February

பெப்ரவரி 28

பெப்ரவரி 28

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை…. தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் (2.தெச.3:3)

இந்த வாக்குத்ததம் கிறிஸ்துவுக்குள் வந்த அன்றைய புதிய விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் அறியாமையிலும், விக்கிரக வழிபாட்டிலுமிருந்து விடுதலை பெற்று சுவிசேஷமாகிய ஒளியினிடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் கிறிஸ்தவ வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் குறித்து கவலைப்படுவது இயல்பு. இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினால் இரட்சிப்புக்குள் வந்த அவர்களுக்கு வேத அறிவு குறைவாகவே இருந்தது. அவர்களைச் சுற்றிலும் ஆபத்துக்களும், இக்கட்டுகளுமே சூழ்ந்திருந்தது. இரட்சகரை விரோதிக்கிற மக்களால் பெரும் எதிர்ப்பையும், பகையையும் சம்பாதித்தனர் (2.தெச.1:4). அவர்களுக்குள்ளே கலக்கமும், சஞ்சலமும் நிறைந்து இருந்தது. (2:2). வேலையற்று சோம்பேறிகளாக சிலா திரிந்துகொண்டு கிறிஸ்துவின் நாமத்திற்கு இழிவை உண்டு பண்ணினார்கள் (3:6,15).

இப்படிப்பட்ட பல தடைகளுக்குட்பட்டு, துன்பப்பட்ட தெசலோனிக்கேயர் பட்டணத்துக் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் முன்னேறிச் சென்று வரும் நாட்களில் துன்பப்படும் மற்ற கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு மாதிரியாக இருக்க முடியும்? தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் இருப்பார்கள் (.கொரி.15:58). அவர்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும், கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (2.தெச.3:5). இதுவே நம்முடைய நம்பிக்கையாகவும், இளம் விசுவாசிகளின் நம்பிக்கையாகவும், திராணிக்கு மேலாக சோதிக்கப்படுகிறவர்களின் நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். கர்த்தர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.