சகோ. பக்த் சிங்
அத்தியாயம் – 2
கோடரியின் போதனை
(2 ராஜாக்கள் 6:1-7)
பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும் இழப்பது தேவனுக்குப் பிரியமில்லையென்றும், இழப்பதையெல்லாம், திரும்பப் பெற்றுக் கொள்வதையே தேவன் விரும்புகிறார் என்றும் விசுவாசிக்கின்றோம். தேவன் அருளும் எந்த வரப்பிரசாதமும் சதாகாலமாக, நாம் சொந்தமாக வைத்து, அனுபவிக்கும்படியாகவே தருகிறார். நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அது சில நாட்களுக்கோ, மாதங்களுக்கோ ஆண்டுகளுக்கோ அல்ல. அது வரையில்லா, நித்திய ஜீவன். அந்த ஜீவன் எப்பொழுதும் நமக்குள்ளும் நமது மூலமாகவும் பாய்ந்தோடி முடிவில்லாமல் வெளிப்படவேண்டிய பரிபூரண ஜீவன். அது நிறைவான அளவிலே வெளிப்படா வண்ணம் தடுக்கச் சத்துரு எவ்வளவோ முயற்சிக்கிறான். என்றாலும், ஒவ்வொரு தடையையும் நீக்கி, அது எப்பொழுதும் சம்பூரணமாய்ப் பாய்ந்தோடுவதற்கு, ஆண்டவர் ஆவன செய்கிறார்.
சில வேளைகளில், உங்கள் வீடுகளிலுள்ள குழாய்களில் (tap) தண்ணீர் தாராளமாக வராமலிருக்கலாம், நீர்த்தேக்க நிலையத்திலிருந்து குறைவின்றி, தடையின்றி தண்ணீர் வருகின்றது. ஆனால் உங்கள் குழாயில், ஏதோ அடைத்துக்கொண்டிருக்கலாம். நீர்க்குழாய் செப்பனிடுபவரை அழைத்து, சிக்கலை நீக்கி விட்டால், தண்ணீர் மறுபடியும் தாராளமாக வரும். சில வீடுகளில் எப்பொழுதும் நீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும் குழாய்களைக் கண்டிருக்கின்றோம்! மணிக் கணக்காகவும், நாள் கணக்காகவும் நீர் ஒழுகி, மித மிஞ்சிய நீர் வீணாகிக் கொண்டிருக்கலாம். தேவையானது ஒரு சிறிய பில்லையே (வாஷர்), உடனடியாக தண்ணீர் கசிவது நின்றுவிடும்.
இவ்விதமாகவே, பல விசுவாசிகளின் வாழ்க்கையில் பல குறைகளும், தவறுகளும் ஏற்பட்டு அவர்களது நேரம், பணம், சக்தியாவும் வீணாக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், ஒரு சிறிய குறைவைச் சரிப்படுத்துவதன் மூலம் பெருமளவு ஒழுக்கும் நஷ்டமும் ஏற்படாவண்ணம் தடுக்கலாம். நமது கவனக்குறைவாலோ, குற்றத்தினாலோ நாம் ஆசீர்வாதத்தையோ வல்லமையையோ, இழந்திருப்போமென்றால் அதை மறுபடியும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையே வேதம் நமக்குப் போதிக்கிறது. கிடைக்காது, முடியாது, நடவாது எனத் தோன்றினாலும் கர்த்தரது கிருபையாலும் அவரது வார்த்தையின்படியும் இவைகளை நாம் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
2 இராஜாக்கள் 6 : 1 – 7-ல் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு ஏற்பட்ட சம்பவத்திலிருந்து இந்த எளிய பாடத்தைக்கற்றுக் கொள்கிறோம். அந்த வாலிபர்கள் எலிசாவின் சீஷர்களாயிருந்தார்கள். அவர்கள் குடியிருந்த இடம் அவர்களுக்குப் போதுமானதாயில்லை. எனவே வேறொரு இடத்தில் விசாலமான வீட்டைக் கட்டுவதற்குத் தேவையான மரம் வெட்டுவதற்கென்று யோர்தான் நதியைக் கடந்து சென்றார்கள். அவர்கள் வாலிபர்களாயிருந்தும், அதிலும், தீர்க்கதரிசிகளின் பிள்ளைகளாயிருந்தும், எலிசா தீர்க்கதரிசியையும் தங்களுடன் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஞானமும், ஞாபகமும் அவர்களுக்கிருந்தது. “இந்தக் கிழவனை ஏன், நம்மோடு கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும்? இவரால் நமக்கு என்ன உபயோகம்? இவருக்கு நெடுந்தூரம் நடக்க சக்தியிருக்காது; ஒருவேளை நம் தோளின்மீது தான் தூக்கிச் சுமக்க வேண்டியதிருக்கும். அவருக்கு உணவளிப்பதோ, வேறு பல சேவைகளைச் செய்வதோ தேவைப்படலாம்.” என்றெலலாம் அவர்கள் கருதவில்லை. ஆனால் இவ்விதமெல்லாம் நினைப்பவர் இன்று பலருண்டு, தங்களது தாய் தகப்பனைக் கனம் பண்ணத்தெரியாதவர்களுமுண்டு, தனது தந்தை படிப்பறிவில்லாதவர், நாகரீகமற்றவர் என ஏளனமாக நினைத்து, கனம் பண்ணவோ, உதவி செய்யவோ முன் வருவதில்லை.
பெரியவர்களைவிடத் தங்களுக்குத்தான் அதிகம் தெரிந்திருப்பதாகவே, இக்கால இளைஞர்கள் எண்ணிக் கொள்ளுகின்றனர். ஒருவேளை, முதியோர் தங்கு தடையின்றி, அடுக்கு மொழியில் பேசத் தெரியாதிருக்கலாம். வாய் கொன்னலோ, பேச்சுக் குறைவோ இருக்கலாம். ஆகையால், தங்கள் சொந்தப் பிரச்சனைகளை அப்பெரியவர்களோடு ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு என்ன தெரியும் என்று இழிவாக நினைத்தல் கூடாது. தங்களது பெற்றார், உற்றாரைவிடத் தாங்களே திறமைசாலிகள், விவரமறிந்தவர்கள் என்ற இறுமாப்புடன் பலர் ஏமாந்து, முதியோர் சொற்கேளாமல், நெடுகப் போய் தண்டிக்கப்படுகிறார்கள். தங்களது மதிகேட்டினால் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளுகின்றனர். ஆனால் இந்தத் தீர்சகதரிசிகளின் புத்திரரோ புத்தியுள்ளவர்களாய், அனுபவமுதிர்ந்த தேவ மனுஷனாகிய எலிசாவைத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
அவ்விதம் அவர்கள் சென்று மரம் வெட்டிக்கொண்டிருக்கும்போது, ஒரு வாலிபன் தன் கோடரியைத் தவற விட்டதினால், அது ஆற்றில் ஆழ்ந்துவிட்டது. அவன் புறப்படுமுன்பே, தனது கோடரிக் காம்பு உறுதியாயிருக்கிறதா? எல்லாம் சரிதானா என்று கவனித்திருக்க வேண்டியது அவனது கடமை. அனுபவக் குறைவுள்ளவனானதால், கோடரியானது காம்பில் சரியாகப் பொருந்தாதிருப்பதைப் பாராமல் மரம் வெட்ட ஆரம்பித்தான். அதன் விளைவு, காம்பிலிருந்து கோடரி கழன்றுபோய் ஆற்று நீரில் விழுந்து விட்டது. கடனாக வாங்கின பொருளைச் சரியான பிரகாரம் திரும்பக் கொடுக்க வேண்டுமே என்று தன் பொறுப்பை உணர ஆரம்பித்தான். தீர்க்கதரிசியின் புத்திரன் என்ற ரீதியில், தன் வாக்குறுதியையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டுமல்லவா!
அநேகருக்கு இரவல் வாங்குவது எவ்வாறு என்பது நன்கு தெரியும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏதாவது ஒருபொருளை, விசேஷமாகப் பணத்தைக், கடனாகப் பெற வேண்டுமானால் ஒன்றும் அறியாதவர்கள் போல நடித்துக்கொண்டு, “நான் சம்பளம் வாங்கின உடனே இத்தொகையைத் திருப்பிக்கொடுத்து விடுகிறேன்” என்றெல்லாம் உறுதிமொழி கொடுப்பர். அவர்களின் இனிமையான பேச்சைக் கேட்டு; கடன் கொடுப்போரின் உள்ளம் உருகி விடுகிறது. “நான் இந்த எளியவரை ஆதரிக்க வேண்டுமேயென்று மனமிரங்குகின்றனர். இவர் நல்லவர்தான், நாணயமானவர்தான்.தம் வாக்கைக் காப்பாற்றுவார்; எனவே கடனைக் கட்டாயமாகக் கழித்து விடுவார்” என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். ஆனால் அவர் தாம் சொன்னபடி செய்கிறாரா என்றால், அதுதானில்லை. போன வருடம் வாங்கினதை இன்னும் திருப்பித் தரவில்லை ! முதலில் அதை நினைப்பூட்டும் போது மனங்குளிரப் பேசி விடுகிறார்கள். பின்னர் நேரிடுவதென்ன? சில நாட்களில், எதிரிகளாக மாறிவிடுகின்றனர். வாங்குவதற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறார்களேயன்றி, திரும்பக் கொடுக்க இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. இந்தக் குற்றத்தினாலேயே பல நல்ல விசுவாசிகளும் தங்களது சந்தோஷத்தையும், சமாதானத்தையும் உரிமைகளையும் இழந்திருக்கின்றனர். ஏனெனில் தாங்கள் கொடுக்கும் உறுதி மொழிகளைக் காத்து நடப்பதில்லை.தாங்கள் வாங்கின கடன்களைத் திருப்பித் தருவதுமில்லை.ஆனால் கோடரியைத் தவறவிட்ட இந்த வாலிபன் அவ்வாறல்ல. தன்னுடைய பிழையினால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிக்கட்ட வேண்டுமே, கோடரியை அதன் சொந்தக்காரரிடம் திருப்பித்தரவேண்டுமே என்ற நல்மனசாட்சி அவனை உணர்த்தினது.
வேறொரு கோடரி வாங்குவதற்கு வகையில்லை. எனவே அவன் துக்கமாயிருந்தான். “ஐயோ! நான் என்செய்வேன்? உம்முடைய பொருளைப் பத்திரமாகக் கொண்டு வருவேன் என்று எவ்வளவோ நம்பிக்கையோடு சொன்னேனே. இப்போ எவ்வாறு அவரைச் சந்திப்பேன்? என்ன பதிலளிப்பேன்? எங்ஙனம் பதிலீடு செய்வேன்”? என்றெல்லாம் அங்கலாய்த் திருப்பான். அவன் விவேகமுள்ளவன்; ஆனபடியால், வேறுயாரிடமும் போகாமல், எலிசாவிடம் சென்று முறையிட்டான். அவ்வாறே அவனது தோழர்களிடமும் முறையிட வாய்ப்பிருந்த போதிலும் அவன் அவ்வாறு செய்யாது வயதில் முதிர்ந்தவராகிய எலிசாவை நோக்கிக் கூவினான் (வ.5,6). தனக்கு அவ்வேளையிலே யாராவது உதவி செய்யக்கூடுமானால், அது எலிசா ஒருவர்தான் என்று திடமாக நம்பினான். அவன் எலிசாவின் உதவியை நாடினபோது, தனது நஷ்டத்தையும், தோல்வியையும் திறமையின்மையையும் ஒப்புக்கொண்டான். தன்னுடைய அசட்டையால்தான் கோடரியை இழந்து விட்டதாக எலிசாவிடம் எடுத்துரைத்தான். அதற்கு எலிசா அவனை நோக்கி, “கோடரி விழுந்த இடத்தை எனக்குக் காண்பி” என்றான். அவன் அது விழுந்த இடத்தைக் காண்பித்தபோது, எலிசா ஒரு கொம்பை வெட்டி,அதை அங்கே தண்ணீரில் எறிந்தான். உடனே, அந்தக் கோடரி மிதக்க ஆரம்பித்தது. ஒரு துரும்பைப்போல, அந்த இரும்பு மிதக்க ஆரம்பித்தது. இவ்விதமாக, அந்த வாலிபன், தன் நஷ்டத்தை மீண்டும் பெற்றுக்கொண்டான். இது சாதாரண கதையைப் போன்றிருப்பினும் மிக ஆழ்ந்த கருத்துடையது. நமது! ஆவிக்குரிய இழப்புகளை நாம் திரும்பப் பெறுவது எப்படி என்று நமக்குப் போதிக்கிறது.
முதலாவதாக, நாம் கருத்திலிருத்த வேண்டியது என்னவென்றால், அந்த வாலிபர்கள் எலிசா தீர்க்கதரிசியைத் தங்களுடன் கூட்டிக்கொண்டு போனார்கள். அதே போன்று நீங்களும், எவ்விடம் சென்றாலும், உண்மையான எலிசாவாகிய இயேசுகிறிஸ்துவை உங்களுடன் அழைத்துச் செல்ல மறவாதிருங்கள். உங்களுக்கு தேவ ஆசீர்வாதம் வேண்டுமா? நீங்கள் சீரும் சிறப்புமாயிருக்க வேண்டுமா? வாழ்க்கையில் செழிப்பையும், முன்னேற்றத்தையும் ஆசிக்கிறீர்களா?வெற்றியுடன் வாழ வேண்டுமா ? அப்படியென்றால், உங்களது சுயபுத்தியையோ, சுயபலத்தையோ சார்ந்திருக்கவேண்டாம். கர்த்தர் உங்களோடு செல்லவில்லையென்றால், நீங்கள் செய்வதெல்லாம் வீண், அது சித்திக்காது என்பதை நிச்சயமாக அறிந்து கொள்வீர்களாக.
இரண்டாவதாக, நீங்கள் எதையாவது இழக்கும்போது அதை அறிக்கையிடுவதற்கு வெட்கப்பட வேண்டாம். நாம் கண்ட வாலிபனும், “இது என் தவறன்று, காம்பு பலனற்றதாயிருந்ததால், முறிந்து விழுந்து விட்டது” என்று தன் பிழையை மறைக்கத் துணியாமல், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இவ்வாறே உங்கள் குற்றங்களையும், துரிதமாய், மனப்பூர்வமாய், தேவனிடம் அறிக்கையிடுங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவண்டை நேராகச் செல்லுங்கள். இந்த இளைஞன் நேராக எலிசாவிடம் சென்றான். நீங்களும் முதலாவதாகவே கிறிஸ்துவையணுகுங்கள். அவர் பாதத்தண்டை செல்லுங்கள். உங்களைத் தாழ்த்தி, உங்கள் தோல்விகளையும்; நஷ்டங்களையும், அவரிடம் சொல்லுங்கள். “ஐயோ ! என் ஆண்டவரே ! நான் என்ன செய்யட்டும்?” என்பதே உங்கள் வேண்டுதலாயிருக்கட்டும். நட்டமேற்பட்ட இடத்திற்கே கிறிஸ்துவை அழைத்துச் செல்லுங்கள். தேவன் எவ்வாறு ஒத்தாசை செய்வாரோ அதற்கு ஆவலுடன், ஆயத்தமாக எதிர் பார்த்திருங்கள். எலிசா வெட்டிப் போட்ட மரக்கிளையானது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்துப் பேசுகிறது. அவரே நமது பாவங்களுக்காகச், சாபமாகி, மரத்தில் தொங்கி மரித்தார். அதே சிலுவையினாலே, நமது நட்டமெல்லாம், ஈடு செய்யப்படுகிறது. இரும்பு ஒருபோதும் மிதப்பதில்லை. அது இயற்கையின் விதிகளுக்கு முரண்பட்டது. ஆகிலும், அந்தக் கோடரி தண்ணீரில் மிதந்தது. எலிசாவுக்கு இது சாதாரணமே ; இது ஒரு பெரிய அற்புதமாகத் தெரியவில்லை. அவ்வண்ணமாகவே, நாமும் விசுவாசத்தினால் சிலுவையை நம் ஜீவியத்தில் அப்பியாசிக்க வேண்டும். அதன்மூலம் எல்லாக் குறைவும், நிறைவாகும். எல்லா நட்டமும் திருப்பித் தரப்படும். ஆண்டவருக்கு அது பெரிய காரியமன்று.
இப்பொழுது அந்த வாலிபன் புதிதான அனுபவத்தோடும் புதிய விசுவாசத்தோடும், களிப்போடும் அவ்விடத்தை விட்டுச் சென்றான். தான் இழந்து விட்டதைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். தன்னுடைய சந்தோஷம், சமாதானம், மறுபடியும் அடைந்தான். உங்களுக்கும் தேவன் இவ்வண்ணமே உதவி செய்வாராக ! இந்த எளிய விதியை நினைவில் கொள்ளவும். முதலாவதாக, நட்ட மேற்படத்தொடங்கின அதே இடத்திற்குத் திரும்பவும் சென்று அவ்விடத்தைக் காண்பித்து, “ஆம் ஆண்டவரே ! இன்ன நாளில், இன்ன நேரத்தில், நான் புத்தியற்றவனாக நடந்து கொண்டேன். எனவே என் வாழ்க்கையில் இந்த நஷ்டமேற்பட்டது, “என்று ஒளிவு மறைவில்லாமல் கூறுங்கள். இவ்விதமாக அறிக்தை செய்து, உறுதிப்படுத்தி ஆண்டவரண்டை செல்வீர்களாகில், அவர் தமது சிலுவையின் வல்லமையை விளங்கச் செய்வார் . ஒவ்வொரு குறைவையும் நிறைவாக்க ஒத்தாசை புரிவார். சிலுவையே தேவனுடைய வல்லமையாக இருக்கிறது. அதை அனுபவிக்கிறதற்கு, அனுகூலமாக்கிக் கொள்வதற்குத் தேவையானதெல்லாம் எளிய, ஜீவனுள்ள விசுவாசம் மட்டுமே. “தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான்.” தாவீது என்று வருமிடத்தில் உங்கள் பெயரை வைத்து வாசியுங்கள். தாவீதின் ஸ்தானத்தில், உங்களை வைத்து, நீங்கள் யாராயிருந்தாலும் சரி, உங்கள் நஷ்டம் எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. நீங்களடைந்த நஷ்டத்தையெல்லாம், திருப்பிக் கொள்வீர்கள். அதற்கு மிஞ்சியும் பெற்றுக் கொள்வீர்கள். நமதாண்டவர் நம்மோடிருக்கிறார். “நான் சதாகாலமும் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று இயேசு வாக்களிக்கவில்லையா? அவரிடம் செல்லத் தயங்க வேண்டாம். நட்டங்களையெல்லாம் உறுதிப்படுத்துங்கள். உங்களுக்காகவே உங்கள் ஸ்தானத்தில், உங்கள் இழப்புகளுக்கெல்லாம் ஈடுசெய்வதற்கென்றே இயேசு, சிலுவையில் மரித்தார் என்ற சத்தியத்தை விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் இழக்க நேரிட்ட யாவையும் மீண்டும் பெற்றுக் கொள்வீர்கள்.