April

ஏப்ரல் 26

ஏப்ரல் 26

‘யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் உனக்கு வெளிப்படுத்துவதில்லை. பரலோகத்தில் இருக்கிற பிதா உனக்கு இதை வெளிப்படுத்தினார்.” (மத் 16:17).

பேதுரு ஒரு சாதாரண மனிதன். இந்த எளிய மீன்பிடிக்கிற மனிதனை கிறிஸ்து மனுஷரைப் பிடிக்கிறவனாக மாற்றினார். அவனைப் படிப்பறியாதவன் என்றும், பேதமையுள்ளவன் என்றும், வேதபாரகர் அறிந்திருந்தனர் (அப் 4:11). ஆனால் அவனோ கூர்மையான அறிவு கொண்டவன். மேசியாவைக் குறித்து கேள்விப்பட்ட அவன் உடனே போய் அவரைக் கண்டுகொண்டான். பரிசேயர் நியாயப்பிரமாணத்தைத்தான் அறிந்திருந்தனர். ஆனால் இவனோ ஜீவனுள்ள வார்த்தையானவரையும், மகிமையின் தேவனுமானவரை தெளிவாகக் கண்டுகொண்டான்.

பேதுருவும் மற்றச் சீடர்களும் கல்விகற்காத குழந்தைகளைப் போன்றும், உலக ஞானம், அறிவு, சூது இவற்றிற்குத் தூரமானவர்களாயுமிருந்தனர். ஆனால் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிந்திருந்தனர்.

பேதுருவால் தவறே செய்யாமல் வாழமுடியுமென்று தானோ, அல்லது மற்றச் சீடர்களோ, ஏன் ஆண்டவரே, வேதவசனங்களோ கூறவில்லை? ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டபோதும் அதற்கு முன்பும் பேதுரு அநேக தவறுகளைச் செய்துள்ளான். ஏன்! பெந்தக்கோஸ்தே நாளுக்குப் பின்பு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையைப் பொழிந்தபின்பும் தவறியுள்ளான். கிறிஸ்தவரின் உரிமைகளில் தலையிட்டு தவறான கருத்தைப் பரப்பினான். இதையே பவுல், பேதுரு அந்திரேயாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றச் சுமந்ததினால் நான் முகமுகமாய் அவனோடு எதிர்த்தேன்……. சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு ஏற்றபடி சரியாய் நடவாதபடி நான் கண்டேன் (கலா 2:11,14) என்கிறார்.

நம்முடைய இருதயத்தில் நாம் ஆவியானவரின் நிறைவைப் பெற்றிருக்கலாம். ஆயினும் சத்தியத்திற்கு ஏற்றபடி சரியாக நடவாமல் தவறுவதுண்டு. தவறாக கருத்துக்களை நாம் கொண்டிருப்பினும், உண்மையுள்ள இருதயத்தில் தேவன் தமது ஆவியை கூற்றுகிறார். ஆண்டவர் யார் என்பதை பேதுருவுக்குப் பிதாவானர் வெளிப்படுத்தியுள்ளார். நமக்கும் வெளிப்படுத்தியுள்ளாரா?