நூதன சீஷன்

மார்ச் 31

அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6)

கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் என்று கூறும் வேளையில், ஒரு “நூதன சீஷன்” இப்பணியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சிரத்துள்ளார். ஆவிக்குரிய முதிர்ச்சியும், தேவபக்தியில் வளர்ச்சியுமே கண்காணிகளுக்குத் தேவையான ஞானத்தையும், சரியான முடிவெடுக்கும் திறமையையும் தரவல்லதாயுள்ளன. ஆயினும் இவ்விதி அவ்வப்போது மீறப்படுவதைக் காண்கிறோம். தொழில் துறையில் வெற்றிபெற்ற ஒரு இளைஞரோ, அரசியல்வாதியோ, அறிவியல் அறிஞரோ உள்ளுர் சபையில் ஐக்கியம் பெற வருவாராயின், சபை நடவடிக்கைகளில் அவருக்குத் தகுந்த இடத்தை அளிக்காவிட்டால், வேறு எங்காவது அவர் சென்றுவிடுவார் என்று நாம் நினைக்கிறோம். மேலும் அவருக்குத் தலைமைப்பதவி ஒன்றைக் கொடுத்து, கொக்கி போட்டு அவரை மாட்டிவைத்து விடுகிறோம். உதவிக்காரரைக் குறித்து பவுல் கூறியிருக்கிற கருத்துமிக்க கூற்றை நாம் பின்பற்றுவது நல்லது, “அவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்”.

இந்த ஆவிக்குரிய விதி மீறப்படுவதைச் சில நிகழ்ச்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன. நற்செய்திப் பணியின் வானவிரிவிலே நட்சத்திரப் பிரமுகர்களின் மனமாற்றம் பளிச்சிட்டுப் பிரபல்யப்படுத்தப்படுகிறது. புகழ்பெற்ற கால்பந்து வீரரோ, நடிகையோ, முன்னாள் குற்றவாளியோ மனமாற்றம் பெற்றால், தாண் முதல் பெயர்செபா வரை விளம்பரங்கள் கொடிகட்டிப் பறக்கும். செய்தித்தாட்களில் தலைப்புச் செய்தியாக வரும். கொலை தண்டனை விதிக்கலாமா, கூடாதா, திருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா தவறா போன்றவற்றில் அவர்களுடைய கருத்தைக் கேட்பார்கள். ஏதோ, மறுபிறப்பு அடைந்த மறுநொடியில் எல்லாத்துறைகளிலும் ஞானத்தை அவர்கள் பெற்றுவிட்டார்கள் என்பதுபோல் நடந்து கொள்வார்கள். மேலும் சில கிறிஸ்தவக் கூட்டத்தார் பணம் ஈட்டும் வணிகப்பொருட்களாக அவர்களைப் பயன்படுத்துவார்கள்.

“தன் முழங்காலில் நின்று ஜெபிக்கும் ஒரு பாவியை, உடனடியாக அங்கிருந்து பெருந்திரள் கூட்டத்திற்கு முன் நிறுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன். திரைப்படக் கலைஞரும், விளையாட்டுவீரர்களும், அரசியல் தலைவர்களும் இரட்சிப்படைந்ததாகக் கூறியவுடன் மேடையில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்கள். உண்மையாகவே திருமறை வார்த்தைகள் அவர்களது உள்ளத்தில் வித்தாக இடப்பட்டு, முளைத்து, வேர்விடும்வரை பொறுத்திருப்பதில்லை. இதன் காரணமாக கிறிஸ்துவின் திருப்பெயருக்கு ஈடுசெய்ய இயலா களங்கம் ஏற்பட்டுள்ளன” என்று முனைவர் பால்வேன் கோர்டர் என்பார் கூறியுள்ளார்.

போதை மருந்துக்கு அடிமைப்பட்ட ஒருவரோ, அரசியல் தலைவர் ஒருவரோ விசுவாசத்தைப் பெற்றுள்ளார் என்று அறிக்கை வெளிவந்தால், சில கிறிஸ்தவர்கள் தங்களுடைய பெருமையின் உச்சிக்குச் சென்றுவிடுகின்றனர். ஒருவேளை அவர்கள், தங்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லையென்றோ, தாழ்வு மனப்பான்மையுடனோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள். அகவே புகழ்பெற்ற ஒருவர் இரட்சிக்கப்பட்டார் என்று கேட்டவுடன், அவர்களது தொய்ந்துபோன நம்பிக்கை மறுமலர்ச்சி அடைகிறது.

ஆனால் இவ்வகையான புகழ்பெற்ற மனிதர்கள், பிசாசின் தந்திரத்தில் விரைவில் பிடிபட்டு பாவத்திற்குட்பட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் திருப்பெயருக்கு அளவற்ற அவமானத்தைக் கொண்டுவந்துவிடுகின்றனர்.

புகழ்பெற்ற ஒருவரோ, அறியப்படாத ஒருவரோ யாராயினும் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டால் அவர்களுக்காக நாம் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். மாறாக, புதிய விசுவாசிகளை மேடையில் ஏற்றுவதாலோ, தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்துவதாலோ கிறிஸ்துவின் பெயரை உயர்த்துகிறோம் என்று நினைத்தால் நாம் தவறிழைக்கிறவர்களாக இருப்போம்.

சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்தும் தேவன்

மார்ச் 30

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28)

வாழ்க்கை கடினமாக இருக்கும் காலங்களில் நம்முடைய உள்ளத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையில் தென்றல் வீசுகிறபோது, “கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன்” என்று எவ்விதத் தயக்கமுமின்றிக் கூறுகிறோம். ஆயின், வாழ்க்கையில் புயலெனக் காற்ற அடிக்கும்போது, “என்னுடைய அவிசுவாசத்திலிருந்து என்னைத் தப்புவியும்” என்று கூறுகிறோம்.

இருந்தபோதிலும் இவ்வசனம் உண்மையானது என்பதை நாம் அறிவோம். சகலத்தையும் தேவன் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார். திருமறை இங்ஙனம் கூறுகிற காரணத்தினால் இதை அறிந்திருக்கிறோம். இதனை நாம் காண இயலாது. நம்முடைய ஞானத்தினால் அறிந்துகொள்ளவும் முடியாது. ஆயினும் விசுவாசம் இவ்வுண்மையை நமக்குரியதாக்கிக் கொள்ளச் செய்கிறது.

தேவனுடைய பண்பின் அடிப்படையில் இவ்வசனம் உண்மையானது என்று நாம் அறிந்திருக்கிறோம். எல்லையில்லா அன்பும், எல்லையில்லாத ஞானமும், எல்லையில்லா வல்லமைகளும் உடையவராக தேவன் இருக்கின்ற காரணத்தினால், எப்போதும் நாம் மேன்மையான நன்மையைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர் திட்டமிட்டுச் செயல்புரிகிறார்.

தேவனுடைய மக்களின் அனுபவமாக இக்கூற்று இருக்கின்ற காரணத்தினால், இது உண்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “தெரிந்தெடுத்த கதிர்கள்” என்னும் நூலில் வெளிவந்த கதை. இது. புயலில் சிக்குண்ட கப்பல் ஒன்று உடைந்து நொறுங்கியது. அதிலிருந்து தப்பிய ஒருவர் எவரும் குடியிராத தீவு ஒன்றில் கரையேறினார். தனக்காக ஒரு குடிசையை அத்தீவில் நிறுவினார். உடைந்த கப்பலிலிருந்து அவர் சேகரித்தவைகள் அனைத்தையும் அக்குடிசையில் கொண்டுபோய் வைத்தார். தான் அத்தீவிலிருந்து காற்பாற்றப்பட வேண்டுமென்று தேவனிடத்தில் மன்றாடினார். அவ்வழியாகக் கப்பல் ஒன்று செல்லுமா என்று ஒவ்வொரு நாளும் தொடுவானம்வரை நோக்கிப் பார்ப்பார். ஒருநாள் அவருடைய குடிசை தீப்பற்றிக் கொண்டது. அவர் சேகரித்தவை யாவும் அக்கினிக்கிரையாகின. புகை வானத்தை நோக்கிச் சென்றது. என்ன செய்வதென்று அறியாது அவர் அஞ்சி நடுங்கினார். அதனால் பேரிழப்பை அவர் அடைந்ததாகத் தோன்றினாலும், உண்;மையிலேயே அது அவருக்குப் பெருத்த நன்மையை உண்டாக்கிற்று. தொலைவில் சென்ற கப்பலின் தலைவன் வானத்தை நோக்கிச் சென்ற புகையைக் கண்டு அவரைக் காப்பாற்ற அங்கு வந்தான். “தீயினால் நீங்கள் காட்டின குறிப்பைக் கண்டு உங்களைக் காற்பாற்ற வந்தோம்” என்று அத்தலைவன் கூறினான். நம்முடைய வாழ்க்கைகள் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன என்பதை நாம் அறியக்கடவோம். சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது.

சில நேரங்களில் நமது விசுவாசம் தடுமாறுகிறது. இன்னல்கள் தாங்கவொண்ணா வேதனையை உண்டாக்குகிறது. நம்மைச் சூழும் இருள் பொறுமையை இழக்கச் செய்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்நேரங்களில், “இதிலிருந்து என்ன நன்மை உண்டாகும்?” என்று கேட்கும் அளவிற்று நாம் சென்றுவிடுகிறோம். அதற்கு விடையுண்டு. தேவன் நம்மை நடத்திச் செல்வதால் உண்டாகும் நன்மை யாதென அடுத்த வசனத்தில் காண்கிறோம். “தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு நம்மை முன்குறித்திருக்கிறார்” (ரோ.8:2). மனித உருவத்தை உண்டாக்கச் சிற்பியின் உளி பளிங்குக் கல்லைச் சிறுக சிறுகச் செதுக்குகிறது. இவையாவும் செதுக்குண்டு விழுகிற கண்துணுக்குகள் போல இருக்கின்றன. நம்மீது விழுகிற அடி நம்மிடத்தில் காணப்படுகிற தகுதியற்ற அனைத்தையும் செதுக்கி அப்புறப்படுத்துகிறது. அப்போது அவருடைய சாயலுக்கு ஒப்பான சாயலைப் பெறுகிறோம். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு நன்மையையும் உங்களால் காணமுடியவில்லையென்றால், “கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பான சாயலை” அடையப்போகிறீர்கள் என்பதை மட்டும் நினைவிற்கொள்ளுங்கள்.

தவிர்க்கவேண்டிய தகுதியற்ற அலுவல்கள்

மார்ச் 29

தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4)

 

கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய சேனையில் அவரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறான். மேலும் அவருக்காக அவன் அயராது உழைக்கிறவனாயிருக்கிறான். ஆகலின், அன்றாடக வாழ்வில் அவன் சிக்கிக்கொள்ளக்கூடாது. சிக்கிக்கொள்ளுதல் என்னும் சொல் இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. உலகீய தொழிலினின்று அவன் முற்றிலுமாகத் தன்னைப் பிரித்துக்கொள்ள இயலாதவனாயிருக்கிறான். தனது வீட்டின் தேவைகளைச் சந்திக்க அவன் உழைக்கவேண்டும். ஒவ்வொரு நாளிலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களை அவன் செய்ய வேண்டியவனாக இருக்கிறான். இல்லையேல் 1.கொரிந்தியர் 5:10 ல் வசனத்தில் பவுல் நினைவூட்டுகிறதுபோல், அவன் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து செல்லவேண்டியதிருக்குமே. என்றாலும், சிக்கிக்கொள்வதற்கு அவன் தன்னை அனுமதிக்கக்கூடாது. எவ்வௌற்றிற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் நல்லவையாக விளங்கும் சிலசெயல்கள், சிறந்தவையாகத் திகழ்பவைகளுக்கு எதிரானவையாக மாறிப்போகின்றன. இதனைக் குறித்து திரு வில்லியம் கெல்லி கூறியிருப்பதாவது: “வெளியரங்கமான உலகில் நடைபெறும் செயல்களில் பங்கு கொள்வதைத் தவிர்க்காமல் அதனையே சார்ந்து வாழும் முறையே, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்வது என்பதன் பொருளாக இருக்கிறது”.

மனிதர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு அரசியலில்,ஈடுபடுவதே வழி என்று கருதி, அதில் பங்குவகிப்பது உலகில் சிக்கிக்கொள்வதாக இருக்கிறது. “டைட்டானிக் கப்பலில் மேற்தளத்தில் உள்ள நாற்காலிகளை அடுக்கி வைப்பதற்கு” நேரத்தைச் செலவிடுவதுபோல இது விளங்கிறது. உலகில் நிகழும் பொல்லாங்குகளுக்கு விடை, நற்செய்தியில் உள்ளது என்பதை விடுத்து, மக்கள் நல சேவைக்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பது உலக அலுவல்களில் சிக்கிக்கொள்வதாக இருக்கிறது.

பணம் ஈட்டும் பொருட்டு என்னுடைய திறமைகள் அனைத்தையும் என்னுடைய தொழிலில் செலவிடுவேனாயின் நான் சிக்கிக்கொண்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்வில் தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் முதலிடம் வகிக்காது போகுமென்றால் நான் உலக அலுவல்களில் சிக்கிக்கொண்டவனாவேன்.

நித்திய வாழ்வுக்குரிய இறைமக்கள் அற்ப காரியங்களில்,ஈடுபட்டால் இவ்வுலக அலுவல்களில் சிக்கிக் கொண்டவர்களாகக் கருதப்படுவர். தாவரச்சத்து அற்ற தக்காளி மற்றும் சில மீனினம், கோடைகாலத்தில் மான்கள் செயல்படும் முறை, நூல் ஆடைகளில் நுண்கிருமிகள், நிறம் மாறும் உருளைக்கிழங்கு இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வது ஒருவருடைய வாழ்க்கைக்குத் தேவையான பணம் ஈட்டும் தொழிலாக இருக்குமாயின் தவறில்லை. ஆனால் அவ்வித ஆராய்ச்சியை வாழ்வின் நோக்கமாகக்கொண்டு, அதைக் குறித்துக் கட்டுக்கடங்கா வேட்கை கொண்டிருப்பது தகுதியற்ற முறையில் சிக்கிக்கொள்வதாகும்.

துணிகரமான பாவம்

மார்ச் 28

அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15).

தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் அம்னோன் அவளிடத்தில் மோகம் கொண்டிருந்தான். மேலும், அவளை அடையவேண்டுமென்று உறுதிகொண்டிருந்தான். தேவனுடைய கற்பனையின்படி அவன் கொண்டிருந்த விருப்பம் தடைசெய்யப்பட்டது என்பதால் அவள் பெருத்த ஏமாற்றம் உயைடவனாயிருந்தான். இருந்தபோதிலும், அவள்மீது கொண்டிருந்த மோகத்தினால் வேறெதுவும் அவனுக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஆகவே அவன் நோய்வாய்ப்பட்டவன் போல நடித்தான். தன்னுடைய அறைக்குள்ளாக அவளை வயப்படுத்தி அழைத்து, தவறாக நடந்துகொண்டான். ஒருநொடிப்பொழுது காமவெறிக்காக அவன் எல்லாவற்றையும் துறந்துவிட ஆயத்தமுடையவனாக நடந்துகொண்டான்.

பின்னர், அவனுடைய மோகம் வெறுப்பாக மாறிற்று. சுயநலத்திற்காக அவளைப் பயன்படுத்திப் பின்னர், இழிவாக நடத்தினான். அவளைப் பார்க்கவும் விரும்பவில்லை. அவளை வீட்டைவிட்டு வெளியேற்றிக் கதவைப் பூட்டச் செய்தான்.

வரலாற்றில் இடம்பெற்ற இச்சரித்திரம் இவ்வுலகில் ஒவ்வொருநாளும் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. தன்னிச்சையாகச் சுழலும் சக்கரம் போன்று இயங்கும் நமது சமுதாயத்தில் பெரும்பாலும் ஒழுக்கத்தின் கூறுகள் அனைத்தும் பறக்கவிடப்பட்டுவிட்டன. திருமணத்திற்கு முன்பே தம்பதிகள் கூடிவாழ்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளத்தேவையில்லை என்று கருதுதப்படுகிறது. விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை தாம்பத்திய வாழ்க்கைக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.

முதியவரும் இளைஞரும் ஒன்றுபோலவே தங்களுக்கு இன்பமானவர்களைக் கண்டு குடும்பம் நடத்துகின்றனர். மேன்மையான பிரமாணங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எந்த ஒழுங்குகளும் தடைகளும் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை. தாங்கள் பெறவேண்டும் என்று நினைப்பதைப் பெற உறுதியுடன் செயல்புரிவார்கள். சரியா தவறா என்னும் எண்ணத்திற்குக் கையசைத்து வழிவிட்டு அனுப்பி விடுகின்றனர். வேறெந்த வழியிலும் இயல்பான வாழ்வை வாழமுடியாது என்று தங்களுடைய கருத்தை வாழ்க்கையின் தத்துவமாக்கிக் கொள்கின்றனர். அம்னேன் செய்ததுபோன்று துணிவுடைய செயல்களை இன்றைய நாட்களில் மனிதர்கள் செய்யத் தயங்குவதில்லை. அதன்பின்னர் பெரிய காரியத்தைத் செய்துமுடித்தாக நினைத்துக்கொள்கின்றனர்.

வருங்காலத்தில் இனிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவை பிற்காலத்தில் அருவருக்கத்தக்கவையாகக் காட்சியளிக்கும். எவ்வளவுதான் கடுமையாக எதிர்த்தாலும், குற்ற உணர்வு தவிர்க்கமுடியாதது. தவறு செய்த இருவருமே தங்களது சுயமரியாதையை இழந்து விடுகின்றனர். பின்னர் அது அவர்களுக்கு வெறுப்பாக மாறிவிடும். அவரின்றி வாழ்வே இல்லையென்று கருதப்பட்டவர்கள் இப்பொழுது முற்றிலும் வெறுக்கத்தக்கவராகிவிடுகிறார். அது அடிதடியாக மாறும், நீதிமன்றத்தில் போராடுவார்கள், சிலவேளைகளில் கொலையிலும் முடியும்.

நிலையான உறவைக் கட்டுவதற்கு மோகம் மிகவும் தரக்குறைவான அஸ்திபாரமாக இருக்கிறது. பரிசுத்தத்தைப் பற்றிய தேவனுடைய பிரமாணத்தை மனிதன் தன்னுடைய இழப்பிற்கும் அழிவிற்குமாகப் புறக்கணித்துவிடுகிறான். பாவமன்னிப்பையும், சரி செய்தலையும், முன்னிருந்த நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதையும் தேவனுடைய கிருபை மட்டுமே செய்யவல்லதாயிருக்கிறது.

தூய ஆவியானவரின் ஒப்பற்ற வல்லமை

மார்ச் 27

காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8)

தேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி செல்கிறார். அவரை ஒரு குறிப்பிட்ட அச்சுக்குள் ஊற்ற நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் நம்முடைய முயற்சிகள் யாவற்றிலும் எவ்வித வேறுபாடும் இன்றி தோல்வியையே தழுவுகிறோம்.

தூய ஆவியானவருக்கு நிழலாகச் சொல்லப்படுகிறவைகள் பெரும்பாலும் திடநிலையற்றவையாக இருக்கின்றன. காற்று, அக்கினி, எண்ணெய், நீர். இவற்றை நம்முடைய கைகளில் பிடித்துக்கொள்ள நாம் முயற்சி செய்கிறோம். ஆயின், இவையாவும், “என்னை வேலி போட்டு அடைக்கவேண்டாம்” என்று ஒரே விதத்தில் சொல்லுகின்றன.

ஒழுக்கத்திற்குப் புறம்பான ஏதொன்றையும் தூய ஆவியானவர் செய்யவேமாட்டார். ஆனால் ஏனையவற்றில் வழக்கத்திற்கு மாறாகவும் வித்தியாசமான முறையிலும் செயல்புரிய உரிமை கொண்டிருக்கிறார். எடுத்துக்காட்டாக, தலைமைத்துவத்தை தேவன் ஆண்களுக்குக் கொடுத்திருப்பது உண்மையாயினும், தேவனுடைய மக்களை வழிநடத்துவற்கு ஒரு தெபோராளைத் தூய ஆவியானவர் எழுப்ப விரும்பினால், அதைக் கூடாது என்று நம்மால் சொல்லமுடியாது.

நற்சான்று மங்கிப்போகும் நாட்களில் சாதாரணமாகத் தடைசெய்யப்பட்டிருக்கும் செயல்களைத் தூய ஆவியானவர் செய்வதற்கு அனுமதிக்கிறார். இவ்வாறாகவே ஆசாரியர்கள் உண்பதற்கென்று வைக்கப்பட்டிருந்த சமுகத்தப்பங்களைத், தாவீதும் அவனுடனிருந்தவர்களும் உண்ணும்படி அனுமதிக்கப்பட்டனர். ஓய்வுநாளிலே சீடர்கள் கதிரைக் கொய்தது சரியென்று எண்ணப்பட்டது.

அப்போஸ்தல நடபடி நூலில் சொல்லப்பட்டிருக்கிற நற்செய்திப்பணி, குறிப்பிட்ட பிரகாரமாகவும், எதிர்பார்தபடியும் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், தூய ஆவியானவருடைய ஆளுகை செய்யும் ஒப்பற்ற தன்மையே அங்கு சொல்லப்பட்டிருக்கிற ஒரே நடைமுறையென்று நான் காண்கிறேன். அப்போஸ்தலரும், மற்றவர்களும் ஒரு பாடநூலைப் பின்பற்றவில்லை. அவருடைய வழிநடத்துதலையே அவர்கள் பின்பற்றினார்கள். பெரும்பாலும் மனிதனுடைய பொது அறிவு கற்பிக்கிற முறையில் தேவ ஆவியானவருடைய வழிநடத்துதல் இருப்பதில்லை.

எடுத்துக்காட்டாக, சமாரியாவில் நிறைவேற்றிய வெற்றியுள்ள எழுப்புதலை விட்டு விட்டு, காசாவிற்குச் செல்லும் வழியில் தனியாகப் பயணம் செய்த எத்தியோப்பிய மந்திரியிடம் செல்லும்படியாக பிலிப்புவை ஆவியானவர் வழிநடத்தினார்.

ஆவியானவர் என்னசெய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று ஒருபோதும் நாம் கட்டளை இடக்கூடாது. பாவமான ஏதொன்றையும் ஒருபோதும் அவர் செய்யமாட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மற்ற செயல் பாடுகளில் அவர் அசாதாரண முறையில் நடந்துகொள்ளக்கூடியவராக இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். குறிப்பிட்ட சில முறைகளில் மட்டுமே அவரால் செயல்படமுடியும் என்று எண்ணிவிடக்கூடாது. சில மரபுகளுக்கு அவர் கட்டுப்பட்டவரல்லர். சம்பிரதாயத்திற்கும், சடங்கிற்கும், செயலற்ற தன்மைக்கும் எதிர்த்து நின்று உயிரூட்டமுடைய புதிய வகையில் அவர் இயங்குகிறவராயிருக்கிறார். ஆகவே அச்செயல்பாடுகளில் பங்குபெறாமல் ஒதுங்கிக் கொள்கிறவர்களாகவோ, குறைகூறுகிறவர்களாகவோ இல்லாமல், தூய ஆவியானவரின் ஒப்பற்ற வல்லமைக்கு ஒப்புவித்தவர்களாக நாம் நடந்துகொள்வோமாக.

அகற்ற வேண்டிய வெறுப்பு

மார்ச் 26

(அதைக் குறித்து) உனக்கென்ன ? நீ என்னைப் பின்பற்றி வா (யோ.21:22)

முதிர்வயதுவரை வாழ்ந்து பின்னர் தியாகிக்குரிய மரணத்தை அடைவான் என்ற பேதுருவைக்குறித்து இயேசு கிறிஸ்து கூறிய சற்று நேரத்திற்குள்ளாக, யோவானைத் திரும்பிப் பார்த்த பேதுரு, தன்னைக் காட்டிலும் சிறப்பாக அவன் நடத்தப்படுவானோ என்ற எண்ணம் கொண்டான். தனது எண்ணத்தைக் கேள்வியாகவும் எழுப்பினான். அதற்கு மறுமொழியாகக் கர்த்தர், “அதைக் குறித்து உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றி வா” என்றுரைத்தார்.

பேதுருவின் மனப்பான்மை, டாக் காம்மர்ஸ் ஜோல்ட் என்பவர் இதைக் குறித்து எழுதிய சொற்களை நமது நினைவிற்குக் கொண்டுவருகிறது. “இவையெல்லாம் நடந்த பின்னரும் உங்களுடைய வாழ்வில் அடையாத ஒன்றை மற்றவர்கள் பெற்று மகிழ்வடைகிறதைக் காணும் வேளையில் நீங்கள் வெறுப்பென்னும் கசப்புணர்வோடு சீறி எழ ஆயத்தப்படுகிறீர்கள். ஒருவேளை அந்தச் சீற்றம் மகிழ்ச்சியான ஒரிரு நாட்களுக்குச் செயலற்றுக் கிடக்கும். பேதுருவின் வார்த்தைகள் மிகவும் அற்பமான நிலையில் இருந்தாலும், மரணத்தின் கசப்பினாலே எழுந்த வார்த்தைகளாகவே இருக்கின்றன. மற்றவர்களோ தொடர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே அதன் பொருளாயிருக்கிறது.

கர்த்தருடைய சொற்களை நாம் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்வோமாயின் கிறிஸ்தவ மக்களிடையே காணும் பற்பல பிரச்சனைகள் நீங்கிப்போகும்.

நம்மைக்காட்டிலும் குறைவான தேவபக்தியுடையவர்கள் நல்ல உடல் நலத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இரண்டு மூன்று விதமான நீங்கா நோய்களுடன் நாம் போராடுகிறோம். கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகள் மற்ற இல்லங்களில் காண்கிறோம். நம்முடைய பிள்ளைகள் சாதாரணமானவர்களாகவும் எவ்விதச் சிறப்பும் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.

நாம் செய்வதற்கு விடுதலை பெற்றிராத செயல்களை, மற்ற விசுவாசிகள் செய்கிறதை நாம் காண்கிறோம். அவை பாவமற்றவைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெற்றிருக்கிற சுயாதீனத்தைக் கண்டு மனக்கசப்பு அடைகிறோம்.

கிறிஸ்தவப் பணிபுரியம் ஊழியர்களுக்கிடையேயும் இது காணப்படுகிறது. ஊழியத்தில் பொறாமை உடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சொல்வது மிகவும் வருந்தத்தக்கது. ஒருவர் புகழ்பெற்றவராக இருக்கிறார், பல நண்பர்கள் அவருக்கு இருக்கிறார்கள், எல்லாராலும் அறியப்பட்டவராக அவர் இருக்கிறார். தகுதியற்றது என்று கருதும் வழிமுறைகள் நமது உடன் ஊழியர்கள் பின்பற்றுவதால் நாம் மனமடிவு அடைகிறோம்.

நம்மிடத்தில் காணப்படும் தகுதியற்ற மனப்பான்மை யாவற்றிற்கும் கர்த்தருடைய வார்த்தைகள் மகா வல்லமையோடு எதிர்த்து வருகின்றன, “அதைக் குறித்து உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றி வா. “மற்ற கிறிஸ்தவர்களோடு கர்த்தர் எவ்வாறு, ஈடுபடுகிறார் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. நமக்கென்று கர்த்தர் வகுத்த பாதையில் அவரைப் பின்பற்றுவதே நமது பொறுப்பாகும்.

தேவனுக்கே முதலிடம்

மார்ச் 25

ஆதியிலே தேவன்…. (ஆதி.1:1)

திருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த ஜீவன்களின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொற்றொடர் என்பது விளங்கம். அதாவது, “தேவனுக்கே முதலிடம்” என்பதே அச்சொற்றொடரின் பொருளாகும்.

முதலாவது கற்பனையில் இக்கருத்து பொதிந்திருப்பதை நாம் காணலாம். “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்”. உண்மையும் நீதியும் நிறைந்த தேவனுடைய இடத்தை வேறொருவரும் அல்லது வேறெதுவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

எலியாவையும் ஏழைவிதவையையும் குறித்த கதையில் இப்பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதவையும் அவளுடைய மகனும் கடைசியாக ஒருவேளை உண்பதற்கான மாவும் எண்ணெயுமே அவளிடம் இருந்தன (1.இராஜா.17:12). அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் எலியா அப்பெண்ணிடம், “முதலில் ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா” என்று கூறினான். இச்சொற்கள் தன்னலம் கொண்டதாகத் தோன்றிடினம், உண்மை அதுவன்று. தேவனுடைய பிரதிநிதியாக அங்கு எலியா காணப்படுகிறான். “தேவனுக்கு முதலிடத்தைத் தா. உன் வாழ்க்கைக்குத் தேவையான ஏதொன்றும் குறையாது” என்றே அவன் கூறினான்.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மலையின்மீது அமர்ந்தவராக இதனைக் கற்றுக்கொடுத்தார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையம் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33). தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியுமே ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்வின் இன்றியமையாத முதலிடமாகத் திகழ்கின்றன.

தமக்கே முதலிடம் தரவேண்டும் என்று நமது இரட்சகர் மீண்டும் லூக்கா 14:26ல் வலியுறுத்தினார், “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” இங்கும் கிறிஸ்துவுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்பதே பொருளாகும்.

ஆனால், எவ்வாறு தேவனுக்கு முதலிடத்தைத் தருவது? நாம் கவனிக்கவேண்டிய குடும்பம் நமக்கிருக்கிறதே. இவ்வுலகத்திற்குரிய வேலையை நாம் செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். நமது நேரத்தையும் நமது திறமைகளையும் செலவிடவேண்டும் என்று நம்மை வருத்தும் பற்பல அலுவல்கள் நம் கண்முன் வந்து நிற்கின்றன. தேவனிடத்தில் நாம் காட்டும் அன்போடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பிறரிடம் காட்டும் அன்பு வெறுப்பே என்று கருதப்படும் அளவிற்கு நாம் தேவனிடம் அன்புசெலுத்துவோமாயின் அதுவே அவருக்கு நாம் தரும் முதலிடமாகும்.

நாம் பெற்றுள்ள அனைத்துப் பொருட்செல்வமும் அவரால் நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவை என்று கருதி, அவருடைய இராஜ்யத்திற்கென்று செலவிடவேண்டும். நல்லவை என்று கருதப்படுபவை, சிறந்ததற்கு முன்னால் தகுதியற்றவை என்பதை நினைவிற்கொண்டவர்களாக, நிலைபேறான வாழ்வோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால் தேவனுக்கே முதலிடம் கொடுப்பவர்களாயிருப்போம்.

தேவனோடு சரியான உறவுகொண்டிருப்பதில், மனிதனுடைய மிகச் சிறந்தவிருப்பங்கள் அடங்கியிருக்கின்றன. தேவனுக்கு முதலிடத்தை கொடுப்பதே, அவரோடு நாம் கொண்டிருக்கும் சரியான உறவாகும். தேவனுக்கு முதலிடத்தை ஒரு மனிதன் கொடுத்தாலும், அவனுடைய வாழ்வில் அவன் நிறைவைப் பெறுவான். ஆனால் தேவனுக்கு அவன் இரண்டாவது இடத்தைக் கொடுப்பானாகில் அவனுடைய வாழ்வில் இடர்ப்பாடுகளைத் தவிர வேறொன்றுமே இராது. பரிதாபமான நிலையே எஞ்சிநிற்கும்.

இயலாமையை அகற்றும் இறைவாக்கு

மார்ச் 24

கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7).

ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, அதனைச் செயலாற்றத் தேவையான வலிமையை அவர் நமக்குத் தருவார் என்னும் உண்மையை நாம் எப்பொழுதும் நினைவுகூர்கிறவர்களாக இருக்கவேண்டும். நிறைவேற்ற முடியாதவைகள் என்னும் நிலையில் அக்கட்டளைகள் இருப்பினும், அவற்றைச் செய்துமுடிக்க வேண்டிய திறத்தையும் அக்கட்டளைகளோடு அவர் சேர்த்துத் தருகிறார்.

“இந்தப் பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்” என்று எத்திரோ மோசேயிடம் கூறினான் (யாத்.18:23). “ஒரு வேலையைச் செய்யும்பொருட்டு தேவன் ஒருவனை நியமிக்கும்போது, அதனை நிறைவேற்றத்தக்கவனாக அவனை ஆக்குவதும் அவர் பொறுப்பாகும்” என்று து.ழு.சேன்டர்ஸ் உரைத்துள்ளார்.

வாதநோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் குறைந்தது இருவரை இயேசு கிறிஸ்து தமது ஊழிய நாட்களிலே சந்தித்தார் (மத்.9:6, யோ.5:8). இரண்டு முறையும் அவர்களை எழச்சொன்ன இயேசு கிறிஸ்து தங்களுடைய படுக்கையை எடுத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார். அக்கட்டளைக்குக் கீழ்ப்படிய இணங்கியபோது, அவ்விருவருடைய வலிமையற்ற கை கால்களுக்குள் வல்லமை பாய்ந்தது.

நீரின்மேல் நடக்கும்படித் தன்னைக் கர்த்தர் அழைப்பாராயின் தன்னால் நீரின்மேல் நடக்க இயலும் என்பதை பேதுரு உணர்ந்தான். இயேசு கிறிஸ்து “வா” என்று அழைத்தவுடன் பேதுரு படகை விட்டிறங்கி நீரின்மேல் நடந்தான்.

சூம்பி தொய்ந்துபோன கரத்தை நீட்டுவது முடியாததாகும். ஆனால் தொய்ந்த கரத்தை உடைய ஒருவனிடம் கையை நீட்டும்படிக் கர்த்தர் கூறியவுடன் அவன் நீட்டினான். நலம் பெற்றான்.

ஒருசில அப்பங்களையும், மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க முடியும் என்ற கேள்விக்கு இடமேயில்லை. “அவர்கள் உண்ணுவதற்குக் கொடுங்கள்” என்று இயேசு நாதர் சீடர்களிடம் உரைத்தபோது இயலாமை மறைந்துபோயிற்று.

“லாசருவே வெளியே வா” என்று இயேசுகிறிஸ்து அழைத்தபோது, அக்கட்டளையோடு அவன் வெளியே வருவதற்குரிய வல்லமையும் புறப்பட்டுச் சென்றது. நான்கு நாட்கள் கல்லறையில் உறங்கியவன் எழுந்து வந்தான்.

இந்த உண்மைகளை நமக்குரியாதாக்கிக் கொள்ளவேண்டும். ஒருசெயலை நாம் செய்யும்படி தேவன் கூறும்போதும், அதற்குரிய பலத்தை அவர் தருவார் என்று நம்பாமல், அவரை எதிர்த்து வாதிடக்கூடாது. “தேவனுடைய கிருபையற்ற இடத்திற்கு அவர் உங்களை வழிநடத்திச் செல்லமாட்டார்.”

ஒரு வேலையைச் செய்ய தேவன் கட்டளையிடுவாராகில், அதைச் செய்வதற்கான பணத்தையம் அவர் தருகிறார். அவருடைய வழிநடத்துதலைக் குறித்து உறுதியுடையோர் பணத்தேவையைக் குறித்துக் கவலைப்படக்கூடாது. அவரே தேவைகளை நிறைவு செய்கிறவர்.

செங்கடலைப் பிளந்தவர், யோர்தனை வற்றிடச் செய்தவர். அவரே இன்றைக்கு நமது தேவனாக உள்ளார். அவர்தம் மக்கள் அவருடைய சித்தத்திற்குக் கீழ்படியும் வேளையில், எல்லா இயலாமையையும் நீக்கி விடும் கிரியையை அவர் இன்றும் செய்கிறவராகத் திகழ்கிறார். நம் தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற கிருபை நல்கும் தேவன் ஆவார்!.

தியாகத்துடன் கொடுத்தல்

மார்ச் 23

நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24).

கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தும்படியாக தாவீது கட்டளையைப் பெற்றபோது அதற்காகப் போரடிக்கிற களத்தையும், காளைகளையும், விறகுக்கு உருளைகளையும் அர்வனா தருவதற்கு முன்வந்தான். என்றாலும் தாவீது அவற்றை “விலைக்கு வாங்குவேனேயொழிய இலவசமாகப் பெறமாட்டேன்” என்று வற்புறுத்திக் கூறினான். தான் எந்த விலையையும் கொடுக்காமல் கர்த்தருக்கு ஒன்றைச் செலுத்த தாவீதுக்கு மனதில்லை.

ஒருவர் கிறிஸ்தவன் ஆவதற்கு அவனுக்கு எந்தச் செலவுமில்லை என்பதை நாம் அறிவோம். ஆயின் மெய்யான சீடனாக வாழ்வதற்குப் பெரும் விலையைக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறியக்கடவோம். “விலை ஏதும் செலுத்தாத சமயச் சார்பு பயனற்றது”.

பெரும்பாலும் கர்த்தருக்கென்று ஒப்புவிப்பதற்கு முன்னர் நமது வசதிகள், பணச்செலவு, இழக்கவேண்டிய இன்பங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு முடிவெடுக்கிறோம். களைப்புற்று இருப்பின் ஜெபக்கூட்டத்திற்குச் செல்வதில்லை. தலைவலியென்றால் திருமறையைக் கற்கச் செல்வதில்லை. நமது உல்லாசப் பயணம் தடைபடாததென்றால் சபைகூட்டத்திற்குச் செல்கிறோம்.

வெளியரங்கமாக ஜெபத்தை ஏறெடுப்பதற்கும், சான்று பகர்வதற்கும், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கும் துணிச்சலின்றி அமைதியைக் காக்கிறோம். அட்டையும், பூச்சிகளும் தாக்குமென்று கருதி, இயற்கைச் சீற்றதினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யச் செல்கிறதில்லை. பாம்புகளும், சிலந்திகளும் இருக்குமே என்ற எண்ணம் ஊழியத்தலத்திற்குச் செல்லவேண்டும் என்னும் நினைவிற்குக் கதவடைத்து விடுகிறது. கர்த்தருக்கென்று கொடுப்பது தியாகமாக இருப்பதில்லை, அது ஒரு சிப்பந்திக்கு அளிக்கும் அன்பளிப்புபோல இருக்கிறது. கொடுப்பதில் இழப்பு ஏற்படுகிறதில்லை. அந்த விதவை தனக்குரியதெல்லாவற்றையும் கொடுத்தாள். குடிகாரர்கள் வாந்தியெடுத்துப் போட்டதால் தனது வீட்டிலுள்ள எல்லாப் போர்வைகளும் கறைபட்டுள்ளன எனக்கூறிய ஆத்தும தாகங்கொண்ட மனிதனைப்போல நாம் நடந்துகொள்ளாமல், என்ன செலவாகும், வசதிக்குறைவு ஏற்படுமே, வீடு அழுக்காகிவிடுமே என்று கணக்கிட்டு விருந்தோம்பல் செய்கிறோம். இன்பமான உறக்கம், மற்றவர்களது தேவைக்கு உதவி செய்வதைத் தடுக்கிறது. மற்றவர்களுக்குப் பொருளுதவியும், ஆவிக்குரிய உதவியும் செய்யச் சென்ற ஒரு மூப்பரைப்போல நாம் மனமுவந்து தகுதியாய் நடப்பதில்லை.

ஒவ்வொருமுறையும் கிறிஸ்து நம்மை அழைக்கும்போதும், “இப்பணியில் என்ன கிடைக்கும்”? என்று கேட்க ஏவப்படுகிறோம். “இந்தப் பணியைச் செய்ய நான் என்ன விலை செலுத்தவேண்டும்”? என்று கேட்கப் பழகிக் கொள்வோமாக. “ஆவிக்குரிய வாழ்க்கையில் நடப்பன நமக்குப் பொருளீட்டுவதற்கு மாறாக, விலைகொடுப்பதாயிருப்பின் அதுவே சிறந்தது” என்னும் கூற்று அருமையானதாகும்.

நாம் மீட்பினை அடையும் பொருட்டு, கர்த்தர் என்ன விலை கொடுத்தார் என்று சிந்திப்போமாக. தியாகம் செய்வதையும், விலைகொடுத்தலையும் நாம் தவிர்ப்போமாயின், அந்நிலை தேவனுக்காகத் திரும்பச் செலுத்துவதில் நாம் எவ்வளவு குறைவுடையோர் என்பதையே எடுத்தியம்புகிறது.

கைகூடா நாட்டங்கள்

மார்ச் 22

உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான் (1.இராஜா.8:18)

யேகோவாவிற்கு எருசலேம் நகரில் ஆலயம் எழுப்பவேண்டும் என்பது தாவீது கொண்டிருந்த மிகப்பெரிய விருப்பங்களில் ஒன்றாகும். அவன் யுத்த மனிதனாக இருந்த காரணத்தினால், ஆலயம் கட்ட அனுமதிக்கப்படவில்லை என்று தேவன் சொல்லி அனுப்பியபோது, இந்தக் குறிப்பிடத்தக்க சொற்களையும் சேர்த்துச் சொல்லுகிறார். “உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்”. கர்த்தருக்காச் சில செயல்களைச் செய்ய மனவிருப்பம் கொண்டு அவற்றைச் செய்ய இயலாது போயினும் அவற்றை நாம் செய்ததாகவே தேவன் கணக்கிட்டுக்கொள்கிறார் என்று இதிலிருந்து தெளிவாகத் தோன்றுகிறது.

ஆயினும் காலம் தாழ்துவதினாலும் செயலற்ற தன்மையினாலும் நாம் எண்ணிய செயலைச் செய்யாது விடுவது, இத்தகைய கருத்திற்குப் பொருந்தாது. இங்கே விருப்பம் மட்டும் போதுமானதல்ல. “நல்ல நோக்கங்களால் நரகத்தின் சாலைகள் தளம் போடப்பட்டுள்ளது” என்று அழகாய்ச் சொல்லியிருக்கிறார்களே !

கர்த்தருக்கு மனமகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்துடன் சில செயல்களை நமது கிறிஸ்தவ வாழ்வில் செய்ய விரும்பியும் நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளினிமித்தம் அவற்றைச் செய்யத் தடைப்படுகிறோம். எடுத்துக்காட்டாக, திருமுழுக்கு எடுக்க விரும்பும் ஒரு இளம் விசுவாசி, நம்பிக்கையற்ற பெற்றோர்களின் நிமித்தமாக திருமுழுக்கு எடுக்காதிருக்கிறான். பெற்றோர்களிடதிருந்து உண்டாகிற எதிர்ப்பின் கடுமை குறைந்து, அமைதியான சூழ்நிலை உண்டாகும்வரை அவன் காத்திருக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் ஞானஸ்நானம் எடுக்காத நிலையை, ஞானஸ்நானம் எடுத்ததாகவே தேவன் கருதுவார் (இதனை நாம் போதனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது)

சபைக்கூட்டங்கள் அனைத்திலும் விசுவாசியாகிய ஒரு பெண் கலந்துகொள்ள விருப்பம் உடையவளாயிருந்தும், தனது குடிகாரக் கணவனுடைய வற்புறுத்தலின் நிமித்தம், தனது விருப்பத்தை நிறைவேற்ற இயலாதவளாயிருக்கிறாள்.  தன் கணவனுக்குக் கீழ்ப்படிவதையும் அவருடைய திருப்பெயரில் கூடுகின்ற விசுவாசப் பெருமக்களைக் காணவேண்டுமென்ற விருப்பத்தையும் நல்வினையாகவே தேவன் கருதுகிறார்.

பல ஆண்டுகளாக வேதாகமச் சிறப்புக்கூட்டங்களில் மனமகிழ்ச்சியோடு விருந்து பரிமாறி ஊழியம் செய்த வயது முதிர்ந்த பெண்மணி, தற்பொழுது உடல் நலக் குறைவின் நிமித்தம் அவ்விதம் செய்ய இயலாது கண்ணீர் வடிக்கிறாள். அவ்வித வேலைகளைச் செய்கிற மக்கள் பெறுகிற பரிசுப்பொருளை, அவளுடைய கண்ணீரின் நிமித்தம் தேவன் அவளுக்கும் தருவார்.

பணித்தலத்திற்கு செல்ல விருப்பங்கொண்டு தங்களை உண்மையோடு ஒப்புவித்தவர்கள், தங்களது சொந்த நகரத்தை விட்டுச் செல்ல இயலாதிருக்கிறார்கள். அப்படிப்பட்டோரின் வாஞ்சையை மற்றவர்கள் அறியாதிருப்பினும் தேவன் அறிவார். அவர்களது தூய வாஞ்சைக்குரிய பலனை கிறிஸ்துவின் நியாயாசனத்தினின்று பெறுவர்.

கொடுப்பதற்கு இந்த விதி பொருந்தும், தியாக உள்ளத்துடன் கர்த்தருடைய பணிக்குக் கொடுத்தவர்கள், இன்னும் கொடுக்க விருப்பம் கொள்கின்றனர். வரும் நாட்களில் தெய்வீகக் கணக்கு ஏட்டில் அவர்கள் அதிகமாகக் கொடுத்ததாக எழுதப்பட்டிருக்கும்.

நோயுற்றோர், உடலில் குறையுள்ளோர், வீட்டில் அடைபட்டுக் கிடப்போர். முதியோர் அனைவரும் முன் அணி நற்கீர்த்திக்குப் புறம்பானவர்கள் அல்லர். ஏனெனில், “அவருடைய இரக்கத்தினால், நமது சாதனைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது நமது கைகூடா நாட்டங்களையும் கருத்திற்கொண்டு, தேவன் நியாயம் செலுத்துகிறார்”.

மனிதனின் தீமை தேவனின் மகிமை

மார்ச் 21
 
மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக தீமைசெய்ய சில மனிதர்கள் திட்டமிட்டனர். அவனை நாடோடிக்கூட்டத்தில் விற்றனர். அவர்கள் அவனை எகிப்துக்குக்கொண்டு சென்றனர். தேவனோ, அவiனை அந்நாட்டின் அரசாட்சியின் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தினார். தனது ஜனங்களின் இரட்சகனாகவும் அவன் உயர்த்தப்பட்டான். நீங்கள் எனக்கு தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்று இந் நிகழ்ச்சியைக் குறித்து யோசேப்பு, தன் சகோதரருக்கு பின்னர் நினைவுபடுத்தினான் (ஆதி 50:20).

யூதர்களுக்கு எதிராக ஆமான் வெகுண்டு எழுந்தான். அது அவனுடைய அழிவிற்கும் அவன் யாரை அழிக்கவேண்டுமென்று நினைத்தானோ அவர்களுடைய புகழ்ச்சிக்கும் காரணமாயிற்று.

எபிரேய இளையர் மூவர் எரிகிற அக்கினிச் சூளைக்குள் தூhக்கியெறியப்பட்டனர். அவர்களை எறிந்தவர் கருகிப்போகும்படி தீப்பிளம்பு கடுமையாய் இருந்தது. ஆனால் அந்த எபிரேயர் மூவரும் தங்களுடைய உடலில் புகையின் வாசனைகூட இல்லாமல் காயமின்றி வெளியே வந்தனவர். அந்நிகழச்சியின் விளைவாக யூதர்களுடைய தேவனுக்கு எதிராகப்பேசுகிற எவனும் கொலைசெய்யப்படவேண்டுமென்று புறமக்களின் அரசன் கட்டளையிட்டான்.

பரலோக தேவனை நோக்கித் தனது மன்றாட்டை ஏறெடுத்ததால் தானியேல் சிங்கங்களின் குகையில் வீசியெறிப்பட்டான். வியத்தொகு வகையில் அவன் காக்கப்பட்டதை கண்ணுற்ற புற இன அரசன், தானியேலின் தேவனுக்கு முன் மக்கள் நடுங்கி அவரைக் கனப்படுத்தவேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் இது தொடர்கிறது. பலவித இடர்பாடுகளை சபை சந்தித்தது. நற்செய்தி நாற்பக்கங்களிலும் விரைந்து பரவிற்று. ஸ்தேவானின் உயிர் தியாகம் சவுலின் மனமாற்றத்திற்கு வித்திட்டது. பவுல் சிறையில் அடைக்கப்பட்டதால், தேவதத்தின் பகுதியாக விளங்கும் நான்கு மடல்கள் உருவாயின.

பின்னர் ஜான் ஹஸ் என்பவரின் சாம்பல் ஆற்றில் வீசப்பட்டது. சிறிதுகாலத்திற்குள்ளாகவே அந்த ஆறு பாய்ந்த இடமெங்கும் நிற்செய்தி பின் தொடர்ந்து பரப்பப்பட்டது.

திருமறையைக் கிழித்து காற்றிலே மனிதர்கள் பறக்கவிட்டனர். அதில் ஒரு தாளை எடுத்துப் படித்தவர் மகிமைக்குப் புகழ்ச்சியாக இரட்சிக்கப்பட்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மனிதன் ஏளனம் செய்கிறான். கடைசி நாட்களில் ஏளனம் செய்வோர் தோன்றுவார்கள் என்னும் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (2பேது 3:3-4).

மனிதனுடைய கோபத்தை தமக்கு புகழ்ச்சியாக தேவன் மாற்றுகிறார். அவருக்கு புகழ்ச்சியைக் கொண்டுவராத கோபத்தை அவர் அடக்குகிறார்.

மனிதனுடைய வரலாற்றில் நிகழும் கவர்ச்சிமிக்க நிகழ்ச்சி யாதொனில், தேவன் மனிதனின் கோபத்தைத் தனக்குப் புகழ்ச்சியாக மாற்றுவதேயாகும். மனிதன் வீழ்ந்துபோன நாளிலிருந்தே தேவனுக்கும் அவருடைய நோக்கத்திற்கும், அவர் தம் மக்களுக்கும் அவன் எதிர்த்துநிற்கிறான். அத்தருணங்களிளெல்லாம், உடனே தண்டியாது அவனுடைய செயல்களை தொடர்ந்து நடக்கவிட்டு யாவற்றையும் தம் மகிமைக்காகவும், தம் மக்களின் நலனுக்காகவும் தேவன் ஒருமுகப்படுத்த விடுகிறார்.

மனம்வருந்துமுன் காட்டும் தோழமை

மார்ச் 20

தகப்பனே… நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21)

கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ஓடிச்செல்லவில்லை, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமும் கொடுக்கவில்லை. மனந்திரும்புதல் முதலாவது நிகழ்ந்தாலொழிய மன்னிப்பை செயல்படுத்துவது நீதியுடையது என்று கருதமுடியாது. “அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக” என்பதே திருமறைக் கொள்கையாகும் (லூக்.17:3).

தொலைதூரத்தில் கெட்டகுமாரன் அலைந்து திரிந்தபோது, அவனுடைய தகப்பன் உதவியை அனுப்பியதாக எவ்விதக்குறிப்பும் இல்லை. அவ்வாறு செய்திருப்பானாயின், எதிர்த்து நின்றவனின் வாழ்க்கையில் தேவன் நடத்திய கிரியைக்கு அது தடையாக இருந்திருக்கும். தான்தோன்றித் தனமாகத் திரிந்தவனைத் தாழ்வான நிலைக்குக் கொண்டுவரச் செய்வதே கர்த்தருடைய இலக்காக இருந்தது. அவன் தாழ்வான நிலைக்குச் செல்வதற்கு முன்னர் மேல்நோக்கிப் பார்க்கமாட்டான். அப்பொழுதுதான் அவனுடைய சுயம் ஒரு முடிவிற்கு வரும் என்பதை அவர் அறிவார். அலைந்துதிரியும் கெட்டகுமாரன் பன்றியின் உணவாகிய தவிட்டை நோக்கி எவ்வளவு விரைவாகச் செல்கிறானோ, அவ்வளவு விரைவாக நொறுங்கிய உள்ளத்தைப் பெறுவான். ஆகவே, தன் குமாரனைக் கர்த்தரிடம் ஒப்புவிப்பது தகப்பனுக்கு அவசியமாயிற்று. நெருக்கடியான கடைசி எல்லைவரை சென்று திரும்பி வருவான் எனக் காத்திருந்தான்.

பெற்றோர்கள், குறிப்பாக, தாய்மார்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். தேவன் அனுப்பும் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலிருந்தும் கலகம் செய்யும் மகனையோ அல்லது மகளையோ விடுவிப்பதே பெற்றோரின் இயற்கையான இயல்பாகும். இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்வதினால் கர்த்தருடைய நோக்கம் தடைபட்டு, அவர்களுக்குப் பிரியமானவர்களுடைய வாழ்வில் வேதனை தொடர்கிறது.

“தவறிழைக்கிறவர்களிடத்தில் நாம் காட்டும் உண்மையான அன்பு யாதெனில், அவர்கள் தவறிழைக்கிறபோது நாம் காட்டும் தோழமையல்ல. மாறாக, எல்லாவற்றிலும் நாம் கர்த்தருக்கு உண்மையோடு நடந்துகொள்வதேயாகும் என்று ஸ்பர்ஜன் ஒருமுறை கூறியுள்ளார். ஒருவன் தன்னுடைய பொல்லாப்பில் தொடர்ந்து நிலைத்திருக்கும்போது செல்லங்கொடுத்துக் கெடுப்பது உண்மையான அன்பல்ல. ஒருவரைக் கர்த்தரிடத்தில் திரும்பச் செய்து அவருக்காக மன்றாடுவதே உண்மையான அன்பாகும். “கர்த்தாவே, என்ன விலையானாலும் சரி, அவரைப் புதுப்பித்து மீண்டும் நல்வழிப்படுத்துவீராக” என்றே மன்றாடவேண்டும்.

மனவருத்தம் அடைவதற்கு முன்னர் அப்சலோமைத் திரும்பி அழைத்துவந்தது தாவீது செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். அதன் பிறகு சிறிது காலத்திற்குள்ளாகவே, மக்களுடைய உள்ளங்களை அப்சலோம் வெற்றிகொண்டான். அவர்களுடைய ஆதரவைப் பெற்றவன் தன்னுடைய தகப்பனுக்கு எதிராகக் கலகம் செய்யத்திட்டமிட்டான். கடைசியில், தனது தகப்பனை எருசலேமை விட்டுத் துரத்திவிட்டு, தன்னையே அரசனாக அவன் ஸ்தானத்தில் முடிசூட்டிக்கொண்டான். தாவீதைக் கொன்றுபோடும்படி பெரும் படையுடன் அப்சலோம் வந்தபோதும்கூட, அவனை உயிரோடு விட்டுவைக்கும்படித் தன் வீரர்களுக்கு தாவீது கட்டளை கொடுத்தான். இதைக் காட்டிலும் மேலான நினைவு கொண்ட யோவாப், அப்சலோமைக் கொன்றுவிட்டான்.

தங்களுடைய மகனையோ மகளையோ பன்றிகள் வாழும் பட்டிக்கு தேவன் கொண்டுபோகிறதினால் உண்டாகும் வலியைப் பொறுத்துக் கொள்ளும் பெற்றோர், பின்னால் நிகழக்கூடிய மாபெரும் வேதனையிலிருந்து தப்புவர்.

கோழைத்தனமான மௌனம்

மார்ச் 19
மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை. பாராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே. (நியா.5:23)

இஸ்ரவேலின் படை கானானியருக்கு எதிராகப் போர் தொடுத்த வேளையில் அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்ததால், தெபோராளின் பாடல் அவர்களுக்கு எதிராகச் சாபத்தைக் கூறிற்று. ரூபன் குடிமக்களும் அதிர்ச்சியூட்டும் வெறுப்பிற்கு ஆளானார்கள். அவர்கள் நல்நோக்கம் கொண்டிருந்தனர். எனினும் மந்தையைவிட்டுச் செல்லவில்லை. கீலேயாத், ஆசேர், தாண் ஆகியோரும் போரில் ஈடுபடாத காரணத்ததினால் இகழ்ச்சிக்குரிய பெயரைப் பெற்றார்கள்.

“பெரிதான நெருக்கடியில், தர்மம் சிக்குண்ட வேளைகளில், எப்பக்கமும் சாராது இருப்போருக்கென்று நரகத்தில் கொதிக்கும் சூடான இடம் ஒதுக்கி வைக்கப்ட்டிருக்கிறது.” என்று டென்டே என்பார் கூறியுள்ளார். நீதிமொழிகள் நூலிலும் அதே எண்ணம் எதிரொலிக்கிறது. “மரணத்தக்கு ஒப்புpக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத் தக்கதாகப் பலனளியாரோ?” என்று அங்கு படிக்கிறோம் (நீதி.24:11-12). “உண்மையான மேய்ப்பன் ஆபத்துக்காலம் என்றோ (வச.10), சோர்வடையச் செய்யும் அலுவல் என்றோ( வச.10), அறியேன் என்றோ (வச.12) கூறமாட்டான். கூலிக்கு அமர்த்தப்பட்டவனே அங்ஙனம் கூறுவான். “அன்பை எளிதாக அடக்கிவிட முடியாது. அன்புகூரும் தேவனையும் அடக்க இயலாது” என்று கிட்னர் என்பார் கருத்துரைத்துள்ளார்.

யூதர்களுக்கு எதிரான அலை, நமது நாட்டை அடித்துச் செல்லுமெனில் நாம் யாது செய்வோம்? ய+தமக்கள் சித்திரவதைக் கூடங்களுக்கும், உயிர்கொல்லி வாயு நிறைந்த அறைகளுக்கும், அக்கினிச் சூளைக்கும் கொண்டுபோகப்படுவார்களானால் நாம் என்ன செய்வோம்? அவர்களுக்கு அடைக்கலம் தர நமது உயிரைப் பணயம் வைப்போமா?

ஒருவேளை நமது உடன் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிற வேளையில், அவர்களுக்கு அடைக்கலம் தருவது கடுந்தண்டனைக்குரியது என்றால், அவர்களை நமது வீடுகளில் வரவேற்போமா? நாம் என்ன செய்வோம்?

அரியசெயல் என்று சொல்லமுடியாவிடினும், நமது நாட்களில் நடைபெறக்கூடிய ஒரு எடுத்துக்காட்டைக் காணுவோம். ஒரு கிறிஸ்தவக் கூட்டமைப்பிலே நீங்கள் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கிறீர்கள் எனக் கொள்வோம். செல்வந்தரும் செல்வாக்கு வாய்ந்தவருமாகிய வேறொரு இயக்குநருடைய வெறுப்பிற்கு ஆளான ஒரு உண்மையுள்ள ஊழியர்மீது, அச்செல்வந்தருடைய மனநிறைவிற்காக கடும் பழி சுமத்தப்படுமென்றால், நீங்கள் உங்களுடைய கைகளைக் கட்டிக்கொண்டு மௌனமாக இருப்பீர்களா?

கர்த்தராகிய இயேசுகிறிpஸ்து விசாரிக்கப்பட்ட வேளையில், யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தில் நாமும் ஒரு அங்கத்தினராக இருந்திருப்போமாயின் அல்லது அவர் சிலுவையில் அறையுண்டபோது அங்கே இருந்திருப்போமாயின், எப்பக்கமும் சாராது இருந்திருப்போமா? அல்லது அவரோடு நாம் நம்மை இணைத்துக்கொண்டிருப்போமா?

“மௌனம் எப்பொழுதும் பொன்னானது அல்ல. சில வேளைகளில் அது கோழைத்தனமானதாக விளங்கும் “

பிறர் நலம் பேணுதல்

மார்ச் 18

அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4)

 

பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் “பிறர்” என்பதாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிறருக்காக வாழ்ந்தார். பவுல் பிறருக்காக வாழ்ந்தார். தீமோத்தேயு பிறருக்காக வாழ்ந்தான். எப்பாபிரோதீத்து பிறருக்காக வாழ்ந்தான். நாமும் பிறருக்காக வாழவேண்டும். அவ்வாறு வாழ்வதே சரியானது என்பது மட்டுமின்றி, அதுவே நமது சொந்த நலனாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சில நேரங்களில் பிறருக்காக வாழ்வது செலவுமிக்கதாயிருக்கும். அவ்வாறு வாழாதிருப்பது அதனினும் செலவுமிக்கதாகிவிடும்.

தங்களுடைய சொந்த நலன் கருதி வாழ்கிறவர்களால் நமது சமுதாயம் நிறைந்திருக்கிறது. பிறருக்காக பணியாற்றுவதில் சுறுசுறுப்பாயிராமல், அவர்கள் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர். ஒரு சிறிய தலைவலியோ அல்லது உடல் வேதனையோ உண்டாகுமானால் அதனையே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முடிவில் தன்னைப் பற்றிய கற்பனைப் பிணியால் அவதிப்படுகின்றனர். ஒருவரும் தங்களிடம் அக்கறை கொள்வதில்லை என்று குறைகூறுவர். கூடியவிரைவில் சுயபரிதாபத்தில் புரளுவார்கள். தங்களைக் குறித்து அதிகமாகச் சிந்திக்க சிந்திக்க, அதிகமாகச் சோர்வடைந்து விடுவார்கள். தன்னைத்தானே நுணிக்கிக்காணும் பயங்கரமான இருளுக்குள் அவர்களுடைய வாழ்க்கை சென்றுவிடுகிறது. பின்னர் மருத்துவரைக் காணச்செல்வர். மிகுதியான மாத்திரைகளை விழுங்குவார்கள். தன்னலங்கருதுவதால் ஏற்படும் நோயினை மாத்திரைகள் குணமாக்குவதில்லை. தங்களுடைய வாழ்வில் உண்டான சலிப்பையும் சோர்வையும் அகற்றிட, மனநோய் மருத்துவரைக் காண அவ்வப்போது செல்வார்கள்.

இப்படிப்பட்டோருக்கு நல்லதொரு மருந்து, மற்றோர்க்குப் பணிபுரியும் வாழ்க்கையேயாகும். நோயின் காரணமாக வீட்டிலே அடைபட்டுக்கிடப்போரைச் சந்திக்கச் செல்லலாம். நண்பர்களை நாடும் முதிர்வயதினரைக் காணச் செல்லலாம். சில மருத்துவ மனைகளில் மனமுவந்து பணிபுரிய வருகிறவர்களுக்குச் சில வேலைகள் உள்ளன. மடல்களையோ, வாழ்த்துக்களையோ அனுப்பிச் சிலரை மகிழ்வடையச் செய்யலாம். தங்கள் சொந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய மிஷனறிகள் ஆவலுள்ளவராக இருக்கிறார்கள். அவர்களுக்கு மடல் எழுதலாம். மற்றும் ஆத்துமாக்கள் இரட்சிப்படைய வேண்டும். கிறிஸ்தவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். சுருங்கக்கூறின் எவரும் சலிப்படையத் தேவையில்லை. ஆக்கபூர்வமான வேலையினால் ஒருவர் தனது வாழ்வை நிறைத்துக்கொள்வதற்குப் போதுமான அலுவல்கள் பல உள்ளன. மற்றவர்களுக்காக வாழ்வதனால் நமக்கு நண்பர்கள் பெருகுகிறார்கள். நமது தனிப்பட்ட வாழ்க்கை அதிக ஆர்வமுடையதாக மாறுகிறது. வாழ்க்கையிலும் மனதிலும் நிறைவு உண்டாகும்.

“மற்றவர்கள்மீது இரக்கமுடைய இருதயம், தனது சொந்த சோகங்களில் அமிழ்ந்து போகாது, சுய பரிதாபம் என்னும் உயிர்கொல்லியில் அமிழ்ந்துபோகாது” என்று P.ஆ. டெர்காம் என்பார் கூறியுள்ளார். “பிறர் நலன் என் வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும் கர்த்தாவே. மற்றவர்களுக்காக நான் வாழ உதவிசெய்யும். உம்மைப்போல நான் வாழ என்னை நடத்துவீராக”.

தேவனுடைய வழி நடத்துதல்

மார்ச் 17

குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9)

தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித தவறான மனப்பான்மையை இந்தக் குதிரையும், கோவேறு கழுதையும் சித்திரமாகக் காட்டுகின்றன என்றே கருதுகிறேன். குதிரை துரிதமாக முன்னேறிச் செல்ல விரும்புகிறது. கோவேறு கழுதை பின்தங்கி நிற்கிறது. குதிரை கட்டுக்கடங்காமல், துணிச்சலோடு, மூர்க்கத்தோடு செல்ல முனைகிறது. கோவேறு கழுதையோ பிடிவாதமுடையதும், எளிதில் கையாள இயலாததும், சோம்பலானதுமாக இருக்கிறது. இந்த இரண்டு மிருகங்களும் புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவையாக உள்ளன என்று சங்கீதப் பாடகன் கூறுகிறான். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலோழிய எஜமானிடத்தில் அவை வரா.

தேவனுடைய வழிநடத்துதலுக்குச் செவிமடுத்தவர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நமது சுய ஞானத்தினாலே பாய்ந்து செல்கிறவர்களாகவோ, அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும்போது தயங்கிப் பின்தங்கி நிற்கிறவர்களாகவோ நாம் கணப்படலாகாது.

அனுபவத்தின் அடிப்படையில் இதற்குத் தேவையான சில விதிமுறைகள் உள்ளன.

இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் தேவனுடைய வழிநடத்துதல் உறுதி செய்யப்படவேண்டுமென்று தேவனிடத்தில் வேண்டுங்கள். “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்பண்ணப்படவேண்டும்” என்று அவர் சொல்லியிருக்கிறார் (மத்.18:16). ஒரு வேதவசனம், மற்றொரு கிறிஸ்தவரின் ஆலோசனை, சூழ்நிலைகள் வியத்தகு முறையில் ஒருங்கிணைந்து வருவது ஆகியவை சாட்சிகள் என்று கருதப்படும். அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் இரண்டு அல்லது மூன்று வௌ;வேறான குறிப்புகளை நீங்கள் பெற்றால், ஐயமும் அவநம்பிக்கையும் கொள்ளத் தேவையில்லை.

தேவனுடைய வழிநடத்துதலை நீங்கள் நாடுகிறபோது, எவ்வித நடத்துதலையும் நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையெனில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே தரித்து இருக்கவேண்டும் என்பதே அவருடைய வழிநடத்துதல் ஆகும். “செல்வதற்கு இருள் சூழ்ந்திருப்பின், இருப்பதற்கு வெளிச்சம் உண்டாயிருக்கிறது” என்பது இன்னும் உண்மையாக இருக்கிறது.

தெளிவான வழிநடத்துதல் கிடைக்கும்வரை காத்திருக்கவேண்டும். காத்திருக்காமல் செயல்ப்படுவது கீழ்ப்படியாமை என்றே கருதப்படும். மேகஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் கிளம்பும் வரை இஸ்ரவேல் மக்கள் தங்களது பயணத்தைத் தொடங்கக்கூடாது. தாங்களாகச் செய்கின்ற எவ்வித செயலுக்கும் அறிவுபூர்வமாக எத்தகைய விளக்கமளித்தாலும், அதனைப் பொறுத்தருள முடியாது. மேகம் நகரும்போது அவர்கள் பயணத்தைத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னும் செல்லக்கூடாது. பின்தங்கியும் இருக்கக்கூடாது.

கடைசியாக, கிறிஸ்துவின் சமாதானம் உங்களுடைய இருதயங்களில் நடுவராகச் செயல்படட்டும். கொலோசேயர் 3:15ம் வசனத்தின் பொருள் இதுவே. உண்மையான தேவ நடத்துதினால் உகந்தவழியில் நாம் செல்லும் உள்ளுணர்வுகளினாலும், அறிவாற்றல்களினாலும் சமாதானத்தைப் பெறுவோம். தவறான வழியில் செல்லும்போது சமாதானத்தை இழந்துவிடுவோம்.

தெய்வீக சித்தத்தை அறியவும், உடனடியாக அதற்குக் கீழ்ப்படியவும் ஆவல் உடையவராக இருப்போமென்றால் தேவனால் ஒழுங்குபடுத்தப்பட, இந்த அறிவற்ற மிருகங்களைப் போன்று வாய்கட்டப்பட வேண்டியதில்லை. கடிவாளம் பூட்டப்பட வேண்டியதில்லை.

பெறுதலும் பெருக்குதலும்

மார்ச் 16

உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26).

இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் “உள்ளவன்” என்னும் சொல், மிகுதியான உடைமை உடையவனாக இருக்கிற ஒருவன் என்னும் பொருளில் குறிக்கப்படவில்லை. கற்றுக்கொண்டிருப்பவைகளுக்குக் கீழ்ப்படிகிற தன்மையையும், கொடுக்கப்பட்டவைகளைப் பயன்படுத்தும் தன்மையையும் இச்சொல் குறிக்கிறது. இதனை வேறுவகையாகவும் கூறலாம். நாம் எதை உடையவர்களாக இருக்கிறோமோ அதனைக் குறிக்காமல், நமது உடைமையைக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதையே இது குறிக்கிறது.

திருமறையைக் கற்றுக்கொள்வதில், மேலான கொள்கை ஒன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை பெற்றுக்கொண்ட வெளிச்சத்தை உண்மையோடு பின்பற்றுவோமாயின், தேவன் இன்னும் மிகுதியான வெளிச்சத்தை நமக்குத் தருவார். கிறிஸ்தவ வாழ்வில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பவன் யாரெனில், திருமறை கூறுகிறவைகளை உளமார்ந்து பின்பற்ற முடிவுசெய்பவனேயாவான். தன்னைச் சூழ இருக்கும் விசுவாசிகள் அங்ஙனம் வாழாவிடினும், அவன் திருமறைக்குக் கீழ்ப்படிகிறவனாயிருப்பான். அதாவது ஒருவனுடைய நுண்ணறிவுத்திறன் இன்றியமையாததன்று. அவனுடைய கீழ்ப்படிதலின் திறனே கணக்கிடப்படும். கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்குத் திருமறை தனது பொக்கிஷத்தைத் திறந்தளிக்கிறது. ஓசியா தீர்க்கதரிசி இதனை அழகுற எடுத்தியம்பியுள்ளான்: “அப்பொழுது நாம் அறிவடைந்து கர்த்தரை அறியும்படித் தொடர்ந்து போவோம்.” எவ்வளவு அதிகமாக நாம் கற்றவைகளைப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்கு அவர் வெளிப்படுத்துவார். அறிவும், செயலும் இணையுங்கால், பெருக்கம் விளைகிறது. செயல்பாடு இல்லாத அறிவு, தேக்கநிலைக்கு வழி வகுக்கும்.

நமக்களிக்கப்பட்ட வரங்களுக்கும் திறமைகளுக்கும் இவ்விதி பொருந்தும். தங்களிடம் ஒப்புவிக்கப்பட்ட ராத்தலைக்கொண்டு பத்து ராத்தலையும், ஐந்து ராத்தலையும் சம்பாதித்தவர்கள் முறையே பத்து நகரத்திற்கும், ஐந்து நகரத்திற்கும் அதிகாரிகளாக்கப்பட்டனர் (லூக்.19:16-19).

நமது பொறுப்புகளைச் செவ்வனே வகிக்கும்போது, கூடுதலான நற்பேறுகளையும், பொறுப்புகளையும் பரிசாகப் பெறுவோம் என்பது தெளிவு. தன்னிடத்தில் ஒரு ராத்தலைப் பெற்றும், அதைக்கொண்டு ஒன்றும் செய்யாதவன் அதனை இழந்து போயினன். ஆகவே, தாங்கள் பெற்றுக்கொண்டவைகளைக் கர்த்தருக்கென்று பயன்படுத்தாதவர்கள், அவ்வாறு செயலாற்றும் திறமையை இழந்துபோவார்கள். “நீங்கள் பயன்படுத்தாத ஒன்றை இழந்துபோவீர்கள்”.

நமது சரீரத்தில் எந்த ஒரு அங்கத்தையும் நாம் பயன்படுத்தவில்லையெனில் அது பயனற்று வீணாகிப்போகும். தொடர்ந்து பயன்படுத்துவதால் அதன் இயல்பான வளர்ச்சியை அது பெறும். ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அதுபோலவே நடக்கிறது. துணிவற்ற தன்மை, சோம்பல் ஆகியவற்றால் நாம் பெற்றுள்ள வரத்தை அடக்கம் செய்வோமாயின், தேவன் நம்மை அறையில் அடைத்துப்போட்டு, நமது இடத்தில் வேறொருவரைப் பயன்படுத்துவார்.

ஆகவே வேதத்தின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதும், வாக்குறுதிகளை நாடுவதும், தேவன் நமக்குக் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதவையாகும்.

செலவு பண்ணுதலும் செலவு பண்ணப்படுதலும்

மார்ச் 15

தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24)

விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வைக் குறித்து இரண்டு வகையான மனப்பான்மைகொள்ள முடியும். அதனை நாம் காத்துக்கொள்ளலாம். இல்லையேல் வேண்டுமென்றே கிறிஸ்துவுக்காக அதனை இழந்துபோகலாம்.

அதனைக் காக்கவேண்டும் என்று எண்ணுவதே நமது இயல்பாகும். நாம் தன்னலங்கருதி வாழ்கிறவர்களாக இருக்கிறோம். கடும் முயற்சி ஏதொன்றிலும் ஈடுபடாமல் நம்மைப் பாதுகாக்க முயற்சி செய்கிறோம். அசௌகரியங்களைத் தவிர்க்கிறோம். அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், இழப்புகள், வசதிக்குறைவுகள் இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள கவனத்தோடு திட்டங்களைத் தீட்டுகிறோம். “உள்ளே ஒருவரும் பிரவேசிக்கக்கூடாது” என்ற பலகை தொங்கவிடப்படுவதுபோல நமது வீடுகள் தனிப்பட்டோர் சொத்துகளாகக் காட்சியளிக்கும். இது தனது குடும்பத்திற்கு மட்டுமே உரியது. அப்படிப்பட்ட இல்லங்களில் விருந்தோம்பல் ஒருபோதும் நடைபெறுவதில்லை. காரியங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கும் என்பதன் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கிறோம். நமது திட்டங்களுக்கு அவை இடையூறாக இருக்குமாயின், நமக்கு வேலைப்பளு மிகுதியாகக்கூடிய சூழ்நிலை ஏற்படுமாயின் அல்லது பணச்செலவு உண்டாகுமாயின் அதனை வேண்டாமென்று மறுத்துக்கூறுகிறோம். நாம் உடல்நலம் பேண அளவிற்கரிய கவனம் செலுத்த முற்படுகிறோம். இரவு உறக்கம் கெடுமென்றும், நோய் ஒட்டிக்கொள்ளக்கூடிய நிலையோ, மரணமோ அல்லது சரீர பாதிப்போ உண்டாகுமென்றும் எண்ணிக் கடினமான வேலையைச் செய்ய மறுக்கிறோம். நம்மைச் சூழ இருக்கிறவர்களுடைய தேவைகளைக் காட்டிலும், நமது தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். கர்த்தருடைய வருகை தாமதிக்குமாயின் சிறிது காலம் வாழ்ந்து பின்னர், புழு அரித்து மாய்ந்துபோகும் இந்தச் சரீரத்திற்காகவே வாழ்கிறோம்.

நம்முடைய வாழ்வைக் காக்க நாம் முயற்சி செய்வதில் அதை இழந்து விடுகிறோம். தன்னலங்கருதி வாழ்வதினால் ஏற்படுகின்ற கடுந்துயரங்களைத் தாங்குகிறோம். மற்றவர்களுக்காக வாழ்வதினால் கிடைக்கும் நற்பேறுகளை இழந்துபோகிறோம். கிறிஸ்துவுக்காக நமது வாழ்வை இழப்பது இதற்குப் பதிலாகச் செய்யக்கூடியதாகும். சேவைபுரிதலும், தியாகமும் நிறைந்த வாழ்க்கையாக அது காணப்படும். தேவையற்ற ஆபத்தை நாம் தழுவிக்கொள்ளாவிட்டாலும் அல்லது உயிர்த்தியாகம் செய்ய முன்வராவிட்டாலும் என்ன விலைகொடுத்தாவது நமக்களிக்கப்பட்ட ஊழியத்தை மறுக்காமல் செய்து முடிப்போமாக. “நம்முடைய ஆத்துமாவையும், சரீரத்தையும் கர்த்தர் நிமித்தமாக உழப்படுவதற்கு ஒப்புவித்தலில்”, ஒரு அர்த்தம் உள்ளது. அவருக்காக நாம் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் நம்மை ஒப்புவிப்பது நமது மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கணக்கிடுவோம். நமது வீட்டை திறந்துவைப்போம், நமது உடைமையைச் செலவுசெய்வோம், தேவையுள்ளவர்களுக்கு உதவிசெய்ய நமது நேரத்தைக் கொடுக்கக்கூடியவர்களாகவும் இருப்போம்.

கிறிஸ்துவுக்காகவும், பிறருக்காகவும் நமது வாழ்வை ஊற்றி உண்மையான வாழ்வைக் கண்டடைவோம். நமது வாழ்வை இழப்பதால், உண்மையில் அவர்களை நாம் இரட்சிக்கிறோம்.

பயனற்ற மந்தமான செவி

மார்ச் 14

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18)

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி எப்படிக் கேட்கிறோம் என்பதும் இன்றியமையாததாகும். திருமறை எழுத்துகளை நாம் அக்கறையின்றி கேட்கக்கூடியவர்களாக இருக்க இயலும். மாவல்லமையுள்ள தேவன் தமது வேதத்திலிருந்து நம்மோடு பேசுகிறார் என்பதைக் குறித்துக் கவலையற்றவர்களாக, மற்ற நூல்களைப் படிக்கிறதுபோல திருமறையையும் படிக்கிறவர்களாகக் காணப்படுகிறோம்.

குறைகாணும் எண்ணத்தோடு நாம் கேட்கிறவர்களாக இருக்கலாகாது. வேதத்தைக் காட்டிலும் மனிதனுடைய நுண்ணறிவிற்குச் சிறப்பைக் கொடுக்கிறோம். நாம் வேதத்தினால் நியாயம் தீர்க்கப்படுவதற்கு நம்மை ஒப்புவிப்பதற்குப் பதிலாக, நாம் வேதத்தை நியாயம் தீர்க்கிறோம்.

எதிர்த்து நிற்கும் மனப்பான்மையோடு நாம் கேட்கிறவர்களாக இருக்கலாகாது. சீஷத்துவத்தின் கண்டிப்பும் வலியுறுத்திச் சொல்லப்படும்போது அல்லது பெண்;கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவும், அவர்கள் தங்களது தலையை முக்காடிட்டுக் கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லப்படும்போது சீற்றம்கொண்டு கீழ்ப்படிவதற்கு மறுக்கிறோம்.

“ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” என்று யாக்கோபு நிருபத்தில் கூறியிருப்பது போன்று, நாம் கேட்கிறதை மறந்துவிடுகிறவர்களாயிருக்கிறோம் (யாக். 1:23-24).

பெரும்பாலானவர்கள் உணர்வற்ற நிலையில் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள். இறைமொழியை எவ்வளவாகக் கேட்டும், இப்படிப்பட்டோர் இதைக் குறித்து எவ்வித உணர்வும் கொள்ளவதில்லை. தேவனுடைய செய்தியை இயந்திரம் போலக் கேட்கிறார்கள். இது வழக்கமான ஒன்றுதானே என்னும் எண்ணுத்துடன் கேட்கின்றனர். அவர்களுடைய செவிகள் மந்தமாகிப்போயுள்ளன. “இதுவரை நான் கேட்காத என்னத்தை நீங்கள் சொல்லப்போகிறீhகள்?” என்ற எண்ணம் உடையவர்களாயிருக்கிறோம்.

கீழ்ப்படியவேண்டும் என்ற எண்ணமற்று தேவனுடைய வார்த்தைகளை மிகுதியாக நாம் கேட்கிறவர்களாக இருப்போமென்றால், ஆய்வுத்திறன் அற்றுச் செவிடர்களாகிப் போவோம். நாம் கேட்க மறுத்தால், கேட்கும் திறனை இழந்துபோவோம். பணிவுடனும், கீழ்ப்படிதலோடும், உள்ளார்வத்துடனும் கேட்பதே மிகச் சிறந்த முறையாகும். வேறு எவரும்: நிறைவேற்றவில்லை என்று அறிந்தும், வேதம் என்ன கூறுகிறதோ அதன்படி செய்வேன் என்ற முடிவோடு நாம் அதை அணுகவேண்டும். புத்தியுள்ள மனிதன் கேட்கிறவனாக மட்டுமன்றிச் செயகிறவனாகவும் இருக்கிறான். தமது வசனத்துக்கு நடுங்குகிறவனையே தேவன் நோக்கிப் பார்க்கிறார் (ஏசா.66:2).

தேவனுடைய வசனத்தைக் கேட்டபோது தெசலோனிக்கேயர் அதை மனிதர் பேசும் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல் அது மெய்யாகவே தேவவசனம் என்று அறிந்து ஏற்றுக் கொண்டதினாலே பவுல் அவர்களைப் போற்றினார் (1.தெச.2:13). அதுபோன்றே நாமும் கவனத்துடன் கேட்கிறவர்களாயிருக்கவேண்டும்.

கேள்வியும் செயலும்

மார்ச் 13

நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24)

நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை எச்சரிக்கிறார். காது என்னும் வாசல் வழியாக உட்செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். மேலும் நாம் கேட்டவற்றின்படிச் செம்மையாகச் செயலாற்றுவதும் நமது கடமையாகும்.

மிகத் தெளிவாகத் தெரியக்கூடிய பொய்யை நாம் கேட்கக்கூடாது. இதுவரை காணாத அளவிற்கு, மாறுபாடான சமயக் குழுவினர் பிரசாரத்தைச் செய்கின்றனர். யாராவது கேட்கிறதற்கு விருப்பமுடையவராக இருக்கிறாரா என்று தேடி அலைகின்றனர். அப்படிப்பட்டவரை வீட்டிலே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் அவரை வாழ்த்தவும் கூடாது என்று யோவான் நம்மை எச்சரிக்கிறார். அவர் கிறிஸ்துவுக்கு எதிரிகள்.

நமது பக்தியை நிலைகுலையச் செய்யும் ஏமாற்றுவேலையை நாம் நம்பக்கூடாது. கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும், சமயக்கல்லூரிகளிலும் படிக்கும் இளைஞர்கள் தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்கவும், மறுக்கவும்தக்கதான செய்திகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். கர்த்தர் செய்த அற்புதங்களுக்குத் தவறான விளக்கமளிக்கின்றனர். அவரை மேலோட்டமாகப் புகழ்ந்து குற்றப்படுத்துகின்றனர். தெளிவான வேத உபதேசங்களின் ஆழமான கருத்துக்களைத் தீவிரங்குறையச் செய்கின்றனர். பக்தியை நிலைகுலையச் செய்யும் அப்படிப்பட்ட போதனைகளுக்குக் கீழ் அமர்ந்திருந்து, பாதிப்பிற்குள்ளாகாது இருப்பது கடினம். மாணாக்கனின் விசுவாசம் அழிக்கப்படாது போயினும், அவனும் மனம் தீட்டுப்படும். “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?”(நீதி.6:27-28). “இல்லை!” என்பதே இதனுடைய வெளிப்படையான விடையாகும்.

தூய்மையற்ற, காம உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறவற்றையும் நாம் கேட்கக்கூடாது. இன்றைய சமுதாயத்தில் மிகவும் மோசமான மாசுபாடு உள்ளத்தில் எழும் மாசுபாடேயாகும். பற்பல செய்தித்தாட்கள், பத்திரிகைகள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைக் குறிக்கும் ஒரே சொல் அருவருப்பு என்பதாகும். இவற்றில் தொடர்ந்து ஈடுபாடு கொள்வதால், பாவத்தின் கொடுமையை உணராது போய்விடுவோம். அதனுடைய கேடுபாடு அதோடு முடிவடைந்து போவதில்லை. தகாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறவற்றை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதால், அந்த எண்ணம் நமது பரிசுத்த நேரங்களில் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வரும்.

தகுதியற்றதும், அற்பத்தனமானதும் செய்திகளால் நமது மனதை நிரப்பிக் கொள்ளக்கூடாது. வாழ்க்கையென்பது குறுகிய காலத்திற்குரியது. கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை மிக விரைவில் செய்யவேண்டியவர்களாயிருக்கிறோம். “நாம் எல்லோரும் இப்புவியில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்புரிய வேண்டியவர்களாக இருக்கிறோம்”.

தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்பதற்கு கவனமுள்ளவர்களாயிருப்பதே விசுவாசிகளுக்குத் தகுதியாகும். திருமறை வசனங்களால் நமது உள்ளங்களை நிறைத்துக்கொண்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள தூய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தேவனைப்பற்றிய சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்திப்போமாயின், அவருடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுவோம். நம்மைச் சூழ தலைவிரித்தாடும் ஒழுக்கக்கேட்டினால் களங்கப்படாமல் பிரிந்து வாழ்கிறவர்களாகக் காணப்படுவோம்.

கர்த்தருக்கு ஆற்றும் சேவை

மார்ச் 12


மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40)

நற்பலன் நல்குகின்ற உற்சாகமூட்டும் செயலாகவும், நம் கவனத்தை ஈர்க்கும் எச்சரிப்பாகவும் விளங்கும் ஒன்றை இங்கே நாம் காண்கிறோம். கிறிஸ்துவின் சகோதரருக்கு ஆற்றிய நன்மை அவருக்கே செய்ததாகக் கருதப்படுகிறது.

உடன் விசுவாசிக்கு நாம் பாராட்டும் தயவின் காரணமாக, ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குத் தயவு பாராட்டுகிறவர்களாக நாம் காணப்படுவோம். தேவனுடைய மக்களுக்கு விருந்தோம்பல் செய்வது, நமது வீடுகளில் அவருக்கே விருந்து செய்வதற்கு ஒப்பாகும். நமது வீட்டில் இருக்கும் சிறந்த படுக்கை அறையை தேவனுடைய மக்களுக்கு அளிப்போமாயின் அதனை அவருக்கே அளித்ததாகக் கருதப்படும்.

இராஜாதி இராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் நமது இரட்சகர் நம் இல்லம் தேடி வருவாராயின், நம்மில் ஒவ்வொருவரும் இயன்ற அனைத்தையும் விரைவாய்ச் செய்ய முனைவோம் அல்லவா? ஆனால், பொதுவாக அவர் மிகவும் எளிய வேடம் புனைந்தவராக நமது வாசலண்டை வருகிறார். இதுவே நம்மைச் சோதனைக்குள்ளாக்குகிறது. அவருடைய சகோதரரில் சிறியவரை நாம் எவ்விதம் நடத்துகிறோமோ, அதுவே அவரை நடத்துகிற விதமாகக் காணப்படும்.

திருமறையிலிருந்து செய்தியை அளிக்கும் எண்ணத்துடன், வயது முதிர்ந்த தேவபக்தி நிறைந்த பிரசங்கி ஒருவர் கிறிஸ்தவ சபை ஒன்றிற்குச் சென்றார். தனிப்பட்ட வகையில் அவர் கவர்ச்சிமிக்கவராகக் காணப்படவில்லை. மேடைகளில் திறமையை வெளிப்படுத்தும் ஆற்றலையும் அவர் கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர் தேவனுடைய ஊழியராகவும், கர்த்தரிடமிருந்து செய்தி ஒன்றைப் பெற்றவராகவும் இருந்தார். கூட்டங்களுக்குத் தங்கி இருக்கும்படியாக அவரை அந்தச் சபையின் கண்காணிகள் கேட்டுக்கொள்ளவில்லை. கறுப்பர்கள் வாழும் பகுதிகள் உள்ள சபைக்குச் செல்லும்படியாக அவருக்கு ஆலோசனை கூறினர். அம்முதியவரும் அவ்வாறே செய்தார். அங்குள்ள சகோதரார்கள் அவரை அன்போடு வரவேற்றனர். வாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். ஆடம்பரமான சபை விசுவாசிகளிடம்”அவர் வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லை, ஆனால் அவரை நான் விரும்பினேன். அவரை வேண்டாமென்று நீங்கள் நிராகரித்ததின் மூலம் என்னை நிராகரித்தீர்கள்” என்று கர்த்தர் கூறுவதுபோல் அந்நிகழ்ச்சி அமைந்தது.

“எவ்வாறு மிகச் சிறந்த விருந்தினர் வருபை புரிந்தார்” என்று ஒரு கவிதையை எட்வின் மார்க்காம் என்பார் இயற்றியுள்ளார். கர்த்தர் ஒருநாள் வருவார் என்று எண்ணியெண்ணி நுட்பமாய் ஆயத்தம் செய்த செருப்பு தைக்கும் தொழிலாளியைக் குறித்த கதை. அவர் எதிர்பார்த்த வண்ணம் கர்த்தர் வரவில்லை. ஆனால் அவருடைய வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரர் வந்தார். அந்தத் தொழிலாளி தான் செய்வித்த மிதியடியை அவருக்கு அணிவித்தார். ஒரு வயது முதிர்ந்த பெண்மணி வந்தபோது, அவருடைய சுமையைத் தூக்கி உதவிபுரிந்தார். செருப்பு தைக்கும் தொழிலாளி மேலும் அப்பெண்ணிற்கு உணவளித்தார். அடுத்து வழி தவறிய சிறுபெண் அங்கே வந்தாள். செருப்புதைப்பவர் அச்சிறு பெண்ணின் தாயைத் தேடி, குழந்தையை அவளிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

அப்பொழுது அந்தச் செருப்பு தைக்கும் கைவினைஞர் மெல்லிய குரலில் ஒன்றைக் கேட்டார்: “எனது வாக்குறுதியை நிறைவேற்றினேன், ஆகவே உனது இருதயத்தை உயர்த்திக் களிகூரு. நட்புமிகு உனது வாசலண்டை மூன்றுமுறை வந்தேன். எனது நிழல் உனது கூடாரத்தை மூன்றுமுறை தொட்டது. காலில் சிராய்ப்புடன் பிச்சைக்காரனாக வந்தேன். நீ அளித்த உணவை உண்ட பெண்ணும் நானே. வீட்டை இழந்து தவித்த சிறு குழந்தையாக வந்தவளும் நானே”.