April

ஏப்ரல் 21

ஏப்ரல் 21

கர்த்தாவே உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன் (சங்.119:75).

கிருபை நிறைந்த தேவன், மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துகிறதில்லை (புல.3:33) என்று எரேமியா தீர்க்கதரிசி ஆவியினால் ஏவப்பட்டு எழுதியுள்ளார். தேவனுடைய நியாயத்தீர்ப்பில் அவரது மிகுந்த இரக்கத்தைத் தம் அனுபவத்தில் கண்டுள்ளார். சர்வ வல்லமையுள்ள தேவன் தமது பிள்ளைகளைத் திருத்தியமைக்கிறார். அவர்களைத் துன்பப்படுத்தி சீர்ப்படுத்த வேண்டும் என்று விரும்புவதில்லை. பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்பதனை அறிந்த அவர் தம் பிள்ளைகளின் நன்மைக்கென அவர்களைத் தண்டிக்கிறார்.

எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும் (எபி.12:11) என வேதம் கூறுகிறது. கிருபையுள்ள தேவன் எவ்வித நோக்கமுமின்றி தண்டிப்பதில்லை. கர்த்தர் எவனிடம் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார் (எபி.12:6) எனவும், ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் (எபி.12:11) எனவும் நாம் வேதத்தில் காண்கிறோம்.

சிட்சிக்கப்படுகிற ஆத்துமா பலப்படுத்தப்படுகிறது. இனிமையுள்ளதாக்கப்படுகிறது. சங்கீதக்காரனைப்போன்று, நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறேன் (சங்.119:71) எனக் கூறும் அனுபவத்தினைப் பெறலாம். சோர்ந்துபோன ஆத்துமாவே திடன்கொள்! உன்னுடைய உபத்திரவங்களால் தேவன் உண்மையுள்ளவராகவும், அன்புகூருகிறவராகவும் இருக்கிறார் என அறியலாம். இதனால் முடிவில் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது உறுதி.