March

கோபம் கொள்ளாமை

2024 மார்ச் 19 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,40 முதல் 43 வரை)

  • March 19
❚❚

“இதற்காக நீங்கள் கோபிப்பானேன்” (வசனம் 42).

தாவீது யோர்தானைக் கடந்து கில்காலுக்கு வந்தான். யூதா கோத்திரத்தார் ராஜாவை முதலாவது வரவேற்று அழைத்துச் செல்லவேண்டும் என்பதில் மும்முரமாயிருந்தார்கள். ஆனால் தங்கள் சகோதரராகிய பிற இஸ்ரவேல் மக்கள் இதைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறினார்கள். இஸ்ரவேலர் வந்து, “எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்து வந்தது என்ன?” என்னும் கேள்வியை ராஜாவினிடத்தில் எழுப்பினார்கள். ராஜாவை அழைத்து வரவேண்டும் என முதலில் பேசத் தொடங்கியது நாங்கள் தாம், ஆனால் இப்பொழுது நாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணருகிறோம் என்னும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். திருச்சபைகளில், நாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணருகிறோம் என்று சொல்வார்களெனில் அதை ஒரு தீவிரமான பிரச்சினையாகக் கருதி சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அது வெறுப்பாகவும், பிரிவினையாகவும் மாறிவிடும். ஆதித் திருச்சபையில் கிரேக்க விதவைகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்ற உணர்வு எழுந்தபோது, அப்போஸ்தலர்கள் உடனடியாகச் செயல்பட்டு அதைச் சரிப்படுத்தினார்கள் என்பதை அறிந்திருக்கிறோம் (அப்போஸ்தலர் 6,1 முதல் 3).

தாவீது எங்கள் இனத்தான், ஆகவே நாங்கள் அவனை முதலாவது வரவேற்றோம், நீங்கள் பிந்திவிட்டீர்கள், இதிலே கோபங்கொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதே யூதா கோத்திரத்தாரின் அலட்சியமான பதிலாக இருந்தது. இவர்களது பதில் அவர்களைச் சாந்தப்படுத்துவதைக் காட்டிலும் மனதுக்குள் பகை வளருவதற்கேதுவாகவே இருந்தது. என் விசுவாசத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் இருக்கலாம், ஒருவேளை அது தகுதியானதாகவும் இருக்கலாம். அதேவேளையில் ஒரு பெலவீனமான விசுவாசியையும், இளம் விசுவாசிகளையும் கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும் என்பதே பவுல் கொரிந்து சபையாருக்குச் சொன்ன ஆலோசனை. எந்தவொரு விசுவாசியும் விசுவாச வாழ்விலிருந்து விலகிச் செல்வதற்கு நாம் காரணமாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

யூதாவின் மனிதர் ராஜாவை முந்தி வரவேற்றுக்கொண்டனர் என்பதற்காக இஸ்ரவேலர் கோபங்கொள்வதும் நியாயமான காரணமன்று. பல நேரங்களில் நாம் சிறிய காரியங்களுக்காக எளிதில் கோபம் அடைகிறோம் என்பதும் மெச்சிக்கொள்ளக்கூடியதன்று. பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும், சிலுவைக்கு அனுப்பப்பட்ட ஒருவரை நாம் கர்த்தராக ஏற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். அவர் தாழ்மையோடும், பொறுமையோடும் பிதாவின் சித்தத்திற்குத் தம்மை ஒப்புவித்ததுபோல நம்மையும் ஒப்புவிப்போம். யார் முந்தி வரவேற்க வேண்டும் என்பன போன்ற பெருமைக்குரிய காரியங்களுக்காக நாம் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். செபதேயுவின் குமாரர் யோவானும் யாக்கோபும் ஆண்டவரின் வலதுபாரிசத்தில் அமர வேண்டும் என்னும் ஆசை சுயநலமுள்ளதாயிருந்தாலும், பிற சீடர்கள் அதைக் குறித்து எரிச்சல் அடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் உடன் சீடரும், சகோதரருமாகிய அவர்கள் இத்தகைய மேன்மையை அடையப்போகிறார்கள் என்பதற்காக மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். பிதாவே, எங்கள் உடன் சகோதரர் உயர்த்தப்படும்போது, நாங்கள் சங்கடப்படாமல் சந்தோஷப்படும்படி கிறிஸ்துவின் சிந்தையால் எங்களை நிரப்புவீராக, ஆமென்.