ரோமர் – அதிகாரம் 8
1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்.
28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
31 இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
ரோமர் – அதிகாரம் 9
1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
3 மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.
8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.
10 இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
13 அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
16 ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
19 இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
20 அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
24 அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
25 அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
26 நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
27 அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;
28 அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
ரோமர் – அதிகாரம் 10
1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
5 மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
6 விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?
7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;
8 இந்த வார்த்தை எனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவாகள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள் சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
16 ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.
18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள், அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
21 இஸ்ரவேலரைக் குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.