May

மே 8

மே 8

…. இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன் (மாற்.14:4).

1956ம் ஆண்டு செவ்விந்தியர்களால் ஐந்து மிஷனறிகள் கொல்லப்பட்டனர் எனக் கேள்விப்பட்டவுடனே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான். இழந்துபோனதைத் தேடிச் சென்ற இரட்சகருக்கென ஒப்புக்கொடுத்த இந்த வாலிபரின் வாழ்வு ஏன் வீணாகவேண்டும்? அதன்பின்புதான் யூதாஸ் காரியோத் கேட்ட கேள்வியும் இதுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

யூதாஸ் தந்திரமாகக் கணக்குப் போட்டுப் பார்த்து, இந்த தைலத்தை விற்று கிடைக்கும் பணத்தை ஏழைகட்குக் கொடுக்கலாம் என்று கூறினான். உடனே சற்றும் யோசித்துப் பாராமல் மற்ற சீடர்களும் அதற்கு ஒப்புதல் அளித்தனர். அவனுக்கு ஏழைகளைக் குறித்து உண்மையிலேயே அக்கறை இருந்ததா? யூதாசிடம் பொருளாசை நிறைந்திருந்ததால், அவனிடம் ஆவிக்குரிய பண்புகளாகிய அன்பு, பக்தி, தியாகம் போன்றவைகள் இல்லாதிருந்தது.

இரண்டு நாட்களுக்குப்பின்பு இயேசு கிறிஸ்து அடக்கம் பண்ணப்படுவதற்கான ஆயத்தம் என்பதை வெளிப்படுத்தக்கூடியதாக மரியாளிடம் அன்பு பரிசு அமைந்திருந்தது. அவள் ஒருத்திதான் இயேசு மரிக்கப்போகிறார் என்று நம்பியவளாக இருந்திருக்கவேண்டும். ஏற்றவேளையில் அவருக்குச் சுகந்த வாசனையைக் கொண்டு வந்தவள் ஒருத்திமட்டுமே. ஏனெனில் அடக்கம் பண்ணப்பட்ட பின்பு அவருக்குத் தைலம் பூசச்சென்ற பெண்கள் காலியான கல்லறையைத்தான் காண முடிந்தது.

ஈக்வேடரில் இருந்த ஐந்து மிஷனறிகளும் ஏன் மரித்தனர் என்பதற்குரிய காரணம் இன்னும் கொஞ்ச நாட்களில் வெளியாகும். இவர்கள்தான் அங்கு திருச்சபை கட்டப்படுவதற்கான வித்துக்கள் எனலாம்! அவர்கள் இறந்துவிட்டதினால் ஊழியமும் அவர்கள் வாழ்வும் வீணாயிற்று என்று எண்ணவேண்டாம். அங்கு மிகுந்த அறுவடை கிட்டும் என்பதுதான் நம் நம்பிக்கை.