June

யூன் 5

யூன் 5

பயப்படாதிருங்கள். உங்களைச் சோதிப்பதற்காகவும்…. தேவன் எழுந்தருளினார் (யாத்.20:20).

தைரியத்துடன் நாம் தேவனை விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம் நம்பிக்கையின் கன்மலையான தேவன் திகிலை நமக்குள் உண்டாக்குகிறார்.

இவ்வுலகத்தில், நம் அயலாராலும் அல்லது நமது உள்ளத்திலிருந்து ஏற்படும் தொல்லைகளின்மூலமும் பயங்கள் தோன்றலாம். இஸ்ரவேலர் இடிமுழக்கங்களைக் கேட்டுப் பயந்தனர். பத்து கற்பனைகள் கொடுக்கப்பட்ட வேளையில் சீனாய் மலையடியில் இருந்திருந்தால் நாமும்கூட இப்படித்தான் பயந்திருப்போம். இயற்கையின் சீற்றங்கள் நமக்குப் பயத்தைக் கொடுக்கும்.

இதேபோன்றுதான் மக்களின் எதிர்ப்பு நமக்கு மிகுந்த பயத்தையும், வேதனையையும் கொடுக்கும். ஏசாயாவின் காலத்தில் இராஜாக்கள் கூடிய ஏகமாய் யூதாவுக்கு விரோதமாய் ஆலோசனை செய்தனர். அந்தத் தீர்க்கதரிசி ஜனங்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் (ஏசா.8.12). என தைரியம் கூறினார். நமக்குள்ளேயும் சந்தேகங்கள் தோன்றி பயத்தை உருவாக்கலாம். யோபு தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்த பெரிய குறைபாட்டைக் கூறுகிறார். நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது (3:25).

இயற்கைக்கும், மனுஷருக்கும், நம் உள்ளத்திற்கும் பயப்படாமல் இருப்பதுதான் மெய்யான விசுவாசம். ஏசாயா தம் ஜனங்களைப் பார்த்து, சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள். அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார் (ஏசா.8:13-14) எனக் கூறியுள்ளார். தேவனிடத்தில் செம்மையான இருதயத்துடன் வாழ்ந்து, அவரது வழியில் நேர்மையுடன் நடந்து செல்வோமாகில் நாம் பயப்படத்தேவையில்லை. தற்போதுள்ள இந்த இக்கட்டுக்கள் யாவும் நம் நம்பிக்கையையும், அவர் மீதுள்ள நமது அன்பையும் சோதிக்கவே வந்துள்ளன. அவர் நம்மைக் கைவிடாமல் அக்கறையுடன் காத்துக்கொள்வதை நம்மால் உணரமுடியும்.

தேவனுக்குப் பயப்படு. மற்ற எதற்கும் பயப்பட வேண்டியதில்லையே!