January

ஐனவரி 6

….. அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோ.5:5).

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றுள்ள நாம், தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம் (ரோ.5:1-2). அதுபோல் உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோமா? (வச.3).

உபத்திரவங்களினாலே நமக்கு மகிழ்ச்சி கிட்டாது. ஆனால் முடிவில் அது நமக்கு ஆதாயத்தையே கொடுக்கும். நம்மில் உள்ள பயனற்ற உமியை நீக்கி பயனுள்ள கோதுமை மணியைப்போன்று, ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்விற்கென்றே நம்மை உபத்திரவங்கள் நசுக்குகின்றன.

உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. இது எப்படிப்பட்ட நம்பிக்கை? முற்காலத்தில் தம்முடைய மக்களுக்கு தேவன் செய்த யாவற்றையும் வேதம் நமக்கு கூறுகிறது. பலருடைய வாழ்க்கை வரலாறுகளும் இதை அறிவிக்கிறது. நம்முடைய கடந்தகால வாழ்வில் நாம் எவ்வளவு நன்மைகளை அவரிடமிருந்து பெற்றுள்ளோம். அவர் இன்னும் அப்படியே செய்வார் என்பதுதான் அந்த நம்பிக்கை.

அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது எனக் கூறுவது ஏன்? நாம் வெட்கப்படுவதில்லை. ஏனெனில், இந்த நம்பிக்கையின் மூலமாக தேவ அன்பு நம் உள்ளங்களில் நிறைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையானது ஒருவனும் மறக்கப்படவில்லை எனவும், கைவிடப்படவில்லை என்று உறுதி கூறி, சோர்ந்துபோன ஆவியைத் தட்டி, எழுப்பி மெதுவாகப் பாடும் தன்மையுடையது. அவரது சிட்சையினால் நாம் துக்கப்படாமல் சந்தோஷப்படுவோம். ஏனெனில், அவர் நம்மை உண்மையாகவே ஒழுங்குப்படுத்துகிறார் என்று மேன்மை பாராட்டுவோம். அவரில் நம்பிக்கை வைப்போமாகில் நாம் வெட்கப்படவே மாட்டோம்.