July

யூலை 23

யூலை 23

நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை. நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய் (நீதி.4:12).

தேவனுடைய சித்தம் இன்னதென்று அறியவேண்டியது சில வேளைகளில் மிகவும் அவசியமாயிருக்கிறது. நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டிய வேளைகள் உண்டு. விரைந்து ஓடவேண்டிய வேளைகளும் உண்டு. போதனையை ஏற்றுக்கொள்ளும் மென்மையான உள்ளத்திற்கு எப்பொழுதும் தரித்து நிற்க வேண்டும், எப்பொழுது முன்னேறிச் செல்லவேண்டும், எப்பொழுது ஓடவேண்டும், என்பது தெரியும்.

உண்மையுள்ள இருதயமுள்ளவர்கள் ஒரு தீர்மானத்திற்குள் வருவர். பிறர் தன்னைக் குறை கூறினாலும், தேவனுடைய சித்தம் இன்னதெனத் தெளிவாக உணர்ந்த ஒருவன் முன்னேறிச் செல்வான். சில வேளைகளில் அவனுக்கு ஆலோசனைகள் குறைகூறுபவரிடமிருந்தும் அல்லது அவனது நல்வாழ்வில் அக்கறை கொண்டோரிடமிருந்தும் கிட்டலாம். அந்த வழியாகப் போகாதே, அந்த அழைப்புக் இணங்கிச் செல்லாதே, அந்தக் காரியத்தில் கூட்டுச் சேராதே, நீ இருக்கிறபடியே இரு, என்றெல்லாம் நம்மைப்பற்றி, நன்கு அறிந்த, தேவனுக்கு ஏற்றவிதமாக நம்மை நடத்த விரும்புவோர் ஆலோசனை கூறுவர்.

இப்படிப்பட்ட ஆலோசனைகள் நல்ல நோக்கத்துடன் கூறப்பட்டிருப்பினும், தேவனுடைய சித்தத்திற்கு முரணாக இருக்கலாம். அப்பொழுது நமக்கு நீதிமொழிகள் 4:12ல் கூறப்பட்ட வாக்குத்தத்தம் இனிமையாகத் தோன்றும். அவர் உன்னைக் கூப்பிட்டு உடனடியாகத் தீர்மானம் செய்யும்படி அழைத்தால் தயங்காமல் செய்! உன் உள்ளத்தில் தேவசமாதானம் குடி கொண்டிருக்குமாயின், உன் முழு இருதயத்தையும் தேவனுக்கென ஒப்புவித்திருப்பாயாயின் உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை. நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். செவ்வையான பாதையில் அவர் உன்னை நடத்துவார்!