March

பிறர் நலன் நாடுதல்

2024 மார்ச் 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,31 முதல் 39 வரை)

  • March 18
❚❚

“இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்” (வசனம் 37).

தாவீது எருசலேமுக்கு மீண்டும் ராஜாவாகத் திரும்பி வருகையில் நடைபெற்ற நிகழ்வுகள், அதாவது சீமேயிக்கு மன்னிப்பு, மேவிபோசேத்துக்கு நீதி வழங்குதல், பர்சிலாவுக்கு வெகுமதி வழங்குதல் போன்றவை நம்முடைய ஆண்டவருடைய இரண்டாம் வருகையில் நடைபெறப் போகிற காரியங்களுக்கு ஒத்ததாக இருக்கின்றன. தாவீது அப்சலோமுக்குத் தப்பி ஓடி வருகையில் கீலேயாத்தைச் சேர்ந்த பர்சிலா என்னும் முதியவன் மக்னாயீமில் வைத்து அவனைப் பராமரித்தான். இதற்கு வெகுமதியாக நீ என்னோடு வா, நான் உன்னை எருசலேமில் வைத்துப் பராமரிப்பேன் என்று தாவீது கூறுகிறான். தனக்கு மனபூர்வமாக நன்மை செய்த இந்த பர்சிலாவை தாவீது ஒருபோதும் மறந்துபோக விரும்பவில்லை. அவ்வாறே நாமும் மறந்துபோகாமல் இருப்போம். மேலும் “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவ ரல்லவே” (எபிரெயர் 6,10) என்று புதிய எற்பாடு நமக்கு உற்சாகமூட்டுகிறபடியால் நாம் சோர்ந்து போகாமல் பிறருக்கு நன்மை செய்வோம்.

பர்சிலா கீலேயாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு செல்வந்தன். அவன் தாவீதுக்கு ஒருபோதும் கடன்பட்டவன் அல்லன். ஆயினும் ஆபத்தில் வந்த தாவீதுக்குப் பல உதவிகள் செய்தான். அவன் ஆண்டவர் கூறிய மதியீனனான செல்வந்தனைப் போல இராமல், “தனக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்காமல், தேவனிடத்தில் ஐசுவரியவானாயிருக்கும்படி” ஞானமுள்ள காரியத்தைச் செய்தான் (லூக்கா 21,12). இதற்கான வெகுமதியாக எருசலேமில் அரண்மனையில் தங்கும்படியான வாய்ப்பைப் பெற்றான். நம்முடைய பொக்கிஷங்கள் எங்கே சேர்த்துவைக்கப்படுகிறது, யாருக்காகச் செலவிடப்படுகிறது என்பதைக் குறித்து சிந்திப்போம். நாம் பரலோகத்தில் செல்வந்தர்களாக இருப்பதற்கான காரியங்களை இப்பொழுதே செய்யப் பழகுவோம். அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது என்று ஆண்டவர் கூறியதை நினைத்துக் கொள்வோம்.

வயது முதிர்வு, உறவினர்மீதுள்ள பாசம் ஆகியவற்றின் காரணமாக, தனக்கு கிடைத்த அரண்மனை சுகவாசத்தை தன் மகன் கிம்காமுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு பர்சிலா சொந்த ஊருக்குச் திரும்பிச் சென்றுவிட்டான். தந்தையால் கிடைக்கப்பெற்ற ராஜாவின் பிரசன்னத்தில் வாழும் வாழ்வை கிம்காம் பெற்றுக்கொண்டான். “பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசு கிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” (எபேசியர் 1,5 முதல் 6) என்று நாம் பெற்றிருக்கிற சிலாக்கியத்தை பவுல் வியந்து கூறுகிறார். தாவீது தன் அந்திய காலத்தில், “கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக” (1 ராஜாக்கள் 2,7) என்று சாலொமோனிடம் கூறினான். மேலும், கிம்காமின் சந்ததியார் ஆண்டவர் பிறந்த பெத்லேகேமில் வழிவழியாய் வசித்து வந்தார்கள் (காண்க: எரேமியா 41,18). பிதாவே, நாங்கள் உம்முடைய நாமத்தினிமித்தம் நன்மை செய்யவும், எங்களுக்கு வரும் ஆசீர்வாதத்தை அடுத்த தலைமுறை மக்களுக்கு விட்டுச் செல்லவும் உதவி செய்தருளும், ஆமென்.