ஜெப ஊழியம்

யூன் 30

மோசே தன் கையை ஏறெடுத்;திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
(யாத் 17 :11)

அமலேக்கியரோடு இஸ்ரவேலர் போர் புரிந்துகொண்டிருந்தனர். மோசே மலையின் உச்சியில் நின்றுகொண்டு போர் களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். மோசேயின் கையின் நிலையே வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயித்துக்கொண்டிருந்தது. அவனுடைய கை தாழ்ந்தபோது, இஸ்ரவேலர் பின்வாங்கினர்.

கையை உயர்த்தினவனாக இருந்தபோது மோசே, நம்முடைய கர்த்தர் இயேசுகிறிஸ்து பரிந்துபேசுவதைச் சித்தரிக்கிறார். “அவருடைய பரிவினாலும், அன்பினாலும் அவர் தமது கரங்களை உயர்த்துகிறார்.” அவருடைய பரிந்துபேசுதலினால் நாம் கடைசிவரை இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் அதற்குப்பிறகு அந்த காட்சியில் மோசே இயேசு கிறிஸ்துவிற்கு நிழலாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் நம்முடைய கர்த்தரின் கரம் ஒருக்காலும் தாழ்வதில்லை. களைப்படையச் செய்யும் எந்த வேலையும் அவரை வெளியிலிருந்து உதவியை நாடச் செய்வதில்லை. எப்போதும் நமக்காகப் பரிந்துபேச என்றென்றும் வாழ்கிறவராக இருக்கிறார்.

நம்மை ஜெபவீரர்களாச் சித்தரித்துக் காட்டும் நிகழ்ச்சியாகவும் இதனைக் கருதலாம். இப்பூவியில் ஆவிக்குரிய நிலையில் போர் புரியும் ஊழியர்களுக்காக உண்மையோடு நாம் மன்றாடுவதை உயர்த்திய கை சித்தரிக்கிறது. ஜெப ஊழியத்தை நாம் புறக்கணிக்கிறபோது எதிரி மோலோங்கி நிற்கிறான்.

ஊழிய வேட்டைக்குச் சென்ற மிஷனரி ஒருவரும் அவருடைய குழுவினரும் கொள்ளையர் நிறைந்த ஒரு பகுதியில் இரவைக் கழிக்கவேண்டியதாய் இருந்தது. தங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்தவர்களாக, அவர்கள் படுக்கச் சென்றனர். பலமாதங்கள் கழிந்தன. ஒரு கொள்ளைக்காரனை மிஷன் மருத்துவ மனைக்குச் சிலர் கொண்டுவந்தனர். அங்கிருந்த ஊழியரைக் கண்டவுன் அக்கொள்ளைக்காரனுக்கு அவர் யார் என்று தெரிந்துவிட்டர். “நீங்கள் ஓர் இரவில் வயல் வெளியில் தங்கியிருந்தபோது உங்களைக் கொள்ளையிட நினைத்தோம். ஆனால் உங்களுடன் இருந்த 27 படைவீரர்களைக் கண்டு பயந்துவிட்டோம்” என்று அவன் கூறினான். இந்த நிகழ்சியைக் குறித்து தனது சொந்தசபைக்கு எழுதியபோது, ” அவன்றைக்கு சபையின் ஜெபக்கூட்டத்தில் 27 பேர் கலந்துகொண்டதாக” பதில் வந்தது.

இன்னொரு உண்மையையும் இந்நிகழ்ச்சியில் நாம் காண்கிறோம். தலைமுறை தலைமுறைதோறும் அமலேக்கியயோரு யுத்தம் நடக்குமென்று கர்த்தர் சூளுரைத்துள்ளார். அமலேக்கு மாம்சத்திற்கு அடையாளமாக இருக்கிறான். மாம்சத்திற்கு எதிராக கிறிஸ்தவன் இடைவிடாது போர் புரியவேண்டியவனாக இருக்கிறான். ஜெபம் அவனுடைய முக்கியமான போர் கருவியாக இருக்கிறது. அவனுடைய ஜெபவாழ்க்கையின் உண்மையுள்ள தன்மை வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயிக்கிறது.

விசுவாசத்தினால் விடுதலை

யூன் 29

 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோ.5:24)


பலருடைய வாழ்க்கைப் புரட்சிகரமானதாக்கி, மாற்றத்தை வருவிக்கும் பேருண்மை இவ்வசனத்தில் பொதிந்திருக்கிறது.

“மெய்யாகவே” என்ற சொல் இருமுறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அதனின்று ஒரு சிறப்பான பொருளை எதிர்பார்க்க நாம் தூண்டப்படுகிறோம்.

“உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. 19ம் வசனத்திலிருந்து அவர் பேசுகிறார். அவர் பேசுவது அனைத்தும் மெய்யாகவே இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். அது முற்றிலும் உண்மை, எந்த வேறுபாடுமில்லை. அவரை ஏமாற்றவும் முடியாது. அவர் சொல்வதைக் காட்டிலும் உறுதிபடைத்ததும், நாம் சார்ந்துகொள்ளக்கூடியதும் வேறெதுவும் இல்லை.

யாருடன் அவர் பேசுகிறார்? “உங்களுக்குச் சொல்லுகிறேன்” நித்திய தேவ குமாரன் உங்களுடனும் என்னுடனும் பேசுகிறார். இப்படிப்பட்ட மேதகைமை வாய்ந்த ஒருவர் நம்மோடு இதுவரை பேசியதில்லை, இனிமேல் பேசப்போவதுமில்லை. ஆகையால் அவர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கவேண்டியவர்களாய் இருக்கிறோம்!
“என் வசனத்தைக் கேட்கிறவன்” இது ” எவனொருவன்” என்னும் பொருளோடு கேட்கிற எவனையும் குறிக்கிறது. அவருடைய வசனத்தை வெறுமனே காதினால் கேட்கிறதை மட்டும் குறிக்காமல், கேட்டு விசுவாசிக்கிறவனைக், கேட்டு ஏற்றுக்கொள்கிறவனைக், கேட்டு அதற்கு கீழ்ப்படிகிறவனையே இது குறிக்கிறது.

“என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்”. பிதாவாகிய தேவனே அவரை அனுப்பினவர் என்பதை நாம் அறிவோம். “அவர் ஏன் அவரை அனுப்பவேண்டும்?” என்பது சிறப்பான கேள்வியாக இருக்கிறது. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென தமது இரத்தத்தைச் சிந்துவதற்காக, நான் பெறவேண்டிய தண்டனையை அவர் செலுத்தித் தீர்ப்பதற்காக, என்னுடைய பதிலாளாக அவர் மரணமடையவும் பிதா தமது குமாரனை அனுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும்.

இப்பொழுது மூன்றத்தனையான வாக்குறுதி வருகிறது. முதலாவதாக “நித்திய ஜீவன் உண்டு”. ஒருவன் விசுவாசித்தவுடனேயே அவன் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்கிறான். இவ்வளவு எளிமையானதாக இது இருக்கிறது.

இரண்டாவதாக, “அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படமாட்டான்.” கிறிஸ்து ஏற்கனவே கடனைச் செலுத்தித் தீர்த்திவிட்டதால், என்னுடைய பாவத்தின் நிமித்தம் நான் நரகத்திற்கு அனுப்பப்படமாட்டேன். கடனை இருமுறை செலுத்தவேண்டுமென்று தேவன் கேட்கமாட்டார். மூன்றாவதாக, “அவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்”.  ஆவிக்குரிய வகையில் இறந்தவன் என்னும் நிலையிலிருந்து புதிய பிறப்படைந்து, முடிவில்லா வாழ்வைப் பெற்று தேவனோடு உறவு கொள்கிறான். உண்மையாகவே அவருடைய வசனத்தைக் கேட்டு அவரை அனுப்பிய பிதாவை விசுவாசிப்பீர்கள் எனில், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உறுதிமொழி அளிக்கிறார். இதனை “நற்செய்தி” என்று அழைப்பதில் வியப்பில்லை.

விசுவாசிகளின் மரணம்

யூன் 23

இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள். (1.தெச.4:14)

நமக்கு அன்பானவர்களில் ஒருவர் கர்த்தருக்குள் மரணம் அடையும்போது நாம் எவ்விதமாக நடந்துகொள்கிறோம்? கிறிஸ்தவர்கள் சிலர் உணர்ச்சி வயப்பட்டு தொய்ந்துபோகின்றனர். மற்றவர்கள் , வருத்தமடைந்த போதிலும், அச்சூழ்நிலையைத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். நாம் எவ்வளவாக தேவனுக்குள் வேர்கொண்டிருக்கிறோம் என்பதையும், எவ்வளவாக விசுவாசத்தின் உண்மைகளை நிறைவாக நமக்குரியதாக்கிக்கொள்கிறோம் என்பதையும் அது சார்ந்திருக்கிறது.

முதலாவதாக, இரட்சகருடைய நிலையில் நின்று, மரணத்தை நாம் காணவேண்டும். அவருடைய ஜெபத்திற்கு விடையாக இது இருக்கிறது. “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” (யோ.17:24). தமக்கு இன்பமானவர்கள் அவரோடுகூட இருக்கும்படியாகச் செல்கிறபோது, தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாகிறார் (ஏசா.53:11). “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15).

இறந்துபோனவருக்கு, அது எத்தகைய மேன்மையுடையது என்பதை எண்ணி மகிழவேண்டும். மன்னரின் அழகினைக் கண்டு மகிழ அவர் வழி நடத்திச் செல்லப்படுகிறார். பாவம், நோய், வேதனை, வருத்தம் ஆகியவற்றினின்று அவர் என்றென்றைக்குமாய் விடுதலை பெறுகிறார். தீங்குவராததற்கு முன்னே அவர் எடுத்துக் கொள்ளப்படுகிறார் (ஏசா.57:1). பரிசுத்தவான் தனது வீட்டிற்குச் செல்வதற்கு ஒப்பானது வேறில்லை. ஒரு களிமண் கட்டி என்னும் நிலையிலிருந்தும், உலகப் பொருட்களின் கட்டுகளிலிருந்தும் நீங்கி, எண்ணிலடங்கா தேவதூதர்களால் வரவேற்கப்படுவது எத்தனை மேன்மை. இதனை மேலும் விளக்குகிறார் பிஷப் ரைல், “விசுவாசிகள் இறக்கும் அதே தருணத்தில், அவர்கள் விண்ணுலுகைச் சென்றடைகின்றனர். போர் முடிவடைந்துவிட்டது. இருள் நிறைந்த பள்ளத்தாக்கையும், ஆற்றையும் கடந்துவிட்டனர். நாமும் அதன் வழியாக ஒருநாள் கடந்து செல்லவேண்டும். மனிதர்களுக்கென்று பாவம் கலந்து கொடுத்த கசப்புமிக்க பானத்தைப் பருகிவிட்டனர். அவர்கள் சேர்ந்த இடத்தில் துக்கமில்லை, பெருமூச்சும் இனியில்லை. அவர்கள் அங்கிருந்து மீண்டும் வரவேண்டும் என்று நாம் நிச்சயமாய் விரும்பமாட்டோம்! அவர்களுக்காக அல்ல, நமக்காகவே நாம் அழ வேண்டியவர்களாயிருக்கிறோம்.

நமக்கு இன்பமானவர்களது மரணம் துக்கத்தையே கொண்டுவருகிறது. ஆயின் நம்பிக்கையற்றவர்களைப்போன்று நாம் துக்கப்படுகிறதில்லை (1.தெச.4:13). மேலான இடத்தில் அதாவது, கிறிஸ்துவுடன் அவர் இப்பொழுது இருக்கிறார் என்பதை அறிவோம். இந்தப் பிரிவு குறுகிய காலத்திற்குரியது என்பதையும் அறிவோம். இம்மானுவேலின் நாட்டில் மலைப்பகுதியாகிய மேலான சூழ்நிலையில் மீண்டும் அவர்களோடு இணைக்கப்படுவோம் என்று அறிவோம். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருக்கவும், உயிரோடிருக்கும் மற்றவர்கள் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மேகங்களின் வழியாக அவர்களோடு கர்த்தரை எதிர்கொண்டு போகவும், பின்னர் எப்பொழுதும் கர்த்தருடன் இருக்கப்போகிறதுமான கர்த்தருடைய வருகையை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (1.தெச.4:16-17). இந்த நம்பிக்கை பெருத்த மாற்றத்தை உண்டாக்குகிறது.

தேவனுடைய ஆறுதல் நமக்குக் கொஞ்சமானவை அல்ல (யோபு 15:11). நமது துக்கம் இன்பத்தோடு கலந்திருக்கிறது. நாம் அடையும் இழப்பு நித்திய நற்பேற்றினால் மிகுதியாக ஈடுசெய்யப்படுகிறது.

மாசில்லா தூய பக்தி

யூன் 18

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்.1:27)

மேற்கூறியவற்றை ஒரு விசுவாசி செய்வானானால், செய்யவேண்டிய அனைத்தையும் அவன் செய்துவிட்டான் என்ற பொருளுடன் யாக்கோபு இதை எழுதவில்லை. திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சந்தித்து, தன்னைக் கறைபடாதபடிக்குக் காத்துக்கொள்வது மாசில்லாத பக்திக்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன என்றே கூறுகிறார்.

வேத விளக்கப் பிரசங்கங்கள், நற்பணி ஊழியம், தனியாள் ஆத்தம ஆதாயம் ஆகிய இவற்றையே பக்தியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவர் சொல்லியிருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோம். அவற்றை அவர் கூறாமல், தேவையுள்ளவர்களைச் சந்திப்பதையே முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார்.

தான் “வீடுகள் தோறும்” சென்றதை, எபேசு நகர மூப்பர்களிடம், பவுல் நினைவுறுத்தினார் (அப்.20:20). வீடுகள் சந்திப்பதை மிகவும் இன்றியமையாத ஊழியமாக டார்பி கருதினார். “மணிக்கூண்டில் கடிகாரம் ஓசை எழுப்புகிறது. வழிப்போக்கர் அவ்வொலியைக் கேட்கின்றனர். ஆனால், கடிகாரத்தின் உள்ளே தொடர்ந்து வேலை நடக்கிறது. முட்கள் நகர்ந்து மணிஓசை எழுகிறது. வீடுகள் சந்திப்பது, அதிகமான நேரம் செலவிட வேண்டிய ஊழியம் எனக் கருதுகிறேன். மற்ற ஊழியங்கள் உங்களிடம் வரும்போது அவற்றைச் செய்யுங்கள். பொது இடங்களில் சாட்சிபகர நான் அஞ்சுகிறேன். வேறு மறைவான ஊழியம் இல்லையெனில் அப்பொழுது அதைச் செய்வேன்”.

தனியாக வசித்த விதவை, தனது வயது முதிர்ச்சியின் நிமித்தமாக அருகில் வசிப்பவர்களிடமும், நண்பர்களிடமும் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது கையில் ஒரு நாட்குறிப்பு ஏட்டை வைத்திருப்பார். ஒவ்வொருநாள் நிகழ்ச்சியையும் அதில் எழுதிவைப்பார். குறிப்பாக வெளியுலகத் தொடர்புகளைப் பற்றி அதில் எழுதுவார். சிலநாட்கள் அந்த வீட்டின் உள்ளே எந்த நடவடிக்கையையும் காணாத அயலகத்தார் காவல்துறையினரை அழைத்தனர். உள்ளே சென்ற காவல்துறையினர், சில நாட்களுக்கு முன்னரே இறந்து கிடந்த மூதாட்டியின் உடலைக் கண்டனர். அம்மூதாட்டி இறப்பதற்கு முன்னதாக மூன்றுநாட்கள் தனது குறிப்பேட்டில், “ஒருவரும் வரவில்லை” , “ஒருவரும் வரவில்லை”, ஒருவரும் வரவில்லை” என்ற சொற்களையே எழுதியிருந்தார்.

தங்களுடைய சொந்த அலுவலில் மூழ்கிப்போய் இருப்பவர்கள், தனிமையில் வாடுவோரையும், தேவையுள்ள நிலையில் வசிப்பவர்களையும், வயது முதிர்ச்சியினால் பலவீனமடைந்த நிலையில் உள்ளவர்களையும் மறப்பது எளிது. வெளிப்படையாகச் செய்யப்படும் ஊழியங்களிலும், கவர்ச்சிமிக்க பணிகளிலும் ஈடுபட விரும்புகிறோம். அவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆயின் நம்முடைய பக்தி தூய்மையாகவும, மாசில்லாததாகவும் இருக்கவேண்டுமாயின், திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும், வயது முதிர்ந்தோரையும், வீட்டில் தனிமையில் அடைபட்டுக்கிடப்போரையும் அசட்சை செய்யக்கூடாது. தேவையுள்ளவரைக் குறித்து அக்கறை கொண்டவராக தேவன் இருக்கிறார். அத்தகையோருக்கு உதவிசெய்ய முன்வருவோருக்கு அவர் சிறப்பான பரிசுப்பொருட்களை வைத்திருக்கிறார்.

இரக்கத்தின் தகப்பன்

யூன் 13

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபேசி.2:4)

குற்றம் புரிந்தோர், தோல்வியுற்றோர், துன்புற்றோர் மற்றும் தேவையுள்ளோர் அனைவரிடத்திலும் தேவன் காட்டுகிற பரிவு, மிகுந்த கிருபை, ஆகியவையே தேவனுடைய இரக்கமாகும்.

தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என்று வேதம் வலியுறுத்திக் கூறுகிறது. (எபேசி.2:4). மிகுந்த கிருபையுள்ளவர் (சங்.86:5). அவர் மிகுந்த இரக்கமுடையவர் (1.பேது.1:4). அது வானபரியந்தம் உயர்ந்தது (சங்.57:10). “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபை அவ்வளவு பெரிதாயிருக்கிறது (சங்.103:11). “இரக்கங்களின் பிதா” என்று தேவன் அழைக்கப்படுகிறார் (2.கொரி.1:3). அவர் இரக்கம் பாராட்டுவதில் பாரபட்சம் காட்டுவதில்லை, “அவர் தீயோர் மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்” (மத்.5:45). நாம் செய்த நீதியின் நிமித்தம் அவர் நம்மை இரடஇசியாமல் (தீத்து 3:5) அவருடைய ஒப்பற்ற இரக்கத்தினாலே நம்மை இரட்சித்தார் (யாத்.33:19, ரோ.9:15). அவருக்குப் பயப்படுபவர்கள் மேல் அவரது இரக்கம் என்றுமிருக்கும் (சங்.136:1, லூக்.1:50). ஆனால் மனந்திரும்பாதவரிடம் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமே அவரது இரக்கம் காண்பிக்கப்படும்.

கிருபைக்கும் இரக்கத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நான் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியற்ற நற்பேறுகளை என்னிடத்தில் பொழிவது தேவகிருபையாகும். நான் அடையவேண்டிய தண்டனையை அவர் எனக்குத் தராதிருப்பது அவரது இரக்கமாகும்.

தேவனுடைய உபதேசம் ஒவ்வொன்றினுடனும் ஒவ்வொரு கடமை இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கம் கோருகின்றது (ரோ.12:1). இதுவே நாம் செய்யத்தக்க பகுத்தறிவுள்ள, பக்தியுள்ள, நேர்மையான, மதிநுட்பமுள்ள செயலாகும்.

மேலும், ஒருவரிலொருவர் இரக்கம் பாராட்ட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இரக்கம் பாராட்டுகிறவர்களுக்கொரு சிறப்பான வாக்குறுதி தரப்பட்டுள்ளது. “அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்.5:7). பலியையல்ல, இரக்கத்தையே கர்த்தர் விரும்புகிறார் (மத்.9:13). தேவபக்தியற்றவராய் இருப்போர் செலுத்துகிற பிரதானமான பலிகளை தேவன் ஏற்றுக்கொள்வதில்லை.

தனது அயலானுக்கு இரக்கம் பாராட்டினவர்களில் ஒருவன் நல்ல சமாரியன் ஆவான். பசியுற்றோருக்கு உணவளித்தல், ஏழைகட்கு ஆடை வழங்குதல், பிணியுற்றோருக்கு உதவிபுரிதல், திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சந்தித்தல், அழுகிறவர்களுடன் சேர்ந்து அழுதல் யாவும் இரக்கம் காண்பித்தலாகும்.

நமக்கு எதிராகச் செயல்புரிந்தோருக்கு விரோதமாகப் பழிவாங்கும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் அவ்வாறு செய்யாதிருத்தலே, நமது இரக்கமுள்ள தன்மையாகும். உண்மையற்றவரிடம் தயவுபாராட்டுதலும் இரக்கமே.

நாம் யாராக இருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, நாம் இரக்கம் பெறும்படியும் (எபி.4:16), பிறர் இரக்கம் அடையவும் (கலா.6:16, 1.தீமோ.1:2) நாம் ஜெபிப்போம். கடைசியாக, அவர் புகழ்பாட தேவகிருiபாயனது நமது இதய நாளங்களை மீட்டிவிடட்டும்.

அன்பின் உறைவிடமாகிய தேவன்

ஜுன் 11

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது (1.யோ.4:10)

வரையற்ற நேசத்தை மற்றவர்களிடம் செலுத்தும்படி தேவனைத் தூண்டிவிடுவது அவருடைய குணங்களில் ஒன்றாகிய அன்பேயாகும். பிரியமானவர்கட்கு நல்லது, நிறைவானதுமான ஈவுகளை வழங்குவதால் அவருடைய அன்பு வெளிப்படுகிறது.

அவருடைய அன்பைக் குறித்துப் பேசும் எண்ணற்ற வசனங்களில் சிலவற்றைமட்டுமே நம்மால் எடுத்துரைக்க முடியும் ! “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். ஆதலால் காருணயத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்” (எரேமி.31:3). “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோ.5:8). “தேவனாலே இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் தம்முடைய மிகுந்த அன்பினாலே நம்மில் அன்புகூர்ந்தார்” (எபேசி.2:4). நாம் அனைவரும் அறிந்த வசனம், ” தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோ.3:16).

“தேவன் அன்பாவே இருக்கிறார்” என்று யோவான் கூறும் வேளையில், தேவன் என்பதற்கு என்ன பொருள் என்று இங்கே வரையறுத்துக் கூறவில்லை (1.யோ.4:8). தெய்வீக குணத்தில் முக்கியமான கூறு அன்பு என்பதை அங்கே வலியுறுத்துகிறார். நாம் அன்பை ஆராதிப்பதில்லை. அன்பு நிறைந்த தேவனையே ஆராதிக்கிறோம்.

அவருடைய அன்பிற்கும் தொடக்கமில்லை, முடிவும் இருக்கமுடியாது. அதனுடைய நீளம், அகலம், உயரம், ஆழம் அளவிடமுடியாதவை. முற்றிலும் தூய்மையுடையதாக அது இருக்கிறது. சுயநலம் என்னும் கறைiயை அதில் காணமுடியாது. கணக்கிடாமல் செலுத்தப்படுகிற, தியாக மனப்பான்மை உடையதாக அது இருக்கிறது. பிறர் நலத்தை நோக்கமாகக் கொண்டிருக்கும் அன்பு பிரதிபலனை எதிர்பார்க்கிறதில்லை. இனிமையானவர்களிடத்திலும், கவர்ச்சியற்றவர்களிடத்திலும் அது செல்லும். எதிரிகளிடத்திலும், நண்பர்களிடத்திலும் அது காட்டப்படும். யாரிடம் செலுத்தப்படுகிறதோ அவருடைய தகுதியின் அடிப்படையில் அல்லாமல், கொடுக்கிறவரின் நல்ல இயல்பையே அடிப்படையாக அது கொண்டிருக்கிறது.

இத்தெய்வீக உண்மையில் நடைமுறை விளைவுகள் தெளிவாய் உள்ளன. “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகிய, கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” என்று பவுல் கூறியுள்ளார் (எபேசி.5:1-2). கர்த்தரிடமாய் நமது அன்பு உயரச் செல்ல வேண்டும், நமது சகோதரர்களிடத்திலும் அது பாய்ந்து செல்ல வேண்டும், இரட்சிக்கப்படாத உலகிற்கு அது பரவவேண்டும்.

அவருடைய அன்பைக் குறித்து ஆழ்ந்த சிந்தனை அவரை ஆராதிக்கும்படி நமக்கு உள்ளுணர்வூட்டும். அவருடைய காலடியில் அமர்ந்தவராக, “இறைவனாகிய நீர் எங்ஙனம் என்னிடத்தில் அன்புகூர்ந்தீர். என்னுடைய அறிவினால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அனால், அது என் இருதயத்திற்கு ஒளியாய்த் திகழ்கிறது” என மீண்டும் மீண்டும் கூறுவோம்!

என்றென்றும் மாறாத தேவன்

ஜுன் 10

நான் கர்த்தர், நான் மாறாதவர் (மல்.3:6)

தேவனுடைய மாறாத தன்மை அவருடைய தனிப்பெரும் பண்பாக இருக்கிறது. ஆகவே அவர் என்றும் மாறாதவர் என்றழைக்கப்படுகிறார். அவருடைய அடிப்படைக்கூறுகளில் மாற்றம் ஏற்படுவதில்லை. அவருக்கு மட்டுமே உரிய பண்புகளில் மாற்றம் விளைவதில்லை. எந்தெந்த விதிகளின் அடிப்படையில் செயல்படுகிறாரோ அதிலிந்து அவர் மாறுவதில்லை.

வானங்களும் பூமியும், முடிவில் மாறிப்போகக்கூடியவை, அத்தன்மையை தேவனுடைய மாறாத தன்மையிலிருந்து சங்கீதப் பாடலாசிரியன் வேறுபடுத்திக் காட்டுகிறான்: “அவை மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர்” (சங்.102:2-627). “சோதிகளின் பிதாவினிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” என்று யாக்கோபு வவரிக்கிறார் (யாக்.1:17).

“பொய்சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல (எண்.23:19). “இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மஸ்தாபப்படுகிறதும் இல்லை” (1.சாமு.15:29). இவ்வசனங்கள் அவருடைய மனம்மாறாத தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன.

அவ்வாறாயின் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்று சொல்லுகிற வசனங்களைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்?” (ஆதி.6:6). “இஸ்ரவேலின்மேல் சவுலை இராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” (1.சாமு.15:35). யாத்திராகமம் 32:14, யோனா 3:10 ஆகிய வசனங்களைக் காண்க.

இங்கு கருத்து வேறுபாடு ஏதுமில்லை. இந்த இரண்டு விதிகளின் அடிப்படையில் தேவன் எப்பொழுதும் செயல்புரிகிறார். கீழ்ப்படிதலுக்கு அவர் எப்போதும் பலனளிக்கிறார். கீழ்ப்படியாமையை அவர் தண்டிக்கிறார். கீழ்ப்படிதலிலிருந்து கீழ்ப்படியாமைக்கு மனிதன் இடம்பெயருகிறபோது, தேவன் தமது சொந்த பண்பிற்கு உண்மையுள்ளவராக இருக்கும்படி, (மாறாதவராயிருக்கும்படி) ஒரு விதியிலிருந்து வேறொரு விதிக்கு அவரும் இடம்பெயர்கிறார். இது நமக்கு மனஸ்தாபமாகத் தோன்றுகிறது. ஆகவே, மனிதத் தோற்றத்திற்கேற்ற மொழியில் இதை வேதம் விளக்குகிறது. ஆனால் அவர் தமக்காக வருந்துகிறார் என்றோ, மாறக்கூடிய தன்மையுடையவர்கள் என்றோ இது பொருளாகாது.

தேவன் எப்பொழுதும் மாறாதவராயிருக்கிறார். அது அவருடைய பெயர்களில் ஒன்றாகும். “நீர் மாறாதவர், பூமியின் இராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்” (ஏசா.37:16). டார்பி மொழிப்பெயர்ப்பில் 2. சாமுவேல் 7:28, ஏசாயா 41:4 ஆகிய வசனங்களிலும் இச்சொல்லைக் காணலாம்.

தேவனுடைய மாறாத தன்மை, எக்காலத்திலும் அவருடைய பரிசுத்தவான்களுக்கு ஆறுதலாயிருக்கிறது. அவர்களுடைய பாடலின் கருப்பொருளாக இது விளங்குகிறது. “என்னைச் சூழ நோக்குங்கால், மாற்றமும் அழிவுமே இருக்கின்றன. ஆனால் நீரோ மாற்றமில்லாதவர். நீர் என்னில் நிலைத்திருக்கிறீர்” என கென்றி லைட் என்பார் பாடியுள்ள பாடல் நமக்குப் பேருவகையைத் தருகிறது.

இதுவே நாம் பின்பற்ற வேண்டிய பண்பாகும். நாம் நிலையானவர்களாக, உறுதிபடைத்தவர்களாக, திடப்பற்றுள்ளோராக இருக்கவேண்டும். நாம் ஊசலாடுகிறவர்களாக, நிச்சயமற்றவர்களாக, எளிதில் மாறக்கூடியவர்களாக இருப்போமாயின் நமது திருத்தந்தையை இவ்வுலகிற்குத் தவறாக எடுத்துக்காட்டுகிறவர்களாயிருப்போம்.

“ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள்படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகிறவர்களாயும் இருப்பீர்களாக”.

தூய்மையில் நிகரற்ற தேவன்

ஜுன் 9

இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் (வெளி 4:8)

எண்ணங்கள், செயல்கள், நோக்கங்கள் மற்றும் எல்லா நிலைகளிலும், ஆவிக்குரியதும் நன்னெறிக்குரியதுமான அனைத்துக் கோட்பாடுகளின்படி தேவன் நிறைவானவராக இருக்கிறார் என்பதே தேவபரிசுத்தம் என்னும் சொற்றொடரின் பொருளாக இருக்கிறது. அழுக்காறு, பாவம் ஆகியவற்றினின்றும் அவர் முற்றிலும் விலகியவராயிருக்கிறார். தூய்மையைத் தவிர வேறோன்றும் அவரிடத்தில் இல்லை.

தேவனுடைய பரிசுத்தத்தைப் பறைசாற்றும் திருமறை வசனங்கள் எண்ணிலடங்கா. அவற்றில் சில எடுத்துக்காட்டுகளை இங்கே காணலாம். “உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்” (லேவி.19:2). “கர்த்தரைப்போல் பரிசுத்தமுள்ளவர் இல்லை” (1.சாமு.2:2). “கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தமானவர் அல்லவா? … தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்கமாட்டீரே” (ஆபகூ.1:12-13). “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (யாக்.1:13) “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1.யோ.1:5). “தேவரீர் ஒருவரே பரிசுத்தர்” (வெளி 15:4). “நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல” (யோபு 25:5).

பழைய ஏற்பாட்டில் ஆசாரியத்துவமும், பலிகளின் முறையும் தேவனுடைய பரிசுத்தத்தை நமக்குக் கற்பிக்கின்றன. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பெரும்பிளவை பாவமானது உண்டுபண்ணியிருக்கிறது என்றும், அந்தப் பிளவு சரிசெய்யப்பட்டு, பரிசுத்த தேவனிடத்தில் மனிதன் அணுகுவதற்குப் பலி மிருகத்தின் இரத்தம் சிந்தப்படவேண்டும் என்றும் அங்கே கற்பிக்கப்பட்டிருக்கிறது.

தனிச்சிறப்புமிக்க வகையில் தேவனுடைய பரிசுத்தம் சிலுவையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமது குமாரன் மனிதர்களுடைய பாவத்தைச் சுமந்தவராகச் சிலுவையில் தொங்கிய காட்சியைக் கண்ணுற்ற தேவன், தமக்குப் பிரியமானவரை பயரங்கரமான இருள்சூழ்ந்த நிலையில் தம் தூய்மையின் நிமித்தம் மூன்று மணிநேரம் கைவிட்டார்.

இதில் நாம் கவனித்துக் கற்றுக்கொள்வதற்கு ஏதுவான படிப்பினைகள் மிகவும் தெளிவாக உள்ளன. நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1.தெச.4:3). “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1.பேது.1:15).

தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்த சிந்தனைகள், நம்மிடத்தில் ஆழமான பயபக்தியையும் மதிப்பையும் உண்டாக்கவேண்டும் “உன் கால்கள் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் “பரிசுத்த பூமி” என்று அவர் மோசேயினிடம் கூறினதை நினைவுகூர்வோம் (யாத்.3:5).

“நித்திய ஒளியே! ஆராய்ந்து நோக்கும் உமது கண்களுக்கு முன்னர் வருகிற ஆத்துமா அஞ்சிக்குறுகிப்போகாமல் களிப்புடன் உம்மைப் பார்த்து வாழ்வதற்கு எத்தனை பரிசுத்தமாய் இருக்கவேண்டும்” என்று வியந்து போற்றுகிறார் பின்னி என்பார்.

அத்தகைய தூய்மை, விசுவாசத்தின்மூலமாக நம்மீது விளங்கியிருக்கிறது என்னும் அறிவு, நமது இருதயங்களைக் களிகூர்ந்து துதிக்கச் செய்கிறது.

தேவ ஞானமும் அவரது திட்டங்களும்

ஜீன் 8

தாம் ஒருவரே ஞானமுள்ளவராயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்து மூலமாய் மகிமையுண்டாவதாக. (ரோ.16:27)

திருமறையில் முழுவதும் பின்னிக் கிடக்கிற ஒரு இழைபோன்று இவ்வுண்மை உள்ளது. சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்! “அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் இருக்கும், அவருக்குத் தான் ஆலோசனையும் புத்தியம் உண்டு. அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு. மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும் அவர் கையின் கீழிருக்கிறார்கள்” (யோபு 12:13,16). “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர். பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” (சங்.104:24). “கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்” (நீதி.3:19). “தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது” (தானி.2:20). “எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று” (1.கொரி.1:21). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1.கொரி.1:31).

தேவனுடைய நிறைவான நுண்ணறிவு, தவறுசெய்ய இயலாத உய்த்துணரும் மற்றும் பிழையற்ற தீர்மானங்கள் அகியவற்றையே “தேவஞானம்” என்னும் சொற்றொடர் குறிக்கிறது. மிகவும் சிறந்த விளைவுகளை, மிகவும் சிறந்த முறையில் செயலாற்றக்கூடிய அவருடைய திறனே தேவஞானம் என ஒருவர் வரையறுத்துக் கூறியுள்ளார். இது அறிவைக் காட்டிலும் மேம்பட்டது. அந்த அறிவைச் சரியான முறையிலே பயன்படுத்துவதையே இது குறிக்கிறது.

தேவனுடைய கிரியைகள் அனைத்தும் அவருடைய ஞானத்தை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மனிதனுடைய உடற்கூறுகள் வியத்தகுவகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, அவருடைய ஞானத்தைப் பறைசாற்றும் புகழுரையாகத் திகழ்கிறது.

இரட்சிப்பின் திட்டத்திலே தேவஞானம் காணப்படுகிறது. பாவத்திற்குரிய ஒறப்பு எங்ஙனம் செலுத்தித் தீர்க்கப்பட்டது என்பதை நற்செய்தி தெரிவிக்கிறது. தேவனுடைய நீதி நிலைநிறுத்தப்பட்ட விதம், அவருடைய இரக்கம் நீதியாக வழங்கப்பட்ட விதம், ஆதாம் பாவத்தில் வீழ்ந்துபோகாமல் இருந்திருப்பானாயின் மனிதனுடைய நிலை எப்படியிருக்குமோ அதைக்காட்டிலும் விசுவாசி சிறந்த ஸ்தானத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதம் ஆகிய யாவையும் நற்செய்தியில் திட்டமிடப்பட்டுள்ளன.

நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிற நிலையில், தேவஞானம் நம்முடைய ஆத்துமாவிற்கு ஆறுதல் அளிக்கத்தக்கபடி இனிமையாகப் பேசுகிறது. தவறே இழைக்காத வகையில் ஞானம் உடையவராக நமது தேவன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். வாழ்க்கையில் நடக்கும் சிலசெயல்கள் நாம் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருப்பினம், அவரால் தவறு செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்.

அவருடைய வழிநடத்துதலில் நாம் முழுநம்பிக்கை கொண்டிருக்கிறோம். தொடக்கமுதல் முடிவுவரை எல்லாவற்றையும் அவர் அறிவார். நமது அறிவிற்கு முற்றிலம் புலப்படாத வகையில் அவருடைய வழிகள் செம்மையானவை, ஆசீர்வாதத்தை நல்கக்கூடியவை.

அவருடைய வழிநடத்துதலில் நாம் முழுநம்பிக்கை கொண்டிருக்கிறோம். தொடக்கமுதல் முடிவுவரை எல்லாவற்றையும் அவர் அறிவார். நமது அறிவிற்கு முற்றிலும் புலப்படாத வகையில் அவருடைய வழிகள் செம்மையானவை, ஆசீர்வாதத்தை நல்கக்கூடியவை.

கடைசியாக, நாம் ஞானத்தில் வளரவேண்டும் என அவர் விரும்புகிறார். நாம் நன்மைக்கு ஞானிகளாயிருக்கவேண்டும் (ரோ.16:19). நாம் ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் (எபேசி.5:15-16). சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப் போல கபடற்றவர்களாகவும் நாம் நடந்து கொள்ள வேண்டும் (மத்.10:16).

எல்லாம் வல்ல தேவன்

யூன் 7

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (வெளி 19:6)

தமது தனிச்சிறப்புமிக்க இறை இயல்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் செய்ய வல்லவராக தேவன் இருக்கிறார் என்பதையே சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் பெயர் பொருளாகக் கொண்டிருக்கிறது. இதற்குத் திருமுறை தொடர்ந்து ஒரே ரீதியாகச் சான்று வழங்குகிறது! “நான் சர்வவல்லமையுள்ள தேவன்” (ஆதி.17:1). “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதி.18:14). “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது” (யோபு 42:2). “உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரேமி.32:17). “தேவனால் எல்லாம் கூடும்” (மத்.19:26). “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக்.1:37).

ஆனால், தமது குணநலன்களுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்த தேவனால் கூடாது. எடுத்துக்காட்டாக தேவனால் பொய்யுரைக்க முடியாது (எபி.6:18). தம்மைத்தாமே மறுத்துரைக்க அவரால் முடியாது. (2.தமோ.2:13). அவர் நிறைவான பரிசுத்தத்தை உடையவராக இருப்பதால், அவரால் பாவம் செய்ய முடியாது. முற்றிலும் சார்ந்துகொள்வதற்குப் பாத்திரராக இருப்பதால் அவர் கைவிடவேமாட்டார்.

தமது படைப்பிலும், இப்பிரபஞ்சத்தைத் தாங்குவதிலும், அவருடைய அருட்கொடையிலும், பாவிகளுக்கு இரட்சிப்பை வழங்குவதிலும், மனந்திரும்பாத பாவிகளை ஒறுப்பதிலும் தேவனுடைய சர்வ வல்லமை விளங்குகிறது. இஸ்ரவேலர் எகிப்தினின்று மீட்கப்பட்டு கானான் நாட்டிற்குப் பயணம் செய்த நிகழ்ச்சி தேவனின் சர்வ வல்லமையை வெளிப்படுத்தும் மாபெரும் நிகழ்ச்சியாகும்.

தேவன் சர்வவல்லமையுள்ளவராக இருக்கின்ற காரணத்தினால், அவரோடு எவரும் போராடி வெற்றிகாண முடியாது. “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை (நீதி.21:30).

தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால், விசவாசி வெற்றிபெறுகிறவனாக இருக்கிறான். தேவனோடு இருப்பவன் மாபெரும் படையைச் சேர்ந்தவன். “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோ.8:31).

தேவன் சர்வல்லமையுள்ளவராக இருப்பதால், நிகழக் கூடாதவை என்று கருதப்படுகிறவை நிகழத்தக்கதாக நாம் ஜெபத்தில் ஈடுபடலாம். நிகழக்கூடாதவற்றைக் கண்டு நகைத்து, “இது நிறைவேறும்” என்று முழக்கமிடலாம்.

தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கின்ற காரணத்தினால் நாம் சொல்லிமுடியாத ஆறுதலைப் பெறுகிறோம். “அவருடைய வல்லமையில், பலனற்ற நான் சாய்ந்துகொள்ளும்வேளையில், எல்லாம் பளுவற்றுக் காணப்படும்.”