June

யூன் 16

யூன் 16

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் (சங்.138:6).

தாழ்மையுள்ளவர்களைப் பாராட்டியும், பெருமையும், சுயநிறைவுள்ளவர்களைத் தாக்கியும் வேதாகமத்தில பல வசனங்கள் கூறப்பட்டுள்ளன. நீதிமொழிகள் 16:5ல் மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்றும், வசனம் 18ல் அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னாவது மனமேட்டிமை என்று காண்கிறோம். சாத்தான் ஒரு காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபாக இருந்தான் (எசேக்.28:14). அவன் விழுந்துபோனதற்கு காரணம் கர்வம்தான்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் எனப் போதித்துள்ளார். நேபுகாத்நேச்சார் தன்னைத் தான் புகழ்ந்து, இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். உடனே அவன் பைத்தியம் பிடித்தவனாகி விலங்கினைப்போன்று ஏழாண்டுகள் வாழும்படி நேரிட்டது. (தானி.4:30-31). அவன் புத்தி ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான் (தானி.4:37).

நமது இரட்சகர் இயேசு நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்…. என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என அழைக்கிறார்.

தேவன் உடைபட்ட உள்ளத்தைக் கண்டு உருகுகிறவர். தாழ்மையுள்ளவர்களுக்கு அவர் கிருபை அளிக்கிறார். நொறுங்குண்ட இருதயத்தைக் கட்டி குணமாக்குகிறார்.