கிரத்தில் அம்பலமாகிவிடும் என்று அறிந்தவுடன், பத்சேபாளின் கணவனாகிய உரியாவைப் போர்க்களத்திலிருந்து வரவழைத்தான். உரியா வந்த பொழுது, யோவாபையும், படையையும் குறித்து மிகுந்த அக்கறையுள்ளவன்போல தாவீது சேமநலம் விசாரிக்க ஆரம்பித்தான். இதன் மூலம், தான் ஒன்றுமறியாதவன்போலக் காட்டிக் கொண்டான். என்ன மாய்மாலம்! எல்லாம் தனது பாவத்தை மூடுவதற்காகத்தான் ! அவன் உரியாவைக்கனம் பண்ணினதெல்லாம் உரியாவிற்காக அல்ல. பத்சேபாளுக்காகத்தான்! உரியா என்ற ஒரு சாதாரண பிரஜையை மரியாதை செய்வதற்காக அல்ல ; தனது பாவத்தை மறைப்பதற்காக மட்டும் தான். பின்னர் உரியாவிடம், “உரியாவே, நீ மிகவும் களைத்திருக்கின்றாய். மீண்டும் நீ, நீண்ட பயணம் செல்ல வேண்டியதாயிருக்கின்றது. ஆகையால் நீ உன் வீட்டிற்குச் சென்று, வெந்நீரில் குளித்து, இளைப்பாற வேண்டாமா? உனக்கு அதிக ஓய்வு தேவை” என்று மிகவும் பரிவுடன் கூறினான்.
அந்தநாளில் ராஜா எவ்வளவு அன்பும் அனுதாபமும். உள்ளவராயிருந்தார் ! உரியா ஒரு சாதாரணப் போர்ச்சேவகன்தான்; என்றாலும் ராஜா அவனை எவ்வளவாகப் பாராட்டினான். எவ்வளவு கருணையும், கரிசனையுமுடையவனாகக் காணப்பட்டான். உரியா ராஜ சமுகத்தை விட்டுப் புறப்பட்டவுடனே தாவீதினுடைய கட்டளைப்படியே, அரண்மனையிலிருந்து உச்சிதமான பொருட்களையும், உணவுப் பண்டங்களையும், கனிவர்க்கங்களையும், உரியா தன் ஆயுள்நாட்களில் பாத்திராத பலகாரங்களையும் வேலைக்காரர் உரியாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அதெல்லாம் எதைக்காட்டுகின்றது? ஒருபாவம், பின்பு இரண்டாவது பாவத்திற்கும், அது மூன்றாவது, நான்காவது என்று முடிவில்லாத பாவத்திற்கும் வழிநடத்துகின்றது ! இஸ்ரவேலின் மாபெரும் மன்னன்: ஞானமுள்ள அரசன்-இப்பொழுது முதல்தரமான விபசாரக்காரனும், பின்பு கள்ளனும், ஏமாற்றுக்காரனும், வஞ்சிக்கிறவனும், அதன் பின்பு மாய்மாலக்காரனும், பொய்யனும், கொலைகாரனுமாய் மாறிவிட்டான்! எல்லாம் அந்த ஒரு தப்பிதத்தை-பாவத்தை -மூடிமறைப்பதற்காகத் தான்! உரியாவோ, அன்றையத்தினம் தனது வீட்டிற்குச் செல்லாமல், அரண்மனை வாயிற்படியிலே சேவகரோடு படுத்திருந்தான், மறுநாளும் தாவீது உரியாவை வற்புறுத்தி, மேலும் சில நாட்கள் அவன் ஓய்வு எடுத்துக் கொள்ளவும், தனது வீட்டிற்குச் சென்று களைப்பு நீங்கிப்பிறகு போருக்குத் திரும்பலாம் என்றும் சிபாரிசு செய்தான். பொதுவாக பட்டாளத்திலே லீவு வேண்டுமென்று விண்ணப்பித்தால், அனுமதி கிடைக்க ஆறுமாதகாலமாவது ஆகின்றது. தன் மனைவியோ, பிள்ளையோ, அல்லது நெருங்கின உறவினரோ மிகவும் சுகவீனமாயிருப்பதாகக் கூறினாலும், உடனே விடை கொடுத்தனுப்புவது அரிது. ஆனால் உரியா விடுமுறைக்காக மனுசெய்யாமலிருக்கும் போதே, அவன் அரச விருந்தாளியாக அழைக்கப்பட்டான்; அவனுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கின்றது. ஏனென்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அரசனே அனுமதித்தும், வற்புறுத்தியும், உரியா தன் வீட்டிற்குச் செல்லவில்லை. அவன் இதயம் போர்க்களத்தில் இருந்தது. இஸ்ரவேலின் வீரர்களெல்லாம் போர்முனையில் போராடிக் கொண்டிருக்கும் போது, உரியாமட்டும் தன் வீட்டிற்குச் சென்று இன்பமனுபவிக்க இணங்கவில்லை. தாவீதின் தந்திரம் பலிக்கவில்லை: இறுதியில், யோவாபின் மூலம் உரியாவையே ஒழித்துக் கட்டவேண்டியதாயிருந்தது. என்ன சோகம் ! என்ன துர்ப்பாக்கியம்! ஞானமுள்ள ராஜா ஒரு கொலைகாரப்பாவியானான், உரியாவைக்கொல்ல வேண்டுமென்று அவன் கனவிலும் கருதவில்லை; அல்லது விபசாரக்காரனாகவும் விரும்பவில்லை. காரியம் இவ்வளவு மிஞ்சி விடுமென்றும், தான் இப்பாவங்களுக்கெல்லாம் உட்படுவோவாம் என்றும் அவன்;சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன் இதயத்தின் ஆழத்தில் மறைந்துகிடந்த இயல்பை தாவீது இதுகாறும் அறிந்துகொள்ளவில்லை. சோதனைகள் எதிரிட்டு வந்தபோதுதான் தன் இதயத்தில் எவ்வளவு துன்மார்க்கம் குடிகொண்டிருத்திருக்கிறன்றது என்பதைக்கண்டு கொண்டான்.
சில தொற்றுநோய்களையுண்டுபண்ணும் கிருமிகள் தேகத்தில் புகுந்துவிடும்போது, அவ்வியாதிகளுக்குரிய அறிகுறிகள் உடனடியாகக் காணப்படுவதில்லை. சில ஆண்டுகள் சென்றபின்பு, நோயின் வேகம் அதிகரிக்கும்போது, திடீரென்று, எதிர்பாராவண்ணம் சில நாட்களுக்குள்ளாகப் பாதிக்கப்பட்டோர் படுத்தபடுக்கையாகி விடக்கூடும். ஆனால் இது நெடுங்காலமாகவே மறைந்துகிடந்தது. இதை முதலிலேயே கண்டுகொள்ள முடியாமைக்குக்காரணம் என்னவென்றால், இந்தவியாதி ஆரம்பத்தில் எவ்விதத் தொந்திரவும், எவ்வித இடையூறுமின்றி, நன்றாக உண்டு, உறங்கி, உல்லாசமாக இருக்கச் செய்ததேயாகும். நோய் முற்றி வெளிப்படும்போது, அவர்களது நெருங்கிய நண்பர்களும், தங்களுக்கு இதுகாறும் ஒன்றும் தெரியாதே என்று வியப்புறுகின்றனர்.
தாவீதின் வாழ்வில் நேர்ந்த இம்மாபெரும் தாழ்வு திருமறையில் ஏன் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது? .நாமும் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு, வீழ்ச்சியுறாதபடி காக்கப்படவேண்டுமென்று, நமது எச்சரிப்புக்காக திருஷ்டாந்தமாய் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது. சாத்தான் எப்படியெல்லாம் நம்மை வஞ்சிக்கக்கூடும் என்பதை நாமறிந்து கொள்ள வேண்டியது மெத்த அவசியமாகும். நாமெல்லாரும் பாவசுபாவத்தோடு தான் பிறந்திருக்கிறோம். ஆனால் இந்தப்பாடத்தை தாவீது பாவத்தில் விழுந்த பிறகு தான் கற்றுக்கொண்டான் என்று 51 – ஆம் சங்கீதத்தில் பார்க்கின்றோம். “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என்தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (வ 5). 1 சாமுவேல் 16 ஆம் அதிகாரத்தில், மக்கள் எல்லாரும் தாவீதை, உத்தமன், கர்த்தருக்குப் பயப்படுகிறவன், பெரிய விசுவாசி, நல்லவன் என்றும் அன்பும், பண்பும், அறிவும், ஆற்றலும் படைத்தவனென்றும், எவ்வளவாகப் புகழ்மாலை சூடினார்கள் என்று பார்க்கின்றோம். இவையெல்லாம் மனிதரின் மதிப்பீடுகளும், பட்டங்களுமாகும். இவை எக்காலமும் நிலைத்திருக்க முடியாது. ஒருவரும் தன்னில்தானே நல்லவரல்லர். எந்தக் கல்வித்திட்டமும், அறிவுரைகளும், சீர்திருத்தப் போதனைகளும், முறைகளும் நமது இயல்பான பிறவிச் சுபாவத்தை மாற்றமுடியாது. நாம் பாவத்தோடு பிறந்திருக்கிறோம். ஒருநாள் அவ்வியற்கை சுபாவம் வெளிப்படும். ஒருவேளை நெடுங்காலம் கழித்து, வெட்கக்கேடான காரியங்களைச்செய்ய நம்மைத்தூண்டிவிடும் என்பதை மறக்கக்கூடாது.
உமது உண்மையான தன்மையையும், நிலைமையையும் மனிதரிடம் மறைத்து விடலாம்; ஆனால் தேவனிடம் ஒன்றையும், ஒருபோதும் மறைக்க முடியாது. தேவன் நமது பாவசுபாவத்தை வெளியரங்கமாக்குவதின் நோக்கம், நம்மை மன்னித்து மாற்றுவதற்காகவே. தாவீதைத் தாம் தெரிந்துகொண்ட பாத்திரமாய் பயன்படுத்தும் முன்பாக, தேவன் அவனை மாற்றி மறுரூபமாக்க வேண்டியதாயிருந்தது; அவனை மாசறக்கழுவி, சுத்திகரித்துத் தூய்மைப்படுத்த வேண்டியதாயிருந்தது. இப்பொழுது சங்கீதம் 51-இல் தாவீது என்ன கூறுகின்றான் எனப்பாருங்கள், தான் யார் என்பதையும், தன் இதயத்தின் யதார்த்தமான நிலை யாது என்பதையும் கண்டு கொண்டான். “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்: என்னைக்கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிசெய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின என் எலும்புகள் களிகூரும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்” (51;7-10). எல்லாராலும் பாராட்டப்பட்ட அதே தாவீது இவ்வாறு அறிக்கையிடுகிறான். நொறுங்குண்ட இருதயத்தோடு அங்கலாய்க்கிறான். “தேவனே, சுத்தஇருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நவமான, தூய்மை, வாய்மையுள்ள சுபாவத்தைத்தாரும். முற்றிலுமாக என்னைக் கழுவி, என் அக்கிரமம் நீங்க என்னைச் சுத்திகரியும்.”
தேவன் பார்க்கிறவிதமாகவே, உங்கள் இதயத்தின் நிலையை அறிந்துகொள்ள ஆவலாயிருக்க வேண்டும். “நீர் ஒரு பாவி” என்று ஒரு தேவனுடைய பிள்ளை சொன்னால், “என்னைப் பாவியென்று வர்ணிப்பதற்கு உனக்கு என்ன நியாயம் இருக்கிறது?” என நீர் சீற்றமடைவீர். “என் அயலகத்தாரையும், நண்பர்களையும் விசாரித்துப்பார்’ என்பீர். ஆனால் தேவன் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்? உங்களை எவ்வாறு எடைபோடுகிறார்? தேவன் உங்களை ஆராய்ந்துபார்க்க இடங்கொடுங்கள். பாவத்தைப் பாவம் என்று கூறுங்கள்! பார்வையிழந்தவரை குருடன் என்றழைத்தால் உடனே அவனுக்குக் கோபம் வரும். அவரை, “சூர்தாஸ் எவ்வாறிருக்கிறீர்?” என்றால் சந்தோஷப்பட்டுக்கொள்வார். வட இந்தியாவில் கண்தெரியாதோரை கபோதி என்றோ குருடர் என்றோ கூப்பிடுவது இல்லை. “சூர்தாஸ்” என்ற பார்வையிழந்த பக்த கவிஞரின் பெயரைச்சூட்டி அழைப்பார்கள். அப்பொழுது குருடர் சினமடையார். ஆனால் திருமறை, பாவத்தைப் பாவம் என்றே அழைக்கின்றது. நீர் யாராயிருந்தாலும் சரி, வழக்கறிஞரோ, வைத்தியரோ, கனதனவானோ, சீமானோ, ஞானியோ, மூடனோ, அல்லது ஏழை எளியவரோ கடவுள் முன்னிலையில் நீர் ஒரு பாவிதான், கொடிய, பயங்கரமான, பாழ்பட்ட, பாதகச்செயல் நிறைந்த, ஆக்கினைத் தீர்ப்புக்காளாகும் பாவிதான். காய்ந்த இலைக்கும், உதிர்ந்த பூவுக்கும், புழுவுக்கும், களிமண்ணுக்கும் நீர் சமமானவரே என்பது நினைவிலிருக்கட்டும்.
நாம் அப்படித்தான் பிறந்திருக்கின்றோம் என்று திருமறை விளம்பரப்படுத்துகின்றது. இருந்தாலும், இவையெல்லாம் மாற்றப்படமுடியும்-தேவனுக்கே மகிமையும் துதியுமுண்டாவதாக. ஒரு பாவி, பரிசுத்தவானாகலாம். தீட்டுள்ள அசுத்தன் தூய்மையடையலாம். பாவங்களினின்று விடுதலையாகி, பாவ அழுக்குள்ள கந்தைகளுக்குப் பதிலாக, பரலோக நீதியின் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். உம்முடைய மெய்யான நிலையை தேவனிடம் அறிக்கை செய்யும். உம்முடைய நிலைமையில் நீரே மாற்றங்களையுண்டாக்க முயற்சிக்க வேண்டாம். உம்மை நீரே திருத்திக்கொள்ள முற்படுவது, உமது காலைப் பிடித்துக்கொண்டு நீரே உம்மைத் தூக்குவதற்கு ஒப்பாகும்! தேவனிடம் வந்து, “ஆம் ஆண்டவரே, நான் பாவிதான்; நான் பெரும்பாதகம் செய்துள்ளேன்” என்று உறுதிப்படுத்தும். வேறு எவ்வகையிலும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். “இல்லை, நான் என் நண்பனை விட, அடுத்தவரை விட, எவ்வளவோ சிறந்தவன்” என்றோ; “நான் பாவிதான்; ஆனாலும் பட்டங்கள் பெற்று பதவிகள் வகிக்கின்றேன்” என்றோ: “நாகரிகமுள்ளவன், ஒழுக்கமுள்ளவன்” என்றோ சாக்குப்போக்குச் சொல்ல முற்பட்டால், நீர் இருக்கின்றபடியே இருந்து விடுவீர். தேவன் உம்மிடத்தில் அருள்கூர்ந்து அநுதாபப்படுகிறதால், நீர் ஒன்றையும் ஒளிக்காமல், உண்மையைக் கூறி, உம்மை மன்னித்து, மாற்றி, நவமான இதயத்தையும், நல்மனச்சாட்சியையும் அருளும்படி ஆசையுடன் கேளும். நீர் எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வீர். மரணப்பிடியிலிருக்கும் நீர் பூரணஜீவனைப் பெறுவீர். வறட்சி மாறி, வழிந்தோடும் வாழ்வு பெறுவீர். ஏராளமான கனிகொடுப்பீர். உம்முடைய ஒவ்வொரு சொல்லும், செயலும் நிலைத்திருக்கும், நித்திய கனி கொடுக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதற்காகவே உமக்குப் பதிலாக மரித்து, உமது தண்டனையையெல்லாம் தம் மீது எடுத்துக்கொண்டு, எல்லாப்பாவக் கடனையும் செலுத்தித் தீர்த்துவிட்டார். ஆனால் உம்முடைய சம்மதமும், ஒத்துழைப்புமில்லாமல் ஒன்றும் செய்யமாட்டார். ஆகையால் உமது இதயத்தைச் சுத்திகரிக்கும்படி அவரை வரவழைத்து, ஏற்றுக்கொள்ளும். தாவீது விண்ணப்பித்தது போலவே, நீரும் கர்த்தரிடத்தில், உண்மையுடனும், தாழ்மையுடனும் விண்ணப்பித்தால், அவர் நிச்சயமாகவே உமது வேண்டுதலைக் கேட்டுப் பலனளிப்பார்.