அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 21
1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,
2 அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம்.
3 சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.
4 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
5 அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
6 ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
7 நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.
8 மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.
9 தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
10 நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளψயும் கால்களையும் கட்டிக்கொΣ்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
12 இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
13 அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
14 அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம்.
15 அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
16 செரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
18 மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
19 அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.
20 அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
21 புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
22 இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.
23 ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால். பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள்.
24 அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
25 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.
26 அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.
27 அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:
28 இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
29 எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனை தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.
30 அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
31 அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது.
32 உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.
33 அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யாரென்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
35 அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
36 இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
37 அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?
38 நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.
39 அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
40 உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 22
1 சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான்.
2 அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்:
3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
5 அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன்.
6 அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது.
7 நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
8 நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
9 என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
10 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
11 அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
12 அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
13 என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக்கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
18 அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
19 அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும்,
20 உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
21 அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
22 இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
23 இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில்,
24 சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விடுவிக்கச் சொன்னான்.
25 அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக்கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான்.
26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.
27 அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
28 சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ அந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான்.
29 அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான்.
30 பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனை சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 23
1 பவுல் ஆலோசனை சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே இந்நாள் வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
2 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
3 அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
4 சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை வைகிறாயா என்றார்கள்.
5 அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
6 பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒருபங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று சத்தமிட்டுச் சொன்னான்.
7 அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது.
8 என்னத்தினாலென்றால் சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
9 ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள்.
10 மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
11 அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமில் சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
12 விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்.
13 இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள்.
14 அவர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம்பண்ணிக்கொண்டோம்.
15 ஆனபடியினால் நீங்கள் ஆலோசனை சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.
16 இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான்.
17 அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியமுண்டு என்றான்.
18 அந்தப்படியே அவன் இவனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய் காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான்.
19 அப்பொழுது சேனாபதி அவனுடைய கையைப் பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான்.
20 அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்கமனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனை சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள்.
21 நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேர்க்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான்.
22 அப்பொழுது சேனாபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்தாக ஒருவருக்குஞ் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்.
23 பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்;
24 பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி,
25 ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது:
26 கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
27 இந்த மனுஷனை யூதர் பிடித்துக்கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
28 அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனை சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன்.
29 இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன்.
30 யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
31 போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய்,
32 மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
33 அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன்முன்பாக நிறுத்தினார்கள்,
34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:
35 உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.