சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 3
தாவீதின் முதலாம் இழப்பு
(1 சாமுவேல் 29-30)
நம்முடைய ஆவிக்குரிய நஷ்டங்களையெல்லாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற இச் சத்தியத்தை எப்பொழுதும் நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். உம்முடைய நஷ்டம் எவ்வளவு பெரியதாயிருந்தாலும், அதற்குக் காரணம் எதுவாயிருந்தாலும் அதை நிச்சயமாகவே திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்று அதை மீட்டுக் கொள்கிற வேளையிலே இழந்ததை விட அதிகமாகவும், திரளாகவும் பெற்றுக் கொள்ளலாம்: என்றாலும் கைக்கொள்ள வேண்டிய ஒரே நிபந்தனை என்னவெனில், தேவனுடைய வார்த்தைக்கும், சத்தத்திற்கும், சட்டத்திற்கும் கீழ்ப்படிவதற்கு ஆர்வமுடன் ஆயத்தமாயிருக்க வேண்டியதே. ஏனென்றால் தேவனுடைய சட்ட திட்டங்களை யாரும் மாற்ற முடியாது. பணம், பட்டம், பதவியினால் ஒருவரும், ஒருக்காலும், தெய்வீக ஒழுங்குகளை மாற்ற முடியாது. அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடப்பதேயன்றி வேறெந்த முயற்சியும் வீண். மேலும் இவ்விதிகளும், ஒழுங்குகளும் யாவருக்கும் பொருந்தும். ஒருவரும் விதிவிலக்கல்ல.
தாவீது பெருத்த நஷ்டத்தை யடைந்திருந்தான் என்று முன்பே பார்த்தோம். தாவீது அன்பும், அறிவும், ஆற்றலும் உடைய அரசனாயிருந்தாலும், இறைவனின் இதயத்திற்கேற்றவனாயிருந்தாலும், அவன் நான்கு சந்தர்ப்பங்களில் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு, வீழ்ச்சிக்கும் பெரும் நஷ்டத்திற்குமாளானான். ஆகிலும், தேவனுடைய கிருபையினாலும், ஒத்தாசையினாலும் எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொண்டான். அந்த நான்கு தடவைகளும் அவனது வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து எவ்வாறு எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான் என்று நுட்பமாகக்கவனிப்போம். முதலாவது நஷ்டம் 1 சாமுவேல் 29 : 1-4ல் கூறப்பட்டிருக்கிறது. சவுலுக்கு எதிராகப் போரிடச் சென்ற பெலிஸ்தருடைய சேனையோடு தாவீது சேர்ந்து கொண்டான். தன்னைத் தள்ளி விட்டு தேவன் தாவீதை அரசனாகத் தெரிந்து கொண்டபடியால் சவுல் பொறாமை நிறைந்தவனாய்த் தாவீதைக் கொன்று போடும்படி பன்முறை முயற்சித்தான். தாவீதைத் தன் ஜென்ம விரோதியாகக் கருதி அவனை நீர்மூலமாக்க பல ஆண்டுகளாக அவனைப் பின் தொடர்ந்து அலைக்கழித்து வந்தான். தாவீது அங்குமிங்கும் அலைந்து திரிந்து, இறுதியில் பெலிஸ்தரின் பிரபுக்களில் ஒருவனாகிய ஆகீஸிடம் அடைக்கலம் புகுந்தான்.
பெலிஸ்தரின் சிற்றரசர்களும், பிரபுக்களும் தங்கள் படைகளையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு சவுலோடு போர்புரிய புறப்பட்டார்கள். தாவீதும், அவர்களோடு கூடப் போனான். ஆனால் பெலிஸ்தரின் அதிபதிகள் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள், “இவன் ஒரு யூதனாயிற்றே ! இவன் திடீரென்று நமது கட்சியை விட்டு சவுலோடு சேர்ந்து கொள்ளலாமல்லவா? என்ன செய்வானென்று யாருக்குத் தெரியும்?” என்று அவர்கள் பயந்தார்கள். ஆனால் ஆகீஸ் மட்டும், தாவீதை முழுவதும் நம்பினான். அவன் “தாவீது இத்தனை நாளும், இத்தனை வருடங்களும், என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்துசேர்ந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டு பிடிக்கவில்லை” (வ;3) என்று கூறினான். ஆனால் இதர பிரபுக்கள் தாவீதை நம்பாமல், ஆகீஸின் ஆலோசனைக்கு இணங்கவில்லை. ஆதலால் தாவீது ஏமாற்றத்தோடு திரும்பினான். அது அவனுக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. சவுலின் மீது பழி தீர்த்துக் கொள்வதற்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம், இப்பொழுது நழுவி விட்டதே அவன் துக்கத்திற்குக் காரணம். “என் எதிரியாகிய, சவுல் எத்தனை காலமாக என்னைக் கொன்றுபோடுவதற்கு வகைத் தேடித்திரிகிறான். நான் அவனுக்கு ஒரு தீங்குமிழைக்கவில்லையே! சவுலைக் கொன்று போட இருமுறை நல்ல வாய்ப்புகள் கிடைத்தும், அவனுக்கு இரங்கி அவனைத் தப்பவிட்டேன். ஆனாலும், எனக்கு விரோதமாய்ச் சதி செய்கிறானே. என் செய்வேன்?” என்று ஏங்கினான். இறுதியாக, சவுலுக்கு எதிராகப் போரிடச் சென்று, பெலிஸ்தரின் சேனைகளோடு சேர்ந்து கொண்டான். சவுலை இஸ்ரவேலுக்கு இராஜாவாக அபிஷேகம் பண்ணியிருந்தது தாவீதுக்கு நன்றாய்த் தெரியும், சவுல் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவனாக இருந்தபோதிலும், அவன் இன்னும் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அரசன்தான். எனவே தாவீது சவுலைத் தொடாதவண்ணம் தேவன் தடுத்து வந்தார். இப்பொழுதோ, தாவீது பொறுமையை இழக்க ஆரம்பித்தான். துன்பத்தை அனுபவித்து அலுத்துப் போயிருந்தான். “நான் சவுலுக்கு விரோதமாய்ச் கனவில் கூட எந்தக் கேடும் நினையாதிருந்தும், என்னை அழித்து விட முயற்சிக்கிறானே. உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, அகதியாக அலைந்து திரிகின்றேனே. வேட்டையாடப்பட்ட பறவை போலிருக்கிறேனே! எனது இன்றியமையாத தேவைகளுக்கும் எனது நண்பர்களின் தயவையல்லவா நாடியிருக்கின்றேன் ! இன்னும் எவ்வளவு காலம் நான் இவ்வாறு துன்பப்படுவது? எப்பொழுது விடுதலை கிடைக்கும்? எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு என்கின்றார்களே ! அப்படியானால் என் உபத்திரவத்திற்கு ஓர் எல்லையில்லையா?” என்று தன்னுள்ளத்தில் குழம்பிக் கொண்டிருந்தான்.
நம்முடைய துன்பங்களும் நெடுங்காலமாக அதிகரித்துக் கொண்டே போகும் போது நாமும் தாவீதைப் போலவே சிந்தனை பண்ணி நமக்குள் விவாதிக்கிறோம். எத்தனை நாட்கள் நான் துன்பமனுபவிப்பது? நான் ஒரு மனிதன் தானே – தேவதூதனல்லவே! பாடுகள் நிறைந்த பூலோகவாசிதானே – பரலோகத்தானல்லவே ! இயற்கைக்கு மிஞ்சிய சக்தி எதுவும் என்னிடமில்லையே. துன்புறும் என் வாழ்க்கையைச் சற்று பாருங்கள்! இத்தனை ஆண்டுகளாக நான் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். நான் தவறாமல் வேதம் வாசிக்கிறேன். ஆராதனைக்குச் செல்கின்றேன். தேவனைப் பிரியப்படுத்தக் கூடிய யாவும் செய்து வருகின்றேன். எவருக்கும் தீங்கு செய்வதில்லை. கேடுநினைப்பதுமில்லை. இவையெல்லாம் செய்தும், தேவன் என்னுடைய உபத்திரவத்தைப் பார்ப்பதற்கும் மறுக்கின்றாரே!” என்றெல்லாம் முணுமுணுத்து, தேவனுக்கு விரோதமாய் முறையிடுகிறோம். நமக்குப் பயங்களும் சந்தேகங்களும் எழும்புகின்றன. வேறு வழியின்றி பொறுமையிழந்து தவறான ஆயுதங்களைப் பிரயோகிக்கத் துவங்குகின்றோம். நாமே நமது விடுதலையின் மார்க்கங்களைத் தேடிக் கொள்கிறோம்.
ஆனால் தாவீது தேவனுடைய மனுஷனாயிருந்தான். தேவனை நன்கு அறிந்திருந்தான். தேவன் தனக்கு அருளிச்செய்த நன்மைகளையெல்லாம் மறக்கவில்லை. எத்தனையோ சந்தர்ப்பங்களில் தேவன்தாமே குறுக்கிட்டுத் தன்னை விடுவித்திருக்கிறார் என்றும், நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஆண்டவரின் ஆலோசனையைக் கேட்டு அதின்படியே, செய்ததையும் நினைவுகூர்ந்தான். எங்கு சென்றாலும், எதைச் செய்தாலும், முதலில் ஆண்டவரிடம் சென்று விசாரிப்பதுதான் அவனது வழக்கம், தேவனுடைய சித்தத்தைக் கண்டுகொள்ளும் வழியையும் அறிந்திருந்தான். வெளியே புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக, தேவசித்தத்தை அறிந்திருந்தான். தேவ சித்தத்தை அறிந்து கொள்ளும்படி பிரதான ஆசாரியனையும் கலந்து கொள்வான். இதை 1 சாமுவேல் 3 :1-10ல் பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டுக்காலத்தில், ஊரீம், தும்மீம் என்ற விலையேறப் பெற்ற கற்களின் உதவியால் தேவனுடைய சித்தத்தைப், பிரதானஆசாரியன் அறிந்து சொல்லுவான். அவ்விதமே, இஸ்ரவேலிலே, வேறு யாருக்காகிலும், எதைக் குறித்தாவது, இதயத்திலே பாரமிருக்குமாயின், பிரதான ஆசாரியனிடம் விசாரிக்கலாம். யார் வேண்டுமானாலும், பிரதான ஆசாரியனிடம் சென்று, “ஐயா! தயவு செய்து இந்தக் காரியத்தில், என்னைக் குறித்து தேவனுடைய சித்தம் என்ன வென்று சொல்லுங்கள்” என்று கேட்பதுண்டு.
இப்பொழுதும், தேவன் தன்னோடிருந்து, தனக்கு ஒத்தாசை செய்து வருகிறார் என்று தாவீதுக்குத் தெரியும். ஆனால் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும், தேவனிடம் ஆலோசனை கேட்காமலே, தாவீது, பெலிஸ்தரோடு சேர்ந்துகொண்டு, போருக்குச் சென்றான். அவன் பொறுமையிழந்தவனாய்ச், சவுலின் மீது பழி தீர்த்துக்கொள்வதற்குத் தீவிரமாகப் புறப்பட்டான், மனுஷீகப் பிரகாரம் எண்ணத் துவங்கினான். “நான் சவுலினிடம் பட்டிருக்கும் பாடுகளுக்கு அளவேயில்லை. என்னைத் தேவன் இராஜாவாகத் தெரிந்து கொண்டு, அபிஷேகம் பண்ணின பின்பும், நாதியற்றவனாய், வீட்டையும் நாட்டையும் விட்டு, ஆடை ஆகாரமின்றி, அலைகின்றேனே ! கெபிகளிலும் குகைகளிலும் ஒளித்துக்கொண்டு, சத்துருக்களின் மத்தியில் அகதியாக அடைக்கலம் புகுந்திருக்கின்ற இந்த நிர்ப்பந்தமான நிலை என்றைக்கு மாறும்? நான் இனியும் தாமதிக்கப்போவதில்லை என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும்,” என்று தாவீது தனக்குள்ளே தர்க்கித்துக்கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய். பெலிஸ்தரோடு, சேர்ந்தாவது சண்டைக்குப் போகலாமெனப் புறப்பட்டான்.
தாவீதும் அவனது மனிதரும் சிக்லாகு திரும்பினபோது தான் தாவீது தன் தவறை உணர்ந்தான். அவர்களது கூடாரங்களெல்லாம் சுட்டெரிக்கப்பட்டிருக்கக் கண்டார்கள். அமலேக்கியர் அவர்களது மனைவிமார்களையும், பிள்ளைகளையும் சிறைப்படுத்திக்கொண்டு பொருள்களையும் கொள்ளையடித்துக்கொண்டு போய்விட்டனர். இவையெல்லாவற்றிற்கும் தாவீதின் தவறுதான் காரணம். பெலிஸ்தரோடுகூடச் செல்லும் முன்பாக, தேவனிடம் விசாரிப்பதற்குப் பதிலாக தனது புத்தியையும், பலத்தையும் சார்ந்திருந்தான். அதன் விளைவு, அவர்கள் திரும்பி வந்த வேளையிலே அவர்கள் கண்ட சாட்சி என்ன? தங்கள் கூடாரங்களெல்லாம் தீக்கிரையாக்கப்பட்டு, பண்டம் பாடிகளையெல்லாம் பறி கொடுத்தவர்களாய்ப், பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களாய், கதிகலங்கி நின்றார்கள். வேறு வழியின்றி, கண்களைக் கசக்கினர். கண்ணீர் விட்டனர். கூக்குரலிட்டு அழுதனர். மேலும் அழுவதற்குப் பலமில்லாமல் போகு மட்டும் ஏங்கி ஏங்கி அழுதுகொண்டேயிருந்தனர். அவர்களது நஷ்டத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை! அவர்களது, துக்கம் அவ்வளவு கொடிதாயிருந்தது! தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். அவனைக் கல்லெறிய வேண்டுமென்று அவர்கள் பேசிக் கொண்டார்கள் (1 சாமுவேல் 30:6).
துன்பங்கள் பெருகும் பொழுது சிநேகிதர்களும் சத்துருக்களாக மாறி விடுகின்றனர். தன்னைக் கல்லெறிய வேண்டுமென்று, தன் தொண்டர்கள், திட்டமிடுவதைத், தாவீது அறிந்தபோது எவ்வாறிருந்திருக்கும்? என்ன செய்வதென்றே தாவீதுக்குத் தெரியவில்லை, அவர்களெல்லாரும், தாவீதின் உத்தமமான தொண்டர்கள் தான். அவனோடு எவ்வளவோ கஷ்டநஷ்டங்களை சகித்தவர்கள்தான். ஆனால் இப்பொழுதோ, தங்கள் தலைவனையே கொலைசெய்ய வேண்டுமென்று வெறுக்குமளவிற்கு, அவர்களுக்கு வாழ்க்கை கசந்து விட்டது. தாவீது தனியாக விடப்பட்டான். பெலிஸ்தர் அவன் மீது நம்பிக்கையின்றி அவனைத் திருப்பி அனுப்பி விட்டார்களென்றால், இப்பொழுது அவன் சொந்த மனிதரே அவனைப் பகைக்கின்றனர். அவனைக் கல்லெறிவோம் என்று பயமுறுத்துகின்றனர்; தன்னந்தனியாக கைவிடப்பட்டவனாக நிற்கின்றான். அவனும் தன் மனைவிகளையும், பிள்ளைகளையும் எல்லாவற்றையும் இழந்து விட்டான்! ஆனால் அவன் பக்கம் யாருமில்லை. அவனுக்காகப் பரிந்து பேச எவரும் முன் வரவில்லை.
திடீரென்று அவனுக்குப் புத்தியும் உணர்வும் வந்தது (வ 6). இவ்வார்த்தைகளை நன்றாய் மனதில் பதித்துவைத்துக் கொள்ளுங்கள்; கோடிட்டுப்படியுங்கள். உங்கள் உற்றார் உறவினரால் நீங்கள் கைவிடப்படும்போது அல்லது நீங்கள் அதிகமாய் நேசித்தவர்களே உங்களைப் பகைக்கும் போது, இந்த வார்த்தைகள் மிகுந்த பயனளிக்கும்.
“தாவீது தன் தேவனுகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்”. அதாவது அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, “ஓ! என் தேவனே! பெலிஸ்தரோடு, கூட்டு சேர்வதற்கு முன், உம்மைக் கலந்து கொள்ளாமலும், உமது சித்தத்தைத் தெரிந்து கொள்ளாமலுமிருந்த என்பெரும் பிழையை தயவாய் மன்னியும். ஆண்டவரே ! இரங்கும். ஆண்டவரே, மன்னியும்: ஆண்டவரே! கிருபையாயிரும்! இப்பொழுது எனக்கு நண்பரோ, என்னோடு அனுதாபப்படுகிறவரோ எவருமிலர்” என்று தன் பாவத்தை அறிக்கை செய்து விண்ணப்பம் பண்ணினான்.
அதற்குப் பிறகு. ஆசாரியனாகிய அபியத்தாரை வரவழைத்து, தேவனுடைய சித்தத்தை அறிந்து கூறும்படி அவனைப் பணித்தான். “நாங்கள் செய்ய வேண்டுவது என்ன? அந்த அமலேக்கியருக்கு விரோதமாய்ப் போகலாமா? நான் அந்த தண்டைப் பின் தொடர வேண்டுமா? அதைப்பிடிப்பேனா! நாங்கள் இழந்தது எல்லாம் திரும்பக் கிடைக்குமா!” என்று விசாரித்தான். அதற்கு தேவன் “அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து சகலத்தையும் திருப்பிக்கொள்ளுவாய்” என்று பதிலளித்தார் (வ.8). தாவீது மிகுந்த விசுவாசத்தோடு புறப்பட்டான். தாவீதும் அவனது வீரர்களும் அமலேக்கியரைப் பின் தொடரும் வேளையில் ஒரு எகிப்தியனை வயல் வெளியிலே கண்டார்கள். அந்த எகிப்தியன் வியாதிப்பட்டு, தன் எஜமானால் கைவிடப்பட்டவனாகப் பட்டினியாய்க் கிடந்தான். அவன் இராப்பகல் மூன்று நாட்களாய், அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். அவனுக்குச் சிறிது ஆகாரமும் தண்ணீரும் கொடுத்து அவனைத் திடப்படுத்தினர். அவன் உயிர் மீட்சியடைந்தான். தாவீது அவனது உதவியால் அமலேக்கியர் முகாமிட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். அவர்கள் புசித்துக்குடித்துக் களித்திருந்தார்கள். எவரைக் குறித்தும் அச்சமின்றி ஆணவமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத வேளையில் வானத்திலிருந்து இடி விழுந்த வண்ணம், தாவீதும், அவனது வீரர்களும் அவர்கள் மீது விழுந்து அவர்களை முறியடித்தார்கள். ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானுறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. அமலேக்கியர் பிடித்துக் கொண்டு போன எல்லாவற்றையும், தங்களது பெண்களைகளையும், பிள்ளைகளையும், விடுவித்தனர். ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். வேறிடங்களிலிருந்தும் அமலேக்கியர் கொள்ளையடித்துக் கொண்டு வந்ததையும் கொள்ளையிட்டனர்; தாங்கள் பல காலமாகப்பட்டிருந்த கடன்களையெல்லாம் தீர்த்துவிடுமளவிற்குத் திரளாய்க் கிடைத்தது. தனக்கு இடமளித்து ஆதரித்த அன்பர்களுக்கெல்லாம், அன்பளிப்புகளையும், பரிசுகளையும் அனுப்பி வைத்தான்.
அடுத்த அதிகாரத்திலே அதாவது 31 – ல் 3-6 வாக்கியங்களில், பெலிஸ்தர் சவுலோடு யுத்தம் பண்ணினதைக் குறித்து வாசிக்கிறோம். அந்த யுத்தத்தில் சவுல் மடிந்தான். தாவீது அவனைக் கொன்றுபோட, பிரயாசப்பட்டபோது தேவன் அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஏனென்றால், சவுல் தேவனால். அபிஷேகம் பண்ணப்பட்டவன், இப்பொழுது, சவுலும் அவனது புதல்வர்களும் யுத்தத்தில், கொல்லப்பட்டார்கள். தாவீது சவுலோடு, போர்புரியத் தேவையில்லை, தாவீதுக்குத் தெரியாமலிருந்தாலும் கூட, அவன் பட்சமாக தேவனே, அவனுக்காகக் கிரியை செய்துகொண்டிருந்தார். மிக மேன்மையான ஊழியத்திற்கென்று தாவீதை தேவன் தெரிந்துகொண்டிருந்தார். அவன் தேவனால் நியமிக்கப்பட்ட அரசன் மட்டுமன்று, தேவனுடைய தீர்க்கதரிசியாக இருக்கும்படியும் தெரிந்து கொள்ளப்பட்டவன். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாக மட்டுமன்று, பரலோகத் திட்டத்தைப் பெற்றுக்கொண்டவர்களில் ஒருவனாக, கர்த்தருக்கு மிகவும் பிரியமானவனாக இருந்தான். எனவே பலவிதமான அக்கினிப்புடங்களில் அவன் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிற்று. “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது” (ரோமர் 5:3). விசுவாசிகளாகிய நாமும், உன்னதமான, மகிமையுள்ள காரியங்களுக்கெனத் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதால், அப்பெரிய அழைப்புக்கு ஆயத்தப்படும்படி, மிகுந்த துன்பங்களினூடே செல்ல வேண்டியதாயிருக்கின்றது. நமது வாழ்க்கையில் தேவனுடைய சித்த மென்ன? நோக்கமென்ன?என்று கண்டுபிடிக்க வேண்டியது நமது கடமையாகும்.
பழைய ஏற்பாட்டுக் காலங்களிலெல்லாம் தேவனுடைய சித்தத்தையும், மனதையும் தெரிந்துகொள்வதற்கு, பிரதான ஆசாரியனிடம் போக வேண்டியதாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ, அருமை ஆண்டவராகிய கிறிஸ்துவே நமது மகா பிரதான ஆசாரியராயிருக்கிறார். இயேசு என் இரட்சகர் ; என் ஆண்டவர் : என் இராஜா ; என் நண்பர் ; என் தலைவர் ; என் மத்தியஸ்தர் ; எனக்காக வழக்காடுகிறவர் – எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருக்கிறார். இரவோ, பகலோ, எவ்வேளையும் அவரை நான் அணுக முடியும்; ஆலோசனை கேட்க முடியும்; உதவிபெற முடியும். பழைய ஏற்பாட்டு ஆசாரியனுக்கு, ஊரீம் தும்மீம் என விலையேறப் பெற்ற இரணடு கற்கள் கொடுக்கப் பட்டிருந்தன. ஆனால் இப்பொழுதோ, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குள்ளேயே, தெய்வீக ஒளி, தெய்வீக சக்தி’ என்னும் இரண்டு கற்களை வைத்திருக்கிறார். சங்கீதம் 43;3ன்படி, தேவனுடைய சித்தத்தை அறிவதற்காக நான் தேவனுடைய வீட்டிற்குள்
பிரவேசிக்கும் போது, என் மகிமையின் நம்பிக்கையாக என்னுள்ளத்தில் ஜீவிக்கிற இயேசு கிறிஸ்து என்னுடைய வெளிச்சமும் சத்தியமுமாயிருந்து என்னை வழிநடத்துவார். இயேசுவே எனது வழி, ஒளி, சத்தியமாவார். ஆனால் அநேக விசுவாசிகள் தங்களுடைய உரிமைகளை உபயோகிப்பதில்லை. தேவனுடைய ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, பிறரிடம், புத்திமதிக்காகப் போகிறார்கள், சில விசுவாசிகள், தங்களது புத்தியை மட்டும் பயன்படுத்தி, மூளை அறிவால் சொந்தமாகத் திட்டங்களைத் தீட்டி வாழ்கிறார்கள். அல்லது தங்களது நண்பர்களையும் உலக ஞானிகளையும் பெரிதாக மதிக்கிறார்கள். இவ்விதமாக, தொழிலிலும் வாணிபத்திலும், விவாக சம்பந்தங்களிலும், வேறுபல காரியங்களிலும் பலதவறுகளைச் செய்து விடுகிறார்கள். “ஏன் இவ்வாறு செய்கிறீர்? தேவனுடைய சித்தத்திற்காக காத்திருந்தால் என்ன?” என்று வினவும்போது, “எவ்வளவு காலம் நான் காத்திருப்பது? நான் இத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்தேனே! என்தலை முடியும் நரைக்க ஆரம்பித்துவிட்டதே! இன்னமும் காத்திருந்தால் மணந்து கொள்வது யார்? இல்லை ! இல்லை! இவ்வழி எனக்கு லாயக்கில்லை. நான் காத்திருந்தது போதும் என்று கூறுகிறார்கள். மேலும், தங்கள் சொந்த வழியே போய் நஷ்டத்திற்கு மேல் நஷ்டத்தை வருவித்துக் கொள்கிறார்கள்.
இன்று அவர்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் காரணம், அவர்கள் தங்கள் சொந்த வழியே போனது தான். தேவனுடைய சித்தத்தை உதாசீனம் செய்துவிட்டார்கள். தேவனுடைய திட்டத்தையும், வழிமுறைகளையும் இழந்து விட்டார்கள். ஆகவே, இன்று பெரிய நஷ்டங்களை அடைந்திருக்கிறார்கள் தாவீது அழுதது போலவே ஒரு நாளில் அழுவார்கள் : தங்களுக்கு அழுவதற்குப் பலமில்லாமல் போகுமட்டும் அழுவார்கள். அப்படி அழ நேரிடும் என்று எச்சரிக்கிறோம், அவர்களது நண்பர்களும் கூட அவர்களைக் கைவிட்டுப் போய் விடுவார்கள். எல்லோரும் அவர்களை மறப்பார்கள், அதன் பிறகு தான் உணர்வடைவார்கள். தேவ சித்தத்தைப் புறக்கணித்ததால் வரும் தீங்கையும், அவரது, ஆலோசனையைக் கேட்க மறந்ததின் விளைவையும் அறிந்து கொள்வார்கள்.
தேவனுடைய சித்தத்தைத் திட்டமாகக் கண்டுபிடிக்க ஜாக்கிரதையாயிருங்கள். அவரது நோக்கம் அறிய ஆவலோடிருங்கள். பெலிஸ்தரோடு கூடப்போக வேண்டாம். உங்களது பெலிஸ்தர் ஒருவேளை, உறவினர்களாயிருக்கலாம். ஆனால் அவர்களோடு கூடப் போக வேண்டாம். அது குடும்பக் காரியமானாலும் சரி, சபை காரியமானாலும் சரி மனுஷீக யோசனைகளுக்குட்பட வேண்டாம். உலகஞானத்தை நம்பினால் அழுவதற்கு ஆயத்தப்பட வேண்டியது தான். நெருங்கிய நண்பர்களையும் இழக்க நேரிடும்.
முடிவிலே, தாவீது, தேவனிடமாகத் திரும்பி வந்தான். தேவனுக்கு ஸ்தோத்திரம்! தாழ்மையோடும், சாந்தத்தோடும் ஒரு ஆட்டுக் குட்டியைப்போல் கர்த்தரிடம் வந்து, அவரது வழிகளைக் குறித்து விசாரித்தான். தன் தேவனாகிய காத்தருக்குள் தன்னைத்திடப்படுத்திக் கொண்டான். கர்த்தரும் தாவீதுடன் பேசினார். அதன் பிறகு, தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். அதற்கு அதிகமாக வும் சம்பாதித்தான் என்று பார்க்கிறோம். அவனும், அவனுடைய மனிதர்களும் ஆனந்தக் களிப்படைந்தார்கள். அவர்கள் மீட்டுக் கொண்டு வந்த அவர்களது பெண்களும் பிள்ளைகளும் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். அவர்கள் இழந்துபோன உடைமைகள், சாமான்கள் யாவற்றையும் திருப்பிக் கொண்டதுடன் அதற்கு மேலும் ஏராளமாகக் கொள்ளைப் பொருளைச் சம்பாதித்தார்கள். செய்நன்றி மறவாத தாவீது, தன் கடன்களைத் தீர்த்தான். தனக்கு உதவி செய்தோருக்கெல்லாம் வெகுமதிகளை அனுப்பி வைத்தான்.
இவ்விதமாகவே, நீங்களும் தேவனைச் சோதித்துப்பார்க்கலாம். நீங்களும் கர்த்தரிடமாய்த் திரும்பும் போது, நீங்கள் அடைந்த நஷ்டங்களையெல்லாம் தேவன் திருப்பித்தருவதோடு, உங்கள் துன்பங்களெல்லாம் இன்பமாக மாறும்.பெலிஸ்தர்களை நம்ப வேண்டாம். மனிதர்களை நம்புவது விருதா. உங்கள் நண்பர்களும், உங்கள் இனத்தவர்களும் உங்களைக் காப்பாற்ற முடியாது. கிறிஸ்து வண்டை வாருங்கள். அவரை மாத்திரம் நம்பிச் சார்ந்திருங்கள். ஒவ்வொரு, சந்தர்ப்பத்திலும், சூழ்நிலையிலும் தேவனிடம் விசாரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்அவரது சித்தம் என்ன என்று தேடிப்பிடியுங்கள். அவர் சத்தம் கேட்கவும், அவர் சொற்படி நடக்கவும் தாழ்மையையும், கீழ்ப்படிதலையும், கற்றுக் கொள்ளுங்கள். சூழ்நிலைகள் எவ்வளவு ஆபத்து நிறைந்ததாயிருப்பினும், நம்பிக்கையற்றதாயிருப்பினும், தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது உங்கள் துன்பம் இன்பமாக மாறும் ; இழப்பு ஈடு செய்யப்படும் ; வாழ்வு வளம் பெறும்.