June

யூன் 23

யூன் 23

… நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்….. என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை (யோவேல் 2:27).

மனந்திரும்புதல் என்பதற்கு உயிர்மீட்சியடைதல் அல்லது எழுப்புதலடைதல் என்றும் பொருள் கூறலாம். யோவேல் தீர்க்கதரிசி, நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் (2:13) எனக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட மனந்திரும்புதலினால் தான் ஒருவன், சர்வ வல்ல தேவன், நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகள்… பட்சித்த வருஷங்களின் விளைவைத் திருப்ப அளிப்பேன் என்று வாக்களித்ததின் உண்மையினை உணரலாம். நம் வாழ்வின் பெரும்பகுதி சுயசித்தத்தினாலும், பாவத்தினாலும் பாழாக்கப்பட்டுவிட்டது. இதனால் நாம் தேவனுடைய ஊழியத்தை விட்டுத் தூரமாய்ப் போய்விட்டோமா என்று நினைக்கத் தோன்றுகிறது. இது தவறு. நாம் உண்மையாகவே மனந்திரும்புவோமாகில் தேவன் நம்மை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்பதில் ஐயமில்லை.

மனந்திரும்பும்போது நாம், நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்று கூறும் தேவபிரசன்னத்தை உணரமுடியும். நம்மோடுகூட அவர் இருப்பதை உணருவோமாகில் நம் கால்கள் இடறுவதில்லை. எம்மாவு ஊருக்குச் சென்ற சீடர்களைப்போன்று அவரோடு மெதுவாக நடக்காமல் அவர் உயிர்த்தெழுந்தார் எனக் கண்ட அவர்கள் அதைப்பற்றிச் சொல்ல வேகமாக சென்றதுபோல நாமும் செல்வோம். அடைப்பட்ட அறை வீட்டிற்குள் இருக்கும்படியான பயம் இராது. வல்லமையற்ற வேளையில் அவர் நம்மைப் பெந்தெகொஸ்தே நாளின் வல்லமையால் நிரப்புகிறார். தைரியமளிக்கிறார். அவர் வாக்களித்தபடி இங்கு இருக்கிறார். அவர் நமது ஆண்டவர்! அவரே நமது தேவனும் ஆண்டவருமாய் இருக்கிறார். நாம் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.